ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2019-20
|
2019- 20 கல்வி ஆண்டின் நுழைவு விழா ஜூன் 6ஆம் நாள் வியாழக்கிழமை அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் மிக அற்புதமாக நடைபெற்றது. கல்வி கற்க ஆர்வமாக வந்துள்ள குழந்தைகளை புன்னகையோடு வரவேற்கவே இத்திருவிழா. ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட வண்ணக் காகிதங்களாலான பட்டாம்பூச்சிகளால் தோரணங்கள் கட்டப்பட்ட விதம் அழகுக்கு அழகு சேர்த்தது. எதிர்காலத் தூண்களை உருவாக்கும் நம் பள்ளி நுழைவு விழா கொண்டாட்டத்தின் நோக்கம் புகழின் சிகரத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதாகும். ஒவ்வொரு வருடமும் நுணுக்கமான முறைகளை காலத்திற்கேற்றவாறு கையாளுவது இந்தப் பள்ளி ஆசிரியர்களின் தனித்திறமை ஆகும். காலை 9.30 மணி அளவில் வார்டு கவுன்சிலர் திரு. சிவக்குமார் அவர்கள் நுழைவு விழாவினை துவக்கி வைத்தார். முன் துவக்கப்பள்ளி மற்றும் ஒன்றாம் வகுப்பிற்கு புதியதாக வந்து சேர்ந்த குழந்தைகளை எழுத்து கிரீடம் அணிவித்து வரவேற்றோம். இக்கிரீடம் அணிந்த குழந்தைகளை பார்க்கும் பொழுது எதிர்காலத்தின் சிற்பிகள் என்ற நினைவு நம்முள் மலரச் செய்தது. வார்டு கவுன்சிலர் திரு. சிவக்குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி அறிவுச்சுடரை தரும் நுழைவு விழாவை சிறப்பித்தார். மேலும் வார்டு கவுன்சிலர் திரு. சுவாமிநாதன் அவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. கே. பி ரஞ்சித் அவர்கள், தலைமை ஆசிரியை திருமதி ஷைலஜா என்.கே அவர்கள் போன்ற அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.திரு.சிவக்குமார் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துரை வழங்கினார். முதலமைச்சர் பள்ளி குழந்தைகளுக்காக எழுதிய கடிதத்தை தலைமை ஆசிரியர் வாசித்தார். பிஞ்சுக் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் நோட்டுப்புத்தகம், பென்சில், கலர் பென்சில் போன்றன வழங்கப்பட்டது. ஜுன் 5, சுற்றுப்புற தினம் ஆனதால் அதைக் கொண்டாடும் விதமாக குழந்தைகளுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
வரவேற்க மிக்கி மௌசும், பியரும்
இவ்வருட நுழைவு விழாவின் தனிச்சிறப்பு என்னவென்றால், முன் வாசலில் குழந்தைகளை வரவேற்கும் மிக்கி மெளசும், பியரும். குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான நண்பர்கள் அல்லவா இவர்கள். நுழைவு விழாவை சிறப்பிக்கவும், பள்ளி முற்றத்திற்கு குழந்தைகளை புன்னகையோடு அழைத்து வருவதற்கு மான ஒரு தந்திரமே மிக்கி மெளசும் பியரும். இது குழந்தைகளுக்கு திருமதி. சுப்ரபா ஆசிரியை அவர்களுடைய பரிசாகும். குழந்தைகள் அனைவரும் மிக்கி மெளஸ் மற்றும் பியரோடு சேர்ந்து நிறைவு விழாவை ஆரவாரத்தோடு கொண்டாடினர். மிக நல்ல ஒரு துவக்கமாக இருந்தது இவ்வருடத்தின் நுழைவு விழா.
- கூடுதல் புகைப்படங்கள் - பள்ளி நுழைவு விழா- 2019
- காணொளி காண்போம் -*பள்ளி நுழைவு விழா 2019- 20
அய்யங்காளி நினைவுதினம்
அய்யங்காளி நினைவுதினமான ஜூன் 18 ஆம் தேதி சமூக சீர்திருத்தவாதியான அய்யங்காளியைப் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அவர் கேரளத்திற்கு அளித்த மகத்தான சேவைகளைப் பற்றிப் புரிந்துகொள்ள முடிந்தது.
வாசிப்பு தினம்
பி.என் பணிக்கரின் நினைவு நாளான ஜூன் 19ஐ நாம் வாசிப்பு தினமாக கொண்டாடுகிறோம். அனைத்து வகுப்பு மாணவர்களும் ஒன்று சேர்ந்து சிறப்பாக கொண்டாடினோம். பி.என் பணிக்கருடைய வாழ்க்கை வரலாறு, வாசிப்புக் குறிப்பு, வினாடி வினா போன்ற வாசிப்பைப் போற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஓய்வுபெற்ற மலையாள ஆசிரியரும், குழந்தை நலக்குழு செயலாளருமான திரு. குரியக்கோஸ் அவர்கள் வாசிப்பு வாரத்திற்கு தொடக்கமிட்டார். அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு வாசிப்பு என்றால் என்ன? சிறு குழந்தைகள் எவ்வாறு வாசிப்பு தொடங்க வேண்டும்? வாசிப்பின் முக்கியத்துவம் என்ன? போன்ற வினாக்களுக்கான பதிலை மிகத்தெளிவாகவும், குழந்தைகளுக்கு புரியும்படியும் எடுத்துக் கூறினார். எல்லா வகுப்பு குழந்தைகளும் மிக ஆர்வத்துடன் வாசிப்பு தினக்கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். எதிர்கால தலைமுறையினரான நமது குழந்தைகள் வாசிப்பை வாழ்க்கையின் கடைசி வரையிலும் வலுவாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும், வாசிப்பு நமது மிகச்சிறந்த நண்பனாக மாற வேண்டும் என்றும் திரு. குரியக்கோஸ் அவர்கள் கூறினார். மேலும் தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் வாசிப்பு தினத்தின் முக்கியத்துவத்தை எளிமையாகக் கூறி, வாசிப்பு வாரத்திற்கு தொடக்கமிட்டார்.
புத்தகக் கண்காட்சி
வாசிப்பு வாரத்தின் பாகமாக நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சி மிக நன்றாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவதுண்டு. நான்காம் வகுப்பு குழந்தைகளால் பலவிதமான புத்தகங்களின் ஒரு அற்புத கண்காட்சி நடத்தப்பட்டது. அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி நூலகத்திலுள்ள புத்தகங்களை அறிமுகப்படுத்தவும், நல்ல வாசிப்பாளராக மாற்றுவதற்கும் உள்ள முதல் படியே இந்த புத்தகக் கண்காட்சி. ஒரு வகுப்பு நிறைய பலவித புத்தகங்களைக் கொண்டு கண்ணுக்கு விருந்தளித்தனர் எங்கள் குழந்தைகள். இது ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது என்பதுவே உண்மை. ஆசிரியையான திருமதி. கீதா அவர்களின் தலைமையில் புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.
- கூடுதல் புகைப்படங்கள் - வாசிப்பு தினம்- 2019
யோகா தினம்
ஜூன் 21, யோகா தினத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியிலுள்ள அனைத்து குழந்தைகளையும் யோகாவிற்கு வழி நடத்துவதே எங்களது நோக்கம். யோகா மிக நல்ல மருந்தும், அறிவும், கலையும் ஆகும் என்ற உண்மையை குழந்தைகளுக்கு உணர்த்துகின்ற ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. புகழ்பெற்ற யோகா பயிற்சியாளரான திரு. பிரவீண் அவர்கள் யோகா தினம் தொடங்கி வைத்தார். மாறிக் கொண்டிருக்கின்ற நமது வாழ்க்கை பழக்கவழக்கங்களால் நம்மை தாக்குகின்ற நோய்களை விரட்ட இப்பூமியிலுள்ள ஒரே ஒரு மருந்து யோகாவாகும் என்று அவர் கூறினார். கடந்த சில வருடங்களாக நமது பள்ளியில் யோகா பயிற்சி நல்ல முறையில் பயிற்றுவித்து வருவதால் யோகாவைப் பற்றிய சில பாடங்கள் இங்குள்ள குழந்தைகளுக்கு தெரிந்திருந்தது. ஒவ்வொரு யோகா பயிற்சியும் எப்படி செய்ய வேண்டும் என்று என்றும், அதன் பலன்கள் என்னென்ன என்பதை பிரவீன் அவர்கள் விவரிக்கும் போது, அவருடன் வந்த திரு. ராகுல் அவர்கள் யோகாப் பயிற்சிகள் செய்து காண்பித்தார். குழந்தைகளுக்கும் அதேபோல செய்வதற்கான வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. யோகா என்பது ஒருபோதும் முடிவுறுவதில்லை. அது வாழ்க்கை முழுவதும் கொண்டு சென்றால் மட்டுமே அதனுடைய முழுமையான பலன் கிடைக்கும் என்று திரு.பிரவீண் அவர்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்திக் கொண்டு யோகாப் பயிற்சியை தொடங்கி வைத்தார்.
- கூடுதல் புகைப்படங்கள் - யோகா தினம் - 2019
போதைப்பொருள் எதிர்ப்பு தினம்
ஜூன் 26 ஆம் தேதி மாதிரி காலைக்கூட்டம் போதைப்பொருள் எதிர்ப்பு தினத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது. தலைமையாசிரியை திருமதி.ஷைலஜா அவர்கள் இன்றைய தலைமுறையில் போதைப்பொருளின் உபயோகத்தையும் அதனால் ஏற்படுகின்ற கடுமையான நோய்களைப் பற்றியும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார். போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி அனைவருக்கும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. போதைப்பொருள் எதிர்ப்பு சுவரொட்டி, முத்திரை வாக்கியங்கள் எழுதப்பட்ட அட்டைகள் போன்றவைகள் காலைக்கூட்டத்தில் காண்பிக்கப்பட்டது.
|
வாசிப்பு வாரத்தின் முடிவும், பஷீர் தினமும் ஒரே நாளில் நடத்தப்பட்டது. ஜூலை 5 வெள்ளிக்கிழமை திரு.ஜெயசீலன் அவர்கள் குழந்தைகளிடம் உரையாற்றினார்.பஷீர் அவர்கள் கற்பித்த மனிதகுலத்தின் மதிப்புகளை தன்னுடைய பாடல்களின் வாயிலாக குழந்தைகளுக்கு அறியச் செய்தார். மேலும் வித்யாரங்கம், மொழிச்சங்கம் (தமிழ், மலையாளம்) போன்றவற்றின் தொடக்கமும், முன் தொடக்கப்பள்ளி வகுப்பினருக்காக பொதுக்கல்வித் துறை வெளியிட்ட அறிவியல்பூர்வமாக தயாராக்கிய பாடப்புத்தகம் வழங்குதலின் தொடக்கமும் அவர் நிறைவேற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. கே.பி.ரஞ்சித் அவர்கள் இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் வரவேற்புரையும், ஆசிரியை திருமதி. சுப்ரபா அவர்கள் நன்றியுரையும் வழங்கினார். மேலும் பஷீர் தினத்தை முன்னிட்டு, அவரை நினைவூட்டும் விதமாக குழந்தைகள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். கவிதை சொல்லுதல், கதை சொல்லுதல், வருணனைக் குறிப்பு, பதிப்புகள் வெளியிடல், பஷீர் எழுதிய நூலிலிருந்து ஒரு சிறிய நாடகம், பஷீர் கதாபாத்திரங்களின் அறிமுகப்படுத்தல், தமிழர்களின் பெருமைக்குரிய கவிஞரான சுப்பிரமணிய பாரதியாரை அறிமுகப்படுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இது மாணவர்களுக்கு நல்ல ஒரு அனுபவமாக இருந்தது.
- காணொளி காண்போம் -பஷீர் தினம்- 2019
சுதேசி வினாடி-வினாப் போட்டி
8.8.2019 அன்று KPSTA வின் தலைமையில் சுதேசி வினாடி-வினாப் போட்டி நடத்தப்பட்டது. நமது தேசத்தந்தை மகாத்மா காந்திஜியை பற்றி கூடுதல் புரிந்துகொள்ள இதனால் முடிந்தது. இப்போட்டியில் முதலிடம் இரண்டாவது இடம் பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
யுரேகா அறிவியல் திருவிழா
யுரேகா அறிவியல் திருவிழா 12.8.2019 அன்று பள்ளி அளவில் நடத்தப்பட்டது. 20 குழந்தைகள் உபமாவட்ட போட்டியில் போட்டியிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான செயல்பாடுகளை விளக்கிக் கொடுக்கப்பட்டது.
அறிவியல் குழு துவக்க விழா மற்றும் சந்திர தினம்
மனித குலத்தின் மாபெரும் வெற்றிக்கு ஐம்பது வயது. மனிதன் சந்திரனில் அடி எடுத்து வைத்த வரலாற்று சாதனையை நினைவுபடுத்திக் கொண்டு சந்திர தினத்தை மிக விமரிசையாக கொண்டாடினோம். அரசு விக்டோரியா உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியரான திருமதி. ரோஷ்ணா அவர்கள் குழந்தைகள் மனதில் அறிவியல் மனப்பான்மை வளர்வதற்கான அடிப்படையிட்டு, அறிவியல் குழுவைத் துவங்கி வைத்தார். மெழுகுவர்த்தியை சூடாக்கும் போது ஏற்படுகின்ற விந்தையான மாற்றத்தையும், பொட்டாசியமும், கிளிசரினும் சேரும்போது தீப்பிடிக்கும் வினையையும் குழந்தைகளை உற்று நோக்கச் செய்து, நமது அன்றாட வாழ்வில் அறிவியலின் இன்றியமையாமையை உணர்த்தினார் திருமதி. ரோஷ்ணா அவர்கள். மேலும் பல்வேறு ஆர்வமூட்டும் சோதனைகளும் செய்து காண்பித்து அதற்கான விளக்கங்களும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. முதன் முதலில் சந்திரனுக்குச் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் போன்றவர்களது வேடமணிந்து வந்த குழந்தைகள் தங்களை சுய அறிமுகம் செய்தனர். அந்தப் புகழ்மிக்கவர்களைப் பற்றி கூடுதல் அறிந்து கொள்ள இது பெரிதும் உதவியது. பின்பு ஒவ்வொரு வகுப்பினரும் தயாராக்கிக் கொண்டு வந்த பதிப்புகளை வெளியிட்டனர். நிலாவைப் பற்றிய பாடல்கள் அப்போளா - 11 மற்றும் ராக்கெட்டின் மாதிரிகள் காண்பித்தல், பேச்சுப்போட்டி, விடுகதைகள், வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சந்திர யாத்திரையைக் குழந்தைகள் முன் கொண்டுவர சில வீடியோக்களும் காண்பிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் திருமதி. ஷைலஜா அவர்கள் துவக்க உரையும், ஆசிரியர் திரு . ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் நன்றியுரை கூறினார்.
- காணொளி காண்போம் -சந்திர தினம்- 2019
பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம்
இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம் ஜூலை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு நமது பள்ளியில் நடத்தப்பட்டது. அரசு ஆரம்பப் பள்ளியின் அனைத்து செயல்பாடுகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பெற்றோர்களும் முழுமையாக உறுதுணை அளிக்கின்றனர் என்பது எடுத்தியம்ப வேண்டிய ஒன்றாகும். பள்ளியின் முன்னேற்றச் செயல்பாடுகளிலும் முழுமையாக ஒத்துழைக்கின்றனர் நமது பெற்றோர் ஆசிரியர் சங்கம். இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டத்தில் ஏறத்தாழ 300 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்றனர். தலைமையாசிரியை திருமதி ஷைலஜா அவர்கள் பொதுக்கூட்டத்திற்கு வரவேற்புரை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ரஞ்சித் அவர்கள் தலைமை தாங்கினார். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கற்றலில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், டிவி பார்த்தல் குழந்தைகளது கற்றலை பெரிதும் பாதிக்கிறது என்றும் தலைமையாசிரியை கூறினார். மேலும் எல்.எஸ்.எஸ் தேர்வின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அதற்காக பள்ளியில் மாணவர்களுக்குக் கொடுக்கின்ற பயிற்சிகளையும் தெளிவாக பெற்றோர்களுக்கு விளக்கினார். பின்பு ஏப்ரல் முதல் ஜூலை வரையுள்ள வரவு, செலவு கணக்குகளும், செயல்பாட்டு அறிக்கையும் வாசித்தார். பிறகு பள்ளியின் முன்னேற்றச் செயல்பாடுகளுக்கான கலந்துரையாடலில் பங்கேற்க அனைத்து பெற்றோர்களுக்கும், வாய்ப்பளிக்கப்பட்டது. சில பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளின் கற்றல் காரியங்களிலும், பள்ளியின் முன்னேற்றத்திற்கான காரியங்களிலும் கருத்துக்கள் பரிமாறினர். பிறகு புதிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தேர்வு நடத்தப்பட்டது. முன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவரான திரு. சாமிநாதன் அவர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும், துணைத் தலைவராக திரு. ஸ்ரீஜித் சி.ஐ அவர்களும் எவ்வித எதிர்ப்புக்களும் இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு பெற்றோர் ஆசிரியர் நிர்வாகச் சங்கமும், மதர் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டு, புதிய பெற்றோர் ஆசிரியர் சங்கம் உருவெடுத்தது.
|
ஒவ்வொரு வருடமும் போலவே இவ்வருடமும் ஒற்றுமையோடும், அன்போடும் ஓணவிழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினோம். செப்டம்பர் 6 வெள்ளிக்கிழமை பள்ளியிலுள்ள குழந்தைகளும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம். குழந்தைகளுக்காக விமரிசையான ஒரு ஓணவிருந்து (ஓணசத்யா) தயார் செய்யப்பட்டது. ஓணவிருந்து பள்ளியிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாலையிலேயே அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் பள்ளிக்கு வந்து ஓணவிருந்துக்கான பணிகளில் ஈடுபட்டனர். ஒற்றுமையோடும், கலகலப்போடும் அனைவரையும் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. குழந்தைகளை மாவேலி, வாமனன், புலிகள் போன்ற வேடமணியச் செய்து, பள்ளி வளாகத்தில் ஊர்வலம் நடத்தினோம். அனைத்து வகுப்புகளிலும் உள்ள பூக்களை பார்வையிட முதலில் சென்றனர். பின்பு சமையலறைக்கும் சென்றனர். புலியாட்டம் மிகவும் நன்றாக இருந்தது. பின் குழந்தைகளது கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஓணப்பாடல்கள் பாடி குழந்தைகளும், பெற்றோர்களும் மகிழ்ச்சிப் பெருங்கடலில் மூழ்கினர். மதிய வேளையானதும் அனைவருக்கும் ஓணவிருந்து அளிக்கப்பட்டது. இவ்வருட ஓணக்கொண்டாட்டம் பல புதுமைகள் நிறைந்ததாக இருந்தது. நமது சித்தூர்-தத்தமங்கலம் நகரசபை பிளாஸ்டிக்கை அறவே ஒழித்ததனால், இயற்கையோடு ஒன்றிய கொண்டாட்டமாக இருந்தது. ஓணவிருந்து வாழை இலையிலே பரிமாறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பாயசமும், தண்ணீரும் ஸ்டீல் டம்ளரில் வழங்கப்பட்டது. அதுபோலவே பூக்கோலம் போடுவதற்கும் இயற்கையான பூக்கள் மட்டுமே குழந்தைகள் பயன்படுத்தினர். சாம்பார், கூட்டுகறி, பொரியல், ரசம், மோர், பால்பாயசம், இஞ்சிப்புளி என விதவிதமான உணவு வகைகள் ஓண விருந்தில் பரிமாறப்பட்டது. இவை அனைத்தும் சுவை நிறைந்ததாகவும் இருந்தது. ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும், பெற்றோர்களும் சேர்ந்து ஓணவிருந்தை பரிமாறினர். செல்வச் செழிப்பினுடைய திருவிழாவாகும் ஓணம். இதிலிருந்து வேறுபட்டு ஒற்றுமை, செழிப்பு, அன்பு என இவையாவும் ஒன்று சேர்ந்ததாக இருந்தது எங்களது இவ்வருட திருவோணக் கொண்டாட்டம்.
- காணொளி காண்போம் -திருவோணம்- 2019
நவீன மாற்றங்களை உட்கொண்டு ஒரு பள்ளி தேர்தல்- 2019
19.09.2019 வியாழக்கிழமை பள்ளித் தேர்தல் இனிதே நடந்தது. ஜனாதிபத்தியத்தின் நவீன மாற்றங்களை உட்படுத்தி, சீரான முறையில் ஒரு சிறப்பான பள்ளித் தேர்தலாக இருந்தது. ஏழு மாணவ வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் (EVM ) பயன்படுத்தியே குழந்தைகள் வாக்களித்தனர்.இதற்காக 2 ஸ்மார்ட்போன் பயன்படுத்தினோம். இரண்டு பூத்துகள் அமைத்தோம். ப்ரிசைடிங் ஆபீஸர், போளிங் ஆபிஸர் 1, 2, 3 போன்ற பொறுப்புகளை குழந்தைகளை ஏற்றெடுத்தனர். சரியாக காலை 11 மணிக்கு குழந்தைகள் வாக்களிக்கத் தொடங்கினர். ஒழுங்கான முறையில் தேர்தல் நடைபெற்றது. குழந்தைகளுக்கு இது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. எலக்ட்ரானிக் மெஷின் பயன்படுத்தி வாக்களித்ததும், கை விரலில் மை தடவியதும் குழந்தைகளுக்கு ஜனாதிபத்தியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவே இருந்தது. ஏறக்குறைய இரண்டு மணி நேரம் வாக்களிப்பு நடைபெற்று, ஒரு மணியளவில் முடிவுற்றது.பின்பு ப்ரிசைடிங் ஆபீஸர் தேர்தல் வேலைகளைப் பூர்த்தி செய்து, ஓட்டிங் மெஷீன் ஆபீஸிற்கு கொண்டு வந்தார். தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்களது முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டது. 84 வாக்குகள் பெற்று அகிலேஷ். யு என்னும் மாணவன் பள்ளி மாணவ தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். 79 வாக்குகள் பெற்ற நிரஞ்சன். எம் எனும் மாணவன் இரண்டாவது இடத்தைப் பிடித்தான். மதியம் 2 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
- காணொளி காண்போம் -பள்ளி தேர்தல்- 2019
மலையாள மொழித் தந்தையின் நினைவாக......
மலையாள மொழியை கை பிடித்து உயர்த்திய பெருமை மலையாள மொழியின் தந்தையான துஞ்சத்து இராமானுஜன் எழுத்தச்சன் என்பவரையே சாரும். புராதனக் கவிஞர்களில் சிறப்புற்றவரான எழுத்தச்சனின் நினைவிடத்திற்கு ஜி.வி.எல்.பி பள்ளியிலுள்ள நான்காம் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் களப்பயணம் சென்றது ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது. சித்தூர் மண்ணில் பச்சைப்பசேலென உள்ள வயல் வரம்புகளில் கால்நடையாகவே பயணம் செய்தோம். சோகநாஷினி ஆற்றங்கரையோரம், அக்ரஹாரத் தெருவில் அமைந்துள்ள குருமடம் ஒரு புனிதமான ஆலயம் சூழ்நிலையைத் தந்தது. துஞ்சத்து எழுத்தச்சனுடையவும், அவரது முக்கிய சீடரான எழுவத் கோபாலமேனனுடையவும் சமாதி, எழுத்தச்சன் பயன்படுத்திய நாராயம், அவர் பூஜை செய்துவந்த சாளகிராமம், சிலைகள், அந்த நாராயத்திலிருந்து வெளிவந்த புண்ணிய எழுத்துக்கள் உள்ள ஓலைச் சுவடிகள் போன்றவைகள் யாவும் மிகக் கவனமாக பாதுகாத்து வருகின்றனர். 33 ஆண்டுகள் எழுத்தச்சன் வசித்து வந்த புனித இடமாகும் குருமடம். இச்செய்திகள் யாவும் திரு. நாராயண தாஸ் என்பவர் மாணவர்களுக்கு விளக்கிக் கொடுத்தார். இராமாயணம் ஓதிய ப்ரணீத் என்னும் மாணவனை அவர் பாராட்டினார். துஞ்சத்து எழுத்தச்சனைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு இப்பயணம் மாணவர்களை ஊக்குவித்தது. இப்பயணத்தினால் குழந்தைகள் தங்களது சொந்த நாட்டிலுள்ள வரலாற்றுச் சின்னத்தைப் பற்றி புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.
உல்லாசகணிதம்
ஒன்றாம் வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கணிதத்தின் அடிப்படைத் திறன்களை அறியச் செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு எஸ்.எஸ்.கேயால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்புத் திட்டமாகும் உல்லாசகணிதம். பாடல்கள், கதைகள், பயிற்சித்தாள்கள், விளையாட்டுகள் போன்றனவற்றை உட்படுத்தி கணிதச் செயல்பாடுகள் தயாரிக்கப்படுகிறது. குழந்தைகள் சுயமாகக் கற்பதற்கான வாய்ப்பளிக்கவும், கணிதத்திறன்கள் முழுமையாக கற்பதற்கு வழிவகுக்கிறது என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். 26.09.2019 வியாழக்கிழமை முனிசிப்பல் தல தொடக்கவிழா நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளியில் நடத்தப்பட்டது. வார்டு கவுன்சிலர் திரு. சிவக்குமார் அவர்கள் இவ்விழாவைத் தொடங்கி வைத்தார். தலைமையாசிரியை திருமதி. ஷைலஜா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு. சாமிநாதன் அவர்கள் தலைமை தாங்கினார். BRC கோர்டினேட்டர் திருமதி.ஜீனா அவர்கள் உல்லாசகணிதத்தைப் பற்றிக் கூடுதல் விரிவாகப் பேசினார். திருமதி. சுனிதா ஆசிரியை வாழ்துரையும், திருமதி. ஜெயஸ்ரீ ஆசிரியை நன்றியுரையும் வழங்கினார்கள். வார்டு கவுன்சிலர் திரு. சிவகுமார் அவர்கள் ஆஞ்சலீனா என்னும் ஒன்றாம் வகுப்புக் குழந்தையுடன் சேர்ந்து பூவும் பட்டாம்பூச்சியும் என்னும் விளையாட்டை உல்லாசமாக விளையாடி உல்லாசகணிதத்தை வித்தியாசமான முறையில் தொடங்கி வைத்தார். இதோடு சேர்த்து கணிதச் சங்கத்தையும் துவங்கி வைத்தார். ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளின் கணிதக் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. உல்லாசகணிதம் 34 விளையாட்டுக்கள் ஆறு பிரிவுகளாக 50 மணிநேரம் நடத்தப்பட வேண்டிய செயல்பாடாகும். செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் பாதியாகும் பொழுது முற்றுப்பெற வேண்டும்.
- காணொளி காண்போம் -உல்லாசகணிதம்
வகுப்பு பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்
ஓணத்தேர்வில் குழந்தைகளின் தரத்தைப் பற்றி பெற்றோர்களிடம் கலந்துரையாடுவதற்காக 26.9.2019 அன்று வகுப்பு பெற்றோர் ஆசிரியர்
சங்கக்கூட்டம் நடத்தப்பட்டது.
பள்ளி விளையாட்டு விழா
நமது அரசு விக்டோரியா ஆரம்ப பள்ளியில் 27.09.2019அன்று நடைபெற்ற விளையாட்டு விழா குழந்தைகளுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. 2019 -20 கல்வியாண்டில் பள்ளி விளையாட்டு விழாவில் அனைத்து குழந்தைகளும் நல்ல முறையில் பங்கேற்றனர். முன்துவக்கப் பள்ளிக் குழந்தைகளை விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பதற்காக சில விளையாட்டுகளும் நடத்தப்பட்டது. ஒன்று, இரண்டு வகுப்புக் குழந்தைகளுக்காக 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், ரிலே மற்றும் ஸ்டாண்டிங் ப்ரோட் ஜம்ப் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. மூன்று, நான்கு வகுப்புக் குழந்தைகளுக்காக 50 மீட்டர், 100 மீட்டர், 4x100 மீட்டர் ரிலே, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக ஆசிரியர்களும், பெற்றோர்களும் கூடவே இருந்தனர்.குட்டி விளையாட்டு வீரர்களுக்கு இந்நாள் ஒரு பொன்னாளாக அமைந்தது.
பாடம் 1, வயல்வெளியில்
மகம் நாளில் பாடம்-1, வயல்வெளியில் நிகழ்ச்சியின் பாகமாக வயல்களைச் சென்று பார்வையிட தீர்மானிக்கப்பட்டது. சித்தூர் வால்முட்டியில் உள்ள செல்லன் என்னும் விவசாயியின் வயலிற்கு நாங்கள் சென்றோம். விவசாயத்தையும் மண்ணையும் தொட்டறிய 29.9.2019 வியாழக்கிழமை மதியம் 1:40க்கு பயணம் தொடங்கப்பட்டது. வாய்க்கால் வரப்பு வழியாக நெல்கதிரின் மணம் நுகர்ந்து நாங்கள் நடந்தோம். செல்லன் என்னும் விவசாயியின் வீட்டிற்குச் சென்று, அங்குள்ள பத்தாயப்புரையையும் பழைய பாத்திரங்களையும் பார்த்தோம். இத்தகைய வீடுகள் இன்று குறைந்து கொண்டே வருகிறது. அவர் இருபது வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றார். குழந்தைகள் அவருடன் நேர்காணல் நடத்தினர்.
- எத்தனை ஏக்கர் நிலமுண்டு?
- எந்த நெல்லினத்தை கூடுதலாகப் பயிர் செய்கின்றீர்?
- லாபம் உள்ளதா?
- யார் உதவுகின்றனர்?
- என்னவெல்லாம் வித்துகள் விவசாயம் செய்யப்படுகிறது? ....போன்ற வினாக்களை குழந்தைகள் விவசாயிடம் கேட்டறிந்துகொண்டனர். அவர் கூறிய பதில்களை அவரவர் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டனர். பின்பு விவசாய இடத்திற்கு சென்றோம்.கிருஷி பவன் அலுவலர்களான திரு. ராதாகிருஷ்ணன், திரு. சுரேஷ்பாபு போன்றவர்களும் எங்களுடன் இருந்தனர். அவர்களும் குழந்தைகளோடு உரையாற்றினார். விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தை வளர்ப்பதற்கும் மண்ணை அறிந்து கொள்வதற்குமுள்ள வாய்ப்பிற்காக அனைத்து குழந்தைகளுக்கும் விதைகள் வழங்கப்பட்டது. கூடுதல் நேரம் வயல் வெளியில் விளையாட முடியாத வருத்தம் அனைவருக்கும் இருந்தது. ஆனால் விதைகள் கிடைத்த சந்தோசத்திலும் அதை வளர்ப்பதற்கான ஆர்வத்திலும் எங்களது வருத்தம் மாறியது. இவ்வாறு ஒரு நல்ல வாய்ப்பளித்த செல்லன் என்னும் விவசாயிக்கும் கிருஷிபவன் அலுவலர்களுக்கும் நன்றி சொல்லிக்கொண்டு வயல்வெளியில் கதைகள் சொல்லிக் கொண்டும் நெற்கதிர்களை சுவைத்துக் கொண்டும் பள்ளிக்கூடத்திற்கு திரும்பினோம். ஒரு பொழுதும் மறக்கமுடியாத எங்களது இனியபயணம்....
- காணொளி காண்போம் -பாடம்-1, வயல்வெளியில்
பள்ளியின் கலை பாரம்பரியத்திற்கு புத்துணர்வூட்டியது கலைவிழா - 2019
கலைப் பாரம்பரியத்தில் திகழ்ந்து நிற்கின்ற எங்களது பள்ளிக்கூடத்தில் 30.9.2019 திங்கட்கிழமை கலைவிழா நடத்தப்பட்டது. சிறு குழந்தைகளின் கலைத்திறனை வெளிக்கொணர்ந்து, அதனைப் பாராட்டி முன்னேற்றுவதற்கான முதல் படியே பள்ளிக் கலைவிழா.பள்ளியிலுள்ளஅனைத்துக் குழந்தைகளுக்கும் பங்கேற்பதற்கான வாய்ப்புக் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் அனைவரும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். கதை சொல்லுதல், கவிதை மொழிதல், பேச்சுப் போட்டி, மெல்லிசை, மாப்பிள்ளைப் பாட்டு, திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற பல இனிமையான கலைநிகழ்ச்சிகள் அரங்கேறியது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ஒன்றிற்கொன்று மேம்பட்டதாக இருந்தது.
அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு

பொதுவாக கலைவிழாவிலும் மற்றும் பல போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றவர்களுக்கு மட்டும் பரிசு கிடைக்கும். இது மீதியுள்ள குழந்தைகளுக்கு கவலையாக இருக்கும். இதனை நிவர்த்தி செய்ய அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு கொடுக்க வேண்டும். இரண்டாம் வகுப்பில் படிக்கின்ற அல்னாலாலு என்னும் குழந்தையின் பாட்டி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியையான திருமதி. ராணி ஃபிலோமினா அவர்கள் பள்ளிக் கலைவிழாவில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பென்சில் பரிசாக வழங்கினார். நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்துவதோடு, பரிசு கிடைக்கவில்லை என்ற கவலையும் எந்தக் குழந்தைக்கும் இருக்காது. குழந்தைகளது மனதை நன்றாகப் புரிந்து கொண்டு பரிசு வழங்கிய திருமதி. ராணி ஃபிலோமினா அவர்களுக்கு நன்றி செலுத்தப்பட்டது. இதுபோலவே ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்ற குழந்தைகளுக்குப் பரிசு வழங்கினால் அனைவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பர் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை.
|
|
