ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ்/இணைபாடத்திட்டச் செயல்பாடுகள்/பல்லுயிர் பூங்கா

பல்லுயிர் பூங்கா

 

அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி முற்றத்தில் அலங்காரமாகவும், கவர்ச்சிகரமாகவும் நிற்கின்ற ஒரு பூங்காவனமாகும் நமது பல்லுயிர் பூங்கா. பட்டாம் பூச்சிகளை கவர்ந்து இழுக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்தோடு மட்டுமே இதனை உருவாக்கியுள்ளோம். ஆசிரியர்களின் கடின உழைப்புடையவும், குழந்தைகளின் ஒத்துழைப்பினுடையவும், ஒற்றுமையினுடையவும் சான்றாகத் திகழ்கிறது இங்குள்ள பல்லுயிர் பூங்கா.

நோக்கங்கள்

  • பட்டாம்பூச்சிகளை வரவேற்றல்.
  • குழந்தைகளைக் கவருதல்.
  • குழந்தைகளில் விவசாயத்தை ஊக்குவித்தல்.
  • மூலிகைத் தாவரங்களின் முக்கியத்துவத்தைக் குழந்தைகளுக்கு அறியச் செய்தல்.
  • பசுமையான பள்ளிச் சூழ்நிலையை உருவாக்குதல்.
  • இயற்கையை உற்று நோக்கி அதன் முக்கியத்துவத்தை குழந்தைகள் உணர வாய்ப்பளித்தல்.

பூந்தோட்ட அலங்காரர்கள்

விலை கொடுத்து வாங்குகின்ற செடிகளல்ல பூந்தோட்டத்தில் அழகு சேர்ப்பது. மாறாக நாட்டுப்புறங்களிலும், கிராமங்களிலும் நிற்கின்ற பூக்களே நமது பல்லுயிர் பூங்காவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. நேரில் பார்க்கும்போது கண்களைக் குளிரச் செய்கின்றது. தெச்சி, கோளாம்பி, மந்தாரம், கற்றாழை, நந்தையார் வட்டம், துளசி, செம்பருத்தி, பத்து மணிப்பூ, நாலு மணிப்பூ, தாமரை, ஆம்பல், ரோஜா, மல்லிகை, மூக்குத்தி, செண்டு மல்லி, காட்டுச்செண்டுமல்லி, தும்பை, கற்பூரவள்ளி, வாடாமல்லி, மூக்குத்தி போன்ற பல்வேறு செடிகள் பல்லுயிர் பூங்காவிற்கு அலங்காரமாக நிற்கின்றன. பல்லுயிர் பூங்காவின் நடுவிலாக ஒரு தாமரைக் குளமும் அமைக்கப்பட்டுள்ளது. குளத்தில் தாமரைச் செடி வண்ணமயமாக நிற்பதைக் காண கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. அது மட்டுமல்ல தாமரைக்குளத்தில் வளர்க்கின்ற மீன் குஞ்சுகளும் தோட்டத்தை உயிரோட்டமுள்ளதாக மாற்றுகிறது. தாமரைக் குளத்தைச் சுற்றிலும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது போல பத்து மணிப் பூக்கள் பூத்து நிற்பது கண்ணைக் குளிரூட்டச் செய்கிறது.


விஷமில்லாத காய்கறித் தோட்டம்

 

விஷமில்லாத காய்கறிகளை உணவில் உட்படுத்தும் நோக்கத்துடன் பள்ளியில் ஒரு காய்கறித் தோட்டம் உருவாக்கப்பட்டது. தோட்டத்தில் விளைந்துள்ள காய்கறிகள் பூங்காவின் நடுவே நிற்பது கண்கொள்ளாக் காட்சியாகும். வெண்டைக்காய், தக்காளி, கத்தரிக்காய், பூசணி, முருங்கைக்காய், மிளகாய் போன்ற காய்கறிகள் அவ்வப்போது அறுவடை செய்து பயன்படுத்துவதுண்டு.



உணர்ச்சியூட்டும் பூங்காவனம்

 

பல்லுயிர் பூங்காவின் அமைப்பு கலைநயத்துடன் கூடியமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மண்ணாலான பூத்தொட்டிகள் வரிவரியாக வைக்கப்பட்டுள்ளது. ஒரே தரத்தில் உள்ள பல வண்ணப் பூக்களை உடைய செடிகள் பலவிதமாக வளர்ந்திருப்பது மிகவும் அழகாக உள்ளது. நிறத்தின் அடிப்படையில் இவை நடப்பட்டுள்ளது. இவை பூத்துக் குலுங்கும் போது தனி அழகுதான். பல வண்ணங்களிலுள்ள செம்பருத்தி, பத்து மணிப்பூ, தாமரை, தெச்சி, ரோஜா போன்ற வண்ணப் பூக்களின் சங்கமம் ஏற்படுத்தும் அழகிய சூழல் நம் மனதை மகிழச் செய்யும்படியாக அமைந்துள்ளது. பூந்தோட்டத்தைப் பேணும் பணியில் தோட்டக்கலையில் ஆர்வமுள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு அழகுபடுத்துகின்றனர். எல்லா நாட்களிலும் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சி வருகின்றனர். விடுமுறை நாட்களில் கூட பள்ளிக்கு வந்து தாவரங்களுக்கு நீர்பாய்ச்சி வந்தார் பத்மப்பிரியா என்ற ஆசிரியை.

மனித வாழ்வில் தாவரங்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். தாவரங்களுக்கும், சிறுசிறு உயிரினங்களும் மனிதனைப் போலவே எல்லா உரிமைகளுடன் வாழ இயற்கையால் படைக்கப்பட்டனவாகும் என்ற நல்ல கருத்தினை இப்போதே பிள்ளைகளின் மனதில் ஏற்படுத்த இப்பூங்கா செயல்திட்டம் பெரிதும் உதவுகிறதென்றால் அது மிகையன்று. குழந்தைகள் தங்களுடைய வீட்டு நின்றும் கிடைக்கின்ற நாட்டுப்புறப் பூச்செடிகளை பள்ளி தோட்டத்திற்கும் கொண்டு வந்து நட்டு வைக்கின்றனர்.