ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2019-20
2019 - 20, பள்ளிச் செயல்பாடுகளும் தினக்கொண்டாட்டங்களும்
ஜூன்
பள்ளி நுழைவு விழா
2019- 20 கல்வி ஆண்டின் நுழைவு விழா ஜூன் 6ஆம் நாள் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்வி கற்க ஆர்வமாக வந்துள்ள குழந்தைகளை புன்னகையோடு வரவேற்கவே இத்திருவிழா ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட வண்ணக் காகிதங்களாலான பட்டாம்பூச்சிகளால் தோரணங்கள் கட்டப்பட்ட விதம் அழகுக்கு அழகு சேர்த்தது. காலை 9.30 மணி அளவில் வார்டு கவுன்சிலர் சிவக்குமார் நுழைவு விழாவினை துவக்கி வைத்தார். முன்துவக்கப்பள்ளி மற்றும் ஒன்றாம் வகுப்பிற்கு புதியதாக வந்து சேர்ந்த குழந்தைகளை எழுத்து கிரீடம் அணிவித்து வரவேற்றோம். வார்டு கவுன்சிலர் சிவக்குமார் குத்துவிளக்கேற்றி நுழைவு விழாவை சிறப்பித்தார். மேலும் வார்டு கவுன்சிலர் சுவாமிநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே. பி ரஞ்சித், தலைமையாசிரியை ஷைலஜா என்.கே போன்ற அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிவக்குமார் அனைவருக்கும் வாழ்த்துரை வழங்கினார். முதலமைச்சர் பள்ளி குழந்தைகளுக்காக எழுதிய கடிதத்தை தலைமை ஆசிரியர் வாசித்தார். பிஞ்சுக் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் நோட்டுப்புத்தகம், பென்சில், கலர் பென்சில் போன்றன வழங்கப்பட்டது. ஜுன் 5, சுற்றுப்புற தினம் ஆனதால் அதைக் கொண்டாடும் விதமாக குழந்தைகளுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
வரவேற்க மிக்கி மௌசும், பியரும்
இவ்வருட நுழைவு விழாவின் தனிச்சிறப்பு என்னவென்றால், முன் வாசலில் குழந்தைகளை வரவேற்கும் மிக்கி மெளசும், பியரும். குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான நண்பர்கள் அல்லவா இவர்கள். நுழைவு விழாவை சிறப்பிக்கவும், பள்ளி முற்றத்திற்கு குழந்தைகளை புன்னகையோடு அழைத்து வருவதற்கு மான ஒரு தந்திரமே மிக்கி மெளசும் பியரும். இது குழந்தைகளுக்கு ஆசிரியை சுப்ரபாவுடைய பரிசாகும்.
- கூடுதல் புகைப்படங்கள் - பள்ளி நுழைவு விழா- 2019
- காணொளி காண்போம் -பள்ளி நுழைவு விழா 2019- 20
அய்யங்காளி நினைவுதினம்
அய்யங்காளி நினைவுதினமான ஜூன் 18 ஆம் தேதி சமூக சீர்திருத்தவாதியான அய்யங்காளியைப் பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அவர் கேரளத்திற்கு அளித்த மகத்தான சேவைகளைப் பற்றிப் புரிந்துகொள்ள முடிந்தது.
வாசிப்பு தினம்
பி.என் பணிக்கரின் நினைவு நாளான ஜூன் 19ஐ நாம் வாசிப்பு தினமாக கொண்டாடுகிறோம். பி.என் பணிக்கருடைய வாழ்க்கை வரலாறு, வாசிப்புக் குறிப்பு, வினாடி வினா போன்ற வாசிப்பைப் போற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஓய்வுபெற்ற மலையாள ஆசிரியரும், குழந்தை நலக்குழு செயலாளருமான குரியக்கோஸ் அவர்கள் வாசிப்பு வாரத்திற்கு தொடக்கமிட்டார். குழந்தைகளுக்கு வாசிப்பு என்றால் என்ன? சிறு குழந்தைகள் எவ்வாறு வாசிப்பு தொடங்க வேண்டும்? வாசிப்பின் முக்கியத்துவம் என்ன? போன்ற வினாக்களுக்கான பதிலை மிகத்தெளிவாகவும், குழந்தைகளுக்கு புரியும்படியும் எடுத்துக் கூறினார். எதிர்கால தலைமுறையினரான நமது குழந்தைகள் வாசிப்பை வாழ்க்கையின் கடைசி வரையிலும் வலுவாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும், வாசிப்பு நமது மிகச்சிறந்த நண்பனாக மாற வேண்டும் என்றும் குரியக்கோஸ் கூறினார். மேலும் தலைமையாசிரியை ஷைலஜா வாசிப்பு தினத்தின் முக்கியத்துவத்தை எளிமையாகக் கூறி, வாசிப்பு வாரத்திற்கு தொடக்கமிட்டார்.
புத்தகக் கண்காட்சி
வாசிப்பு வாரத்தின் பாகமாக நடத்தப்பட்ட புத்தகக் கண்காட்சி மிக நன்றாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவதுண்டு. நான்காம் வகுப்பு குழந்தைகளால் பலவிதமான புத்தகங்களின் ஒரு அற்புத கண்காட்சி நடத்தப்பட்டது. அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளி நூலகத்திலுள்ள புத்தகங்களை அறிமுகப்படுத்தவும், நல்ல வாசிப்பாளராக மாற்றுவதற்கும் உள்ள முதல் படியே இந்த புத்தகக் கண்காட்சி. ஒரு வகுப்பு நிறைய பலவித புத்தகங்களைக் கொண்டு கண்ணுக்கு விருந்தளித்தனர் எங்கள் குழந்தைகள். இது ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது என்பதுவே உண்மை. ஆசிரியையான கீதா தலைமையில் புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.
- கூடுதல் புகைப்படங்கள் -வாசிப்பு தினம்- 2019
யோகா தினம்
ஜூன் 21, யோகா தினத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியிலுள்ள அனைத்து குழந்தைகளையும் யோகாவிற்கு வழி நடத்துவதே எங்களது நோக்கம். யோகா மிக நல்ல மருந்தும், அறிவும், கலையும் ஆகும் என்ற உண்மையை குழந்தைகளுக்கு உணர்த்துகின்ற ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. புகழ்பெற்ற யோகா பயிற்சியாளரான பிரவீண் யோகா தினம் தொடங்கி வைத்தார். மாறிக் கொண்டிருக்கின்ற நமது வாழ்க்கை பழக்கவழக்கங்களால் நம்மை தாக்குகின்ற நோய்களை விரட்ட இப்பூமியிலுள்ள ஒரே ஒரு மருந்து யோகாவாகும் என்று அவர் கூறினார். கடந்த சில வருடங்களாக நமது பள்ளியில் யோகா பயிற்சி நல்ல முறையில் பயிற்றுவித்து வருவதால் யோகாவைப் பற்றிய சில பாடங்கள் இங்குள்ள குழந்தைகளுக்கு தெரிந்திருந்தது. ஒவ்வொரு யோகா பயிற்சியும் எப்படி செய்ய வேண்டும் என்று என்றும், அதன் பலன்கள் என்னென்ன என்பதை பிரவீன் விவரிக்கும் போது, அவருடன் வந்த ராகுல் யோகாப் பயிற்சிகள் செய்து காண்பித்தார். குழந்தைகளுக்கும் அதேபோல செய்வதற்கான வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. யோகா என்பது ஒருபோதும் முடிவுறுவதில்லை. அது வாழ்க்கை முழுவதும் கொண்டு சென்றால் மட்டுமே அதனுடைய முழுமையான பலன் கிடைக்கும் என்று திரு.பிரவீண் அவர்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்திக் கொண்டு யோகாப் பயிற்சியை தொடங்கி வைத்தார்.
- கூடுதல் புகைப்படங்கள் - யோகா தினம் - 2019
போதைப்பொருள் எதிர்ப்பு தினம்
ஜூன் 26 ஆம் தேதி மாதிரி காலைக்கூட்டம் போதைப்பொருள் எதிர்ப்பு தினத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது. தலைமையாசிரியை ஷைலஜா இன்றைய தலைமுறையில் போதைப்பொருளின் உபயோகத்தையும் அதனால் ஏற்படுகின்ற கடுமையான நோய்களைப் பற்றியும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார். போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி அனைவருக்கும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. போதைப்பொருள் எதிர்ப்பு சுவரொட்டி, முத்திரை வாக்கியங்கள் எழுதப்பட்ட அட்டைகள் போன்றவைகள் காலைக்கூட்டத்தில் காண்பிக்கப்பட்டது.
ஜூலை
வாசிப்பு வார முடிவு, தொடக்கவிழா - பஷீர் தினம், வித்யாரங்கம், மொழிச்சங்கம், முன் தொடக்கப்பள்ளி பாடப்புத்தக வினியோகம்
வாசிப்பு வாரத்தின் முடிவும், பஷீர் தினமும் ஒரே நாளில் நடத்தப்பட்டது. ஜூலை 5 வெள்ளிக்கிழமை ஜெயசீலன் குழந்தைகளிடம் உரையாற்றினார். பஷீர் கற்பித்த மனிதகுலத்தின் மதிப்புகளை தன்னுடைய பாடல்களின் வாயிலாக குழந்தைகளுக்கு அறியச் செய்தார். மேலும் வித்யாரங்கம், மொழிச்சங்கம் (தமிழ், மலையாளம்) போன்றவற்றின் தொடக்கமும், முன்தொடக்கப்பள்ளி வகுப்பினருக்காக பொதுக்கல்வித் துறை வெளியிட்ட அறிவியல்பூர்வமாக தயாராக்கிய பாடப்புத்தகம் வழங்குதலின் தொடக்கமும் அவர் நிறைவேற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே.பி.ரஞ்சித் இவ்விழாவிற்கு தலைமை வகித்தார். தலைமையாசிரியை ஷைலஜா வரவேற்புரையும், ஆசிரியை சுப்ரபா நன்றியுரையும் வழங்கினார். மேலும் பஷீர் தினத்தை முன்னிட்டு, அவரை நினைவூட்டும் விதமாக குழந்தைகள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். கவிதை சொல்லுதல், கதை சொல்லுதல், வருணனைக் குறிப்பு, பதிப்புகள் வெளியிடல், பஷீர் எழுதிய நூலிலிருந்து ஒரு சிறிய நாடகம், பஷீர் கதாபாத்திரங்களின் அறிமுகப்படுத்தல், தமிழர்களின் பெருமைக்குரிய கவிஞரான சுப்பிரமணிய பாரதியாரை அறிமுகப்படுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இது மாணவர்களுக்கு நல்ல ஒரு அனுபவமாக இருந்தது.
- காணொளி காண்போம் -பஷீர் தினம்- 2019
ஆங்கிலக் குழு 2019-20- தொடக்க விழா
ஆங்கிலக் குழு 10.7.19 புதன்கிழமை ஜி.வி.ஜி.எச்.எஸ் ஆசிரியை ரீனா துவங்கி வைத்தார். ஆங்கில மொழியின் பயன்பாடு வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நாம் பயன்படுத்தும் பல ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலம் தெரியாதவர்களும் பயன்படுத்துகிறார்கள். அவை நமக்குத் தெரியாமலேயே நமது மொழியில் இடம்பெற்றுள்ளன என்பதை ஆசிரியர் தனது தொடக்க உரையில் சுட்டிக்காட்டினார். ஆங்கில மொழியின் பிறப்பிடம், வெவ்வேறு பாணிகள் மற்றும் மொழியின் அழகு ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளுடன் குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது. அச்சமின்றி ஆங்கிலத்தை அணுகுவதற்கான தொடக்கப் புள்ளியாகவும் இவ்விழா அமைந்தது. குழந்தைகள் ஆங்கிலத்தில் தங்கள் திறமையைக் காட்டுவதற்காக அவர்களின் படைப்புகளைக் கொண்ட ஸ்பார்க்கிள்ஸ் என்னும் ஒரு ஆங்கில இதழை வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது. தலைமையாசிரியை ஷைலஜா வரவேற்புறையும் ஆசிரியை சுப்ரபா நன்றியுறையும் கூறினார். பின்னர் குழந்தைகளுக்கான ஆங்கில மொழி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அறிவியல் குழு துவக்க விழா மற்றும் சந்திர தினம்
மனித குலத்தின் மாபெரும் வெற்றிக்கு ஐம்பது வயது. மனிதன் சந்திரனில் அடி எடுத்து வைத்த வரலாற்று சாதனையை நினைவுபடுத்திக் கொண்டு சந்திர தினத்தை மிக விமரிசையாக கொண்டாடினோம். அரசு விக்டோரியா உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியரான ரோஷ்ணா குழந்தைகள் மனதில் அறிவியல் மனப்பான்மை வளர்வதற்கான அடிப்படையிட்டு, அறிவியல் குழுவைத் துவங்கி வைத்தார். மெழுகுவர்த்தியை சூடாக்கும் போது ஏற்படுகின்ற விந்தையான மாற்றத்தையும், பொட்டாசியமும், கிளிசரினும் சேரும்போது தீப்பிடிக்கும் வினையையும் குழந்தைகளை உற்று நோக்கச் செய்து, நமது அன்றாட வாழ்வில் அறிவியலின் இன்றியமையாமையை உணர்த்தினார் திருமதி. ரோஷ்ணா அவர்கள். மேலும் பல்வேறு ஆர்வமூட்டும் சோதனைகளும் செய்து காண்பித்து அதற்கான விளக்கங்களும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. முதன் முதலில் சந்திரனுக்குச் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் போன்றவர்களது வேடமணிந்து வந்த குழந்தைகள் தங்களை சுய அறிமுகம் செய்தனர். அந்தப் புகழ்மிக்கவர்களைப் பற்றி கூடுதல் அறிந்து கொள்ள இது பெரிதும் உதவியது. பின்பு ஒவ்வொரு வகுப்பினரும் தயாராக்கிக் கொண்டு வந்த பதிப்புகளை வெளியிட்டனர். நிலாவைப் பற்றிய பாடல்கள் அப்போளா - 11 மற்றும் ராக்கெட்டின் மாதிரிகள் காண்பித்தல், பேச்சுப்போட்டி, விடுகதைகள், வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சந்திர யாத்திரையைக் குழந்தைகள் முன் கொண்டுவர சில வீடியோக்களும் காண்பிக்கப்பட்டது. தலைமையாசிரியை ஷைலஜா துவக்க உரையும், ஆசிரியர் ஹிதாயத்துல்லாஹ் நன்றியுரை கூறினார்.
- காணொளி காண்போம் -சந்திர தினம்- 2019
சந்திரயான்-2 நேரடி ஒளிபரப்பு
இந்தியாவின் இரண்டாவது வரலாற்றுச் சாதனை மனிதன் சந்திரனில் கால் வைத்து அரை நூற்றாண்டாகும் இவ்வேளையில் இந்தியா சந்திரனுக்குள்ள இரண்டாவது பயணத்திற்குத் தயாராகிறது. 2019 ஜூலை 22-ஆம் நாள் மதியம் 2:43 மணிக்கு பாகுபலி என்னும் பெயரில் அறியப்படும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து வானில் பறந்து யரும் வேளையில் நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கணினி சோதனைச்சாலையில் மாணாக்கர்களின் மகிழ்ச்சி அலையடித்தது. புரொஜக்டரின் உதவியுடன் ராக்கெட் ஏவுதல் நேரடி ஒளிபரப்பாக குழந்தைகளுக்குக் காண்பித்து நாட்டின் முன்னேற்றத்தை கண்டறிய வாய்ப்பளிக்கப்பட்டது. நவீன தொழில்நுட்ப ஆதிக்கம் கல்வித்துறையில் ஏற்படுத்திய மாற்றத்திற்கு இது ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இச்செயல்பாட்டின் மூலம் ஐ.எஸ்.ஆர்.ஓ, ஜி.எஸ்.எல்.வி போன்றவற்றை பற்றி மாணவர்களுக்கு தெரிந்துகொள்ள முடிந்தது.
பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம்
இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம் ஜூலை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு நமது பள்ளியில் நடத்தப்பட்டது. அரசு ஆரம்பப் பள்ளியின் அனைத்து செயல்பாடுகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பெற்றோர்களும் முழுமையாக உறுதுணை அளிக்கின்றனர் என்பது எடுத்தியம்ப வேண்டிய ஒன்றாகும். பள்ளியின் முன்னேற்றச் செயல்பாடுகளிலும் முழுமையாக ஒத்துழைக்கின்றனர் நமது பெற்றோர் ஆசிரியர் சங்கம். இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டத்தில் ஏறத்தாழ 300 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்றனர். தலைமையாசிரியை ஷைலஜா பொதுக்கூட்டத்திற்கு வரவேற்புரை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரஞ்சித் தலைமை தாங்கினார். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கற்றலில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், டிவி பார்த்தல் குழந்தைகளது கற்றலை பெரிதும் பாதிக்கிறது என்றும் தலைமையாசிரியை கூறினார். மேலும் எல்.எஸ்.எஸ் தேர்வின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அதற்காக பள்ளியில் மாணவர்களுக்குக் கொடுக்கின்ற பயிற்சிகளையும் தெளிவாக பெற்றோர்களுக்கு விளக்கினார். பின்பு ஏப்ரல் முதல் ஜூலை வரையுள்ள வரவு, செலவு கணக்குகளும், செயல்பாட்டு அறிக்கையும் வாசித்தார். பிறகு பள்ளியின் முன்னேற்றச் செயல்பாடுகளுக்கான கலந்துரையாடலில் பங்கேற்க அனைத்து பெற்றோர்களுக்கும், வாய்ப்பளிக்கப்பட்டது. சில பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளின் கற்றல் காரியங்களிலும், பள்ளியின் முன்னேற்றத்திற்கான காரியங்களிலும் கருத்துக்கள் பரிமாறினர். பிறகு புதிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தேர்வு நடத்தப்பட்டது. முன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவரான சாமிநாதன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும், ஸ்ரீஜித் சி.ஐ துணைத் தலைவராகவும் எவ்வித எதிர்ப்புக்களும் இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு பெற்றோர் ஆசிரியர் நிர்வாகச் சங்கமும், மதர் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டு, புதிய பெற்றோர் ஆசிரியர் சங்கம் உருவெடுத்தது.
ஆகஸ்ட்
ஹிரோஷிமா, நாகசாகி தினம்
நமது பள்ளியில் ஆகஸ்ட் 6 ஹிரோஷிமா தினமும், ஆகஸ்ட் 9 நாகசாகி தினமும் நினைவுகூறப்பட்டது. மனித குலத்திற்கே நாசம் விளைவிக்கின்ற யுத்தங்களைப் பற்றியும், அதனால் ஏற்படும் பெரும் நஷ்டங்களைப் பற்றியும் புரிந்து கொள்வதற்கு இதுபோன்ற தினக் கொண்டாட்டங்கள் பெரிதும் துணைபுரிகிறது. இந்த தினங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதற்கான கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டது. அணுகுண்டு வெடித்ததினுடையவும், அதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும், இப்போதும் அங்குள்ள மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் தெரிந்து கொள்வதற்காக சில வீடியோக்கள் காண்பிக்கப்பட்டது. இது குழந்தைகளுக்கு நெஞ்சை தொட்ட ஒரு அனுபவமாக இருந்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. உற்சாகமான முறையில் நடத்திய ஹிரோஷிமா, நாகசாகி வினாவிடைப் போட்டியில் நான்காம் வகுப்பு மாணவி ரிது.எஸ்.எம் முழு மதிப்பெண்களும் பெற்று வெற்றி அடைந்தாள். நிரஞ்சன். எம் இரண்டாம் இடத்தையும், ஸ்ரீலக்ஷ்மி. ஆர் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். ஹிரோஷிமா மற்றும் நாகசாகியோடு தொடர்புடைய படங்களும் விபரங்களும் உட்படுத்தி குழந்தைகள் பதிப்புகள் தயாராக்கி வந்தனர். மேலும் பிளக்கார்டுகளும் உருவாக்கினார்.
யுரேகா அறிவியல் திருவிழா
யுரேகா அறிவியல் திருவிழா 12.8.2019 அன்று பள்ளி அளவில் நடத்தப்பட்டது. 20 குழந்தைகள் உபமாவட்ட போட்டியில் போட்டியிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான செயல்பாடுகளை விளக்கிக் கொடுக்கப்பட்டது.
சுதந்திர தினம்
புத்துணர்வுடன் இவ்வருடத்தில் நமது 73 -ஆம் சுதந்திர தினம் மிக நல்ல முறையில் கொண்டாடினோம். முன் வருடங்களை ஒப்பிடும்போது குழந்தைகள் குறைவாக இருப்பினும் பெற்றோர்கள் நிறைய பேர் பங்கேற்றனர் என்பதை மிக என்பது மிகவும் வியப்புக்குரியதாக இருந்தது. சரியாக காலை 9 மணிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சாமிநாதன் கொடி ஏற்றினார். தலைமையாசிரியை ஷைலஜா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சாமிநாதன், வார்டு கவுன்சிலர் மணிகண்டன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத்தலைவர் ஸ்ரீஜித், முன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரஞ்சித், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாக உறுப்பினர் சசிகுமார், ரூபேஷ் போன்றவர்கள் குழந்தைகளுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்களை வழங்கினார்கள். பின்பு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. சுதந்திர தின பதிப்புகள், பேச்சுப்போட்டி, கதைகள், கவிதைகள், மாறுவேடம், தேசபக்திபாடல்கள் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அனைத்து வகுப்பினருடையவும் நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று மேம்பட்டதாக இருந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் புதுமையானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்க வேண்டும் என்பது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கே உடைய ஒரு தனிச் சிறப்பாகும். நமது பள்ளி செயல்படுகின்ற நகரசபை முழுமையாக பிளாஸ்டிக் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சுதந்திர தின நந்நாளில் யாவரும் மாதிரி ஆக்க வேண்டிய ஒரு சிறப்பான செயல்பாட்டை முன்வைத்தோம். இரண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் தந்தையான பாபு அவர்கள் அனைத்து குழந்தைகளுக்கும் வித்துக்கள் வைத்த கொடிகள் வழங்கினார். முழுமையாக பிளாஸ்டிக்கை ஒழித்து சுற்றுப்புறத்திற்கு நன்மை விளைவிக்கின்ற இந்த நல்ல எண்ணத்தை அனைவரும் பாராட்டி பெருமைப்படுத்தினர். பாரதமாதாவுடையவும், ஜவஹர்லால் நேருவுடையவும் வேடமணிந்த குழந்தைகள் சுதந்திர தினத்திற்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. ஆசிரியர் பயிற்சிக்காக வந்த மாணவர்களது தேசபக்தி பாடல் நன்றாகவே இருந்தது. பின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்வாறு இவ்வருட சுதந்திர தினக் கொண்டாட்டமும் மிக நல்ல முறையில் கொண்டாடி மகிழ்ந்தோம்.
எனது செய்தித்தாள்
நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு தேசாபிமானி செய்தித்தாள் வர வைப்பதற்கான எனது செய்தித்தாள் என்னும் திட்டம் ஆகஸ்ட் 21 ஆம் நாள் சி.பி.எம் வட்டாரச் செயலாளர் சிவப்பிரகாஷ் பள்ளி மாணவர் தலைவனுக்கு செய்தித்தாள் வழங்கித் துவங்கி வைத்தார்.
மதுரம் மலையாளம்
நமது பள்ளியில் ஜயின்ட்ஸ் சங்கத்தினரின் தலைமையில் மதுரம் மலையாளம் திட்டம் துவங்கப்பட்டது. பள்ளிக்கு தினந்தோறும் 5 மாத்ருபூமி செய்தித்தாள்கள் வழங்குதல் என்பதுவே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஆகஸ்ட் 22 ஆம் நாள் மதிப்பிற்குரிய சித்தூர் தத்தமங்கலம் நகரசபை தலைவர் மது இத்திட்டத்தினைத் துவங்கி வைத்தார். சித்தூர் ஜயின்ட்ஸ் சங்க அங்கத்தினர்களும் இந்த நல்ல தருணத்தில் பங்கெடுத்தனர். பள்ளியில் உள்ள மொத்த குழந்தைகளின் சார்பாக நான்காம் வகுப்பில் உள்ள ஐந்து மாணவர்கள் செய்தித்தாள்களை பெற்றுக்கொண்டு மதுரம் மலையாளம் திட்டத்தை மனமார வாழ்த்தி வரவேற்றனர்.
பிரதமர் திரு. நரேந்திர மோதியின் Fit India - நேரடி ஒளிபரப்பு
தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29-ஆம் நாள் பிரதமர் நரேந்திர மோதியின் Fit India என்னும் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு குழந்தைகளுக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. ஹாக்கி மாயாவியான த்யான்சந்தின் பிறந்தநாளை நாம் விளையாட்டு தினமாக கொண்டாடுகிறோம் எனவும், இந்திய விளையாட்டுத் துறையை உயர்த்துவதற்காக தொடங்கிய நிகழ்ச்சியே Fit India எனவும் குழந்தைகளுக்கு அறியச் செய்தோம். இந்தியாவின் முன்னேற்றத்திற்காக நடத்தப்படுகின்ற நிகழ்ச்சிகளையும், தற்கால நிகழ்வுகளையும் எங்களது குழந்தைகள் புரிந்துகொள்கின்றனர் என்பது எடுத்தியம்ப வேண்டிய ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல் இத்தகைய அறிவுகள் குழந்தைகளுக்குப் புரிய வைப்பதில் இங்குள்ள ஆசிரியர்கள் காண்பிக்கும் ஆர்வமும் முயற்சியுமே எங்களது பள்ளியின் வெற்றி ரகசியம்.
செப்டம்பர்
ஒற்றுமையோடு மீண்டும் ஒரு திருவோணம்
ஒவ்வொரு வருடமும் போலவே இவ்வருடமும் ஒற்றுமையோடும், அன்போடும் ஓணவிழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடினோம். செப்டம்பர் 6 வெள்ளிக்கிழமை பள்ளியிலுள்ள குழந்தைகளும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம். குழந்தைகளுக்காக விமரிசையான ஒரு ஓணவிருந்து (ஓணசத்யா) தயார் செய்யப்பட்டது. ஓணவிருந்து பள்ளியிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாலையிலேயே அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் பள்ளிக்கு வந்து ஓணவிருந்துக்கான பணிகளில் ஈடுபட்டனர். ஒற்றுமையோடும், கலகலப்போடும் அனைவரையும் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. குழந்தைகளை மாவேலி, வாமனன், புலிகள் போன்ற வேடமணியச் செய்து, பள்ளி வளாகத்தில் ஊர்வலம் நடத்தினோம். அனைத்து வகுப்புகளிலும் உள்ள பூக்களை பார்வையிட முதலில் சென்றனர். பின்பு சமையலறைக்கும் சென்றனர். புலியாட்டம் மிகவும் நன்றாக இருந்தது. பின் குழந்தைகளது கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஓணப்பாடல்கள் பாடி குழந்தைகளும், பெற்றோர்களும் மகிழ்ச்சிப் பெருங்கடலில் மூழ்கினர். மதிய வேளையானதும் அனைவருக்கும் ஓணவிருந்து அளிக்கப்பட்டது. இவ்வருட ஓணக்கொண்டாட்டம் பல புதுமைகள் நிறைந்ததாக இருந்தது. நமது சித்தூர்-தத்தமங்கலம் நகரசபை பிளாஸ்டிக்கை அறவே ஒழித்ததனால், இயற்கையோடு ஒன்றிய கொண்டாட்டமாக இருந்தது. ஓணவிருந்து வாழை இலையிலே பரிமாறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பாயசமும், தண்ணீரும் ஸ்டீல் டம்ளரில் வழங்கப்பட்டது. அதுபோலவே பூக்கோலம் போடுவதற்கும் இயற்கையான பூக்கள் மட்டுமே குழந்தைகள் பயன்படுத்தினர். சாம்பார், கூட்டுகறி, பொரியல், ரசம், மோர், பால்பாயசம், இஞ்சிப்புளி என விதவிதமான உணவு வகைகள் ஓண விருந்தில் பரிமாறப்பட்டது. இவை அனைத்தும் சுவை நிறைந்ததாகவும் இருந்தது. ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும், பெற்றோர்களும் சேர்ந்து ஓணவிருந்தை பரிமாறினர். செல்வச் செழிப்பினுடைய திருவிழாவாகும் ஓணம். இதிலிருந்து வேறுபட்டு ஒற்றுமை, செழிப்பு, அன்பு என இவையாவும் ஒன்று சேர்ந்ததாக இருந்தது எங்களது இவ்வருட திருவோணக் கொண்டாட்டம்.
- காணொளி காண்போம் -திருவோணம்- 2019
கலைச் சங்கம்
அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளியின் வரலாற்றில் நடந்த ஒரு வேறுபட்ட அனுபவம். எங்களது பள்ளியின் கலைச் சங்கத்தினைத் (16.9.2019) துவங்கி வைத்தது உலகச் சாதனையாளரான அபிலாஷ் புதுக்காடு என்பவராவார். இது மிக நல்ல ஒரு தருணமாக இருந்தது. இவர் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியான எஸ். ஜானகியைப் பற்றி எழுதிய ஆலாபனத்திலே ஏதேனும் வயம்பும் என்னும் புத்தகத்தைக் குழந்தைகளுக்கு வழங்குவதற்காகவே நம் பள்ளிக்கு வருகையளித்தார். ஒரு பாடகியைப் பற்றி எழுதப்பட்ட உலகத்திலேயே மிகப் பெரிய புத்தகமாகும் இது. அதுமட்டுமல்லாமல் இப்புத்தகம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் 36க்கும் மேற்பட்ட வெகுமதிகளைப் பெற்றுள்ளது. இவர் தனது சிறுவயது அனுபவங்களைக் குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டார். இப்புத்தகம் எழுதுவதற்கான முக்கிய காரணம் தன்னுடைய தாய் எனவும், ஏறத்தாழ 11 வருடங்கள் அரும்பாடுபட்டு இப்புத்தகம் முழுமையாக்கபட்டது எனவும் கூறினார். பாடகி எஸ். ஜானகி அம்மாவின் சில பாடல்கள் கேட்க குழந்தைகளுக்கு வாய்ப்புக் கிடைத்தது. இது குழந்தைகளுக்கு அளவற்ற மகிழ்ச்சியை தந்தது. புகழ்பெற்ற பாடகி பி.லீலா படித்த பள்ளிக்கூடத்திற்கு வர முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார். பாடகி எஸ். ஜானகி அம்மாவின் பாடல்கள் நிறைய கேட்க வேண்டும் என்று குழந்தைகளிடம் கூறி, தலைமையாசிரியை ஷைலஜாவிடம் தனது புத்தகத்தை வழங்கினார். மேலும் பள்ளிக் கலைச் சங்கத்தைத் துவங்கி வைத்ததாகவும் கூறினார் அபிலாஷ் புதுக்காடு. குழந்தைகளுக்கு ஒரு நல்வழிப்பாடம் இவரது வருகையால் கிடைத்தது. பாடகி எஸ். ஜானகி கல்வி கற்றதில்லை. முறையாக சங்கீதம் கற்றதில்லை. இருந்தும் கூட அவர் உலகப் புகழ் பெற்ற பாடகியானார். இதற்குக் காரணம் அவர் சங்கீதத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். செய்யும் தொழிலை தெய்வமாக மதித்தார். பலனை எதிர்பார்க்காமல் செயலாற்றினார். எனவே நாமும் நம் செயல்களில் உண்மையாளராக இருந்தால் நமக்கும் உன்னத நிலையை அடைய முடியும். நாம் அனைவரும் எந்த செயலையும் கவனமாகவும், நுணுக்கமாகவும் செய்ய வேண்டும் எனவும் அபிலாஷ் புதுக்காடு கூறினார். இது அனைவருக்கும் மிகச்சிறந்த ஒரு அனுபவமாக இருந்தது. ஆசிரியை சுப்ரபா நன்றியுரை வழங்கி இச்சிறப்புத் தருணத்தை இனிதே முற்றுப்பெறச் செய்தார்.
- காணொளி காண்போம் -உலகச் சாதனையாளர் நமது பள்ளியில்
நவீன மாற்றங்களை உட்கொண்டு ஒரு பள்ளி தேர்தல்- 2019
19.09.2019 வியாழக்கிழமை பள்ளித் தேர்தல் இனிதே நடந்தது. ஜனாதிபத்தியத்தின் நவீன மாற்றங்களை உட்படுத்தி, சீரான முறையில் ஒரு சிறப்பான பள்ளித் தேர்தலாக இருந்தது. ஏழு மாணவ வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் (EVM ) பயன்படுத்தியே குழந்தைகள் வாக்களித்தனர்.இதற்காக 2 ஸ்மார்ட்போன் பயன்படுத்தினோம். இரண்டு பூத்துகள் அமைத்தோம். ப்ரிசைடிங் ஆபீஸர், போளிங் ஆபிஸர் 1, 2, 3 போன்ற பொறுப்புகளை குழந்தைகளை ஏற்றெடுத்தனர். சரியாக காலை 11 மணிக்கு குழந்தைகள் வாக்களிக்கத் தொடங்கினர். ஒழுங்கான முறையில் தேர்தல் நடைபெற்றது. குழந்தைகளுக்கு இது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. எலக்ட்ரானிக் மெஷின் பயன்படுத்தி வாக்களித்ததும், கை விரலில் மை தடவியதும் குழந்தைகளுக்கு ஜனாதிபத்தியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவே இருந்தது. ஏறக்குறைய இரண்டு மணி நேரம் வாக்களிப்பு நடைபெற்று, ஒரு மணியளவில் முடிவுற்றது.பின்பு ப்ரிசைடிங் ஆபீஸர் தேர்தல் வேலைகளைப் பூர்த்தி செய்து, ஓட்டிங் மெஷீன் ஆபீஸிற்கு கொண்டு வந்தார். தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்களது முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டது. 84 வாக்குகள் பெற்று அகிலேஷ். யு என்னும் மாணவன் பள்ளி மாணவ தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். 79 வாக்குகள் பெற்ற நிரஞ்சன். எம் எனும் மாணவன் இரண்டாவது இடத்தைப் பிடித்தான். மதியம் 2 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
- காணொளி காண்போம் -பள்ளி தேர்தல்- 2019
மலையாள மொழித் தந்தையின் நினைவாக...
மலையாள மொழியை கை பிடித்து உயர்த்திய பெருமை மலையாள மொழியின் தந்தையான துஞ்சத்து இராமானுஜன் எழுத்தச்சன் என்பவரையே சாரும். புராதனக் கவிஞர்களில் சிறப்புற்றவரான எழுத்தச்சனின் நினைவிடத்திற்கு ஜி.வி.எல்.பி பள்ளியிலுள்ள நான்காம் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் களப்பயணம் சென்றது ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது. சித்தூர் மண்ணில் பச்சைப்பசேலென உள்ள வயல் வரம்புகளில் கால்நடையாகவே பயணம் செய்தோம். சோகநாஷினி ஆற்றங்கரையோரம், அக்ரஹாரத் தெருவில் அமைந்துள்ள குருமடம் ஒரு புனிதமான ஆலயம் சூழ்நிலையைத் தந்தது. துஞ்சத்து எழுத்தச்சனுடையவும், அவரது முக்கிய சீடரான எழுவத் கோபாலமேனனுடையவும் சமாதி, எழுத்தச்சன் பயன்படுத்திய நாராயம், அவர் பூஜை செய்துவந்த சாளகிராமம், சிலைகள், அந்த நாராயத்திலிருந்து வெளிவந்த புண்ணிய எழுத்துக்கள் உள்ள ஓலைச் சுவடிகள் போன்றவைகள் யாவும் மிகக் கவனமாக பாதுகாத்து வருகின்றனர். 33 ஆண்டுகள் எழுத்தச்சன் வசித்து வந்த புனித இடமாகும் குருமடம். இச்செய்திகள் யாவும் திரு. நாராயண தாஸ் என்பவர் மாணவர்களுக்கு விளக்கிக் கொடுத்தார். இராமாயணம் வாசித்த ப்ரணீத் என்னும் மாணவனை அவர் பாராட்டினார். துஞ்சத்து எழுத்தச்சனைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு இப்பயணம் மாணவர்களை ஊக்குவித்தது. இப்பயணத்தினால் குழந்தைகள் தங்களது சொந்த நாட்டிலுள்ள வரலாற்றுச் சின்னத்தைப் பற்றி புரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.
உல்லாசகணிதம்
ஒன்றாம் வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கணிதத்தின் அடிப்படைத் திறன்களை அறியச் செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு எஸ்.எஸ்.கேயால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்புத் திட்டமாகும் உல்லாசகணிதம். பாடல்கள், கதைகள், பயிற்சித்தாள்கள், விளையாட்டுகள் போன்றனவற்றை உட்படுத்தி கணிதச் செயல்பாடுகள் தயாரிக்கப்படுகிறது. குழந்தைகள் சுயமாகக் கற்பதற்கான வாய்ப்பளிக்கவும், கணிதத்திறன்கள் முழுமையாக கற்பதற்கு வழிவகுக்கிறது என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். 26.09.2019 வியாழக்கிழமை முனிசிப்பல் தல தொடக்கவிழா நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளியில் நடத்தப்பட்டது. வார்டு கவுன்சிலர் சிவக்குமார் அவர்கள் இவ்விழாவைத் தொடங்கி வைத்தார். தலைமையாசிரியை ஷைலஜா வரவேற்புரை நிகழ்த்தினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். BRC கோர்டினேட்டர் ஜீனா உல்லாசகணிதத்தைப் பற்றிக் கூடுதல் விரிவாகப் பேசினார். ஆசிரியை சுனிதா வாழ்துரையும், ஜெயஸ்ரீ நன்றியுரையும் வழங்கினார்கள். வார்டு கவுன்சிலர் சிவகுமார் ஆஞ்சலீனா என்னும் ஒன்றாம் வகுப்புக் குழந்தையுடன் சேர்ந்து பூவும் பட்டாம்பூச்சியும் என்னும் விளையாட்டை உல்லாசமாக விளையாடி உல்லாசகணிதத்தை வித்தியாசமான முறையில் தொடங்கி வைத்தார். இதோடு சேர்த்து கணிதச் சங்கத்தையும் துவங்கி வைத்தார். ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளின் கணிதக் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. உல்லாசகணிதம் 34 விளையாட்டுக்கள் ஆறு பிரிவுகளாக 50 மணிநேரம் நடத்தப்பட வேண்டிய செயல்பாடாகும். செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி ஜனவரி மாதம் பாதியாகும் பொழுது முற்றுப்பெற வேண்டும்.
- காணொளி காண்போம் -உல்லாசகணிதம்
வகுப்பு பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்
ஓணத்தேர்வில் குழந்தைகளின் தரத்தைப் பற்றி பெற்றோர்களிடம் கலந்துரையாடுவதற்காக 26.9.2019 அன்று வகுப்பு பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம் நடத்தப்பட்டது.
பாடம் 1, வயல்வெளியில்
மகம் நாளில் பாடம்-1, வயல்வெளியில் நிகழ்ச்சியின் பாகமாக வயல்களைச் சென்று பார்வையிட தீர்மானிக்கப்பட்டது. சித்தூர் வால்முட்டியில் உள்ள செல்லன் என்னும் விவசாயியின் வயலிற்கு நாங்கள் சென்றோம். விவசாயத்தையும் மண்ணையும் தொட்டறிய 26.9.2019 வியாழக்கிழமை மதியம் 1:40க்கு பயணம் தொடங்கப்பட்டது. வாய்க்கால் வரப்பு வழியாக நெல்கதிரின் மணம் நுகர்ந்து நாங்கள் நடந்தோம். செல்லன் என்னும் விவசாயியின் வீட்டிற்குச் சென்று, அங்குள்ள பத்தாயப்புரையையும் பழைய பாத்திரங்களையும் பார்த்தோம். இத்தகைய வீடுகள் இன்று குறைந்து கொண்டே வருகிறது. அவர் இருபது வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றார். குழந்தைகள் அவருடன் நேர்காணல் நடத்தினர்.
- எத்தனை ஏக்கர் நிலமுண்டு?
- எந்த நெல்லினத்தை கூடுதலாகப் பயிர் செய்கின்றீர்?
- லாபம் உள்ளதா?
- யார் உதவுகின்றனர்?
- என்னவெல்லாம் வித்துகள் விவசாயம் செய்யப்படுகிறது? ....போன்ற வினாக்களை குழந்தைகள் விவசாயிடம் கேட்டறிந்துகொண்டனர். அவர் கூறிய பதில்களை அவரவர் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டனர். பின்பு விவசாய இடத்திற்கு சென்றோம். கிருஷி பவன் அலுவலர்களான ராதாகிருஷ்ணன், சுரேஷ்பாபு போன்றவர்களும் எங்களுடன் இருந்தனர். அவர்களும் குழந்தைகளோடு உரையாற்றினார். விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தை வளர்ப்பதற்கும் மண்ணை அறிந்து கொள்வதற்குமுள்ள வாய்ப்பிற்காக அனைத்து குழந்தைகளுக்கும் விதைகள் வழங்கப்பட்டது. கூடுதல் நேரம் வயல் வெளியில் விளையாட முடியாத வருத்தம் அனைவருக்கும் இருந்தது. ஆனால் விதைகள் கிடைத்த சந்தோசத்திலும் அதை வளர்ப்பதற்கான ஆர்வத்திலும் எங்களது வருத்தம் மாறியது. இவ்வாறு ஒரு நல்ல வாய்ப்பளித்த செல்லன் என்னும் விவசாயிக்கும் கிருஷிபவன் அலுவலர்களுக்கும் நன்றி சொல்லிக்கொண்டு வயல்வெளியில் கதைகள் சொல்லிக் கொண்டும் நெற்கதிர்களை சுவைத்துக் கொண்டும் பள்ளிக்கூடத்திற்கு திரும்பினோம். ஒரு பொழுதும் மறக்கமுடியாத எங்களது இனியபயணம்...
- காணொளி காண்போம் -பாடம்-1, வயல்வெளியில்
பள்ளி விளையாட்டு விழா
நமது அரசு விக்டோரியா ஆரம்ப பள்ளியில் 27.09.2019அன்று நடைபெற்ற விளையாட்டு விழா குழந்தைகளுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. 2019 -20 கல்வியாண்டில் பள்ளி விளையாட்டு விழாவில் அனைத்து குழந்தைகளும் நல்ல முறையில் பங்கேற்றனர். முன்துவக்கப் பள்ளிக் குழந்தைகளை விளையாட்டுத் துறையில் ஊக்குவிப்பதற்காக சில விளையாட்டுகளும் நடத்தப்பட்டது. ஒன்று, இரண்டு வகுப்புக் குழந்தைகளுக்காக 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், ரிலே மற்றும் ஸ்டாண்டிங் ப்ரோட் ஜம்ப் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. மூன்று, நான்கு வகுப்புக் குழந்தைகளுக்காக 50 மீட்டர், 100 மீட்டர், 4x100 மீட்டர் ரிலே, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக ஆசிரியர்களும், பெற்றோர்களும் கூடவே இருந்தனர். குட்டி விளையாட்டு வீரர்களுக்கு இந்நாள் ஒரு பொன்னாளாக அமைந்தது.
பள்ளியின் கலை பாரம்பரியத்திற்கு புத்துணர்வூட்டியது கலைவிழா - 2019
கலைப் பாரம்பரியத்தில் திகழ்ந்து நிற்கின்ற எங்களது பள்ளிக்கூடத்தில் 30.9.2019 திங்கட்கிழமை கலைவிழா நடத்தப்பட்டது. சிறு குழந்தைகளின் கலைத்திறனை வெளிக்கொணர்ந்து, அதனைப் பாராட்டி முன்னேற்றுவதற்கான முதல் படியே பள்ளிக் கலைவிழா.பள்ளியிலுள்ளஅனைத்துக் குழந்தைகளுக்கும் பங்கேற்பதற்கான வாய்ப்புக் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் அனைவரும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். கதை சொல்லுதல், கவிதை மொழிதல், பேச்சுப் போட்டி, மெல்லிசை, மாப்பிள்ளைப் பாட்டு, திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற பல இனிமையான கலைநிகழ்ச்சிகள் அரங்கேறியது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ஒன்றிற்கொன்று மேம்பட்டதாக இருந்தது.
அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு
பொதுவாக கலைவிழாவிலும் மற்றும் பல போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றவர்களுக்கு மட்டும் பரிசு கிடைக்கும். இது மீதியுள்ள குழந்தைகளுக்கு கவலையாக இருக்கும். இதனை நிவர்த்தி செய்ய அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு கொடுக்க வேண்டும். இரண்டாம் வகுப்பில் படிக்கின்ற அல்னாலாலு என்னும் குழந்தையின் பாட்டி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியையான ராணி ஃபிலோமினா பள்ளிக் கலைவிழாவில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பென்சில் பரிசாக வழங்கினார். நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வம் ஏற்படுத்துவதோடு, பரிசு கிடைக்கவில்லை என்ற கவலையும் எந்தக் குழந்தைக்கும் இருக்காது. குழந்தைகளது மனதை நன்றாகப் புரிந்து கொண்டு பரிசு வழங்கிய ராணி ஃபிலோமினாவுக்கு நன்றி செலுத்தப்பட்டது. இதுபோலவே ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்ற குழந்தைகளுக்குப் பரிசு வழங்கினால் அனைவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பர் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை.
அக்டோபர்
எஸ்.ஆர்.ஜி கூட்டம்
அக்டோபர் 16, 17, 18 தேதிகளில் எருத்தேன்பதி பள்ளியில் வைத்து நடைபெறக்கூடிய உபமாவட்ட அறிவியல் விழாவில் பங்கேற்பதற்கான போட்டிகளைப் பற்றியும் அதற்கு தேவையான பொருட்கள் சேகரிப்பது பற்றியும் 01.10.2019, எஸ்.ஆர்.ஜி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
காந்தி ஜெயந்தி, சேவனவாரம்
அக்டோபர் 2 புதன்கிழமை, காந்தி ஜெயந்தி தினத்தன்று ஆசிரியர்களும் குழந்தைகளும் பயிற்சியாசிரியர்களும் பள்ளிக்கு வந்தோம். காலைக்கூட்டத்தில் காந்திஜியின் பதிப்பு வெளியிடுதலும் குழந்தைகளது கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. பின்பு பள்ளி சுற்றுப்புறத்தைத் தூய்மையாக்கினோம். வேண்டாத செடிகளைக் களைந்தோம்.
உலக உணவு தினம்
உலக உணவு தினமான அக்டோபர் 16ஆம் தேதி குழந்தைகள் வீட்டிலிருந்து கொண்டுவந்த பலவித உணவு வகைகளின் கண்காட்சி நடத்தப்பட்டது. பலவித உணவு வகைகளின் காணொளி காண்பிக்கப்பட்டது. உடலுக்கு தீங்கு விளைவிக்காத வீட்டில் தயாரிக்கப்படும் உணவு வகைகளின் மேன்மைகளை பற்றி கலந்துரையாடப்பட்டது. இது குழந்தைகளுக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது.
எஸ்.ஆர்.ஜி கூட்டம்
அக்டோபர் 31 ஆம் தேதி எஸ்.ஆர்.ஜி கூட்டத்தில் ஸ்ரத்தா (கவனம்) என்னும் திட்டம் பள்ளியில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்று கலந்துரையாடப்பட்டது. 3, 4 வகுப்புகளில் கற்றலில் கடினம் ஏற்படுகின்ற குழந்தைகளுக்காக நடத்தப்படுகின்ற ஒரு திட்டமே ஸ்ரத்தா (கவனம்). இதன் முதல் கட்டம் நவம்பர் 1 முதல் டிசம்பர் 13 வரையும் இரண்டாவது கட்டம் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 15 வரை ஆகும். அனைத்து சனிக்கிழமைகளிலும் ஸ்ரத்தா வகுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.
நவம்பர்
கேரளப்பிறவி
2019 நவம்பர் ஒன்றாம் தேதி இனிதே ஆரம்பித்தது. சிறப்பான முறையில் கேரளப்பிறவி தினம் வெள்ளிக்கிழமை வகுப்பு தலத்தில் கொண்டாடப்பட்டது.
ஸ்ரத்தா (கவனம்)
கூடுதல் மேம்படவேண்டும் ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு வகுப்பும் என்ற லட்சியத்துடன் கேரள கல்வித்துறையின் பரிந்துரைப்படி இவ்வருடமும் ஸ்ரத்தா என்னும் பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நவம்பர் ஒன்றாம் தேதி ஸ்ரத்தா பாடத்திட்டத்தின் தொடக்கத்திற்காக நாங்கள் அக்டோபர் 31 ஆம் தேதியே எஸ்.ஆர்.ஜி கூடி ஸ்ரத்தா தொடக்கம், நடைமுறைப்படுத்தல் போன்றவை பற்றி கலந்துரையாடினோம். மூன்று மற்றும் நான்காம் வகுப்புகளில் இருந்து 25 குழந்தைகளை மலையாள வகுப்புகளில் இருந்தும், 8 குழந்தைகளை தமிழ் வகுப்பிலிருந்தும் தேர்ந்தெடுத்தோம். காலாண்டு மதிப்பீடு மற்றும் தொடர் மதிப்பீடு இவற்றை அடிப்படையாகக் கொண்டு கற்றலில் கடினம் உள்ள குழந்தைகளை தேர்வு செய்தோம். நவம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, முனிசிப்பல் கவுன்சிலர் மணிகண்டன் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். கற்றலில் கூடுதல் கவனம் கொடுப்பதற்காக அரசாங்கம் கொண்டுவந்த ஸ்ரத்தா திட்டம் குழந்தைகளுக்கு நல்ல முறையில் பயன்பட வேண்டும் எனவும், நம்மை சுற்றிலும் உள்ள அனைத்து காரியங்களையும் நாம் கவனிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். தலைமையாசிரியை ஷைலஜா வரவேற்புரை வழங்கினார். கற்றலில் கடினம் உள்ள குழந்தைகளுக்கு உதவுவதற்காக உள்ள ஒரு திட்டமாகும் ஸ்ரத்தா எனவும் அதனால் பெற்றோர்கள் கண்டிப்பாக இந்தத் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கள் குழந்தைகளின் கற்றல் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தலைமையாசிரியை கூறினார். பின்பு இத்திட்டத்திற்காக தேர்வுசெய்யப்பட்ட குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. ஆசிரியை ஹேமாம்பிகா நன்றியுரை வழங்கி இவ்விழாவை முடிவுறச் செய்தார்.
எஸ்.ஆர்.ஜி கூட்டம்
நவம்பர் 13 அன்று எஸ்.ஆர்.ஜி கூட்டம் சேர்ந்து பள்ளிக்கூடம் - மேதைகளுடன் என்னும் திட்டம் அரசு கட்டளையின்படி நடைமுறைப்படுத்த செய்ய வேண்டியவைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. மேலும் குழந்தைகள் தினம், ஹலோ இங்கிலீஷ் ஃபெஸ்ட் போன்றவற்றை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. மதிய இடைவேளையில் மேதைகளை கௌரவப்படுத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.
குழந்தைகளின் நேரு மாமா, நவம்பர் 14 - குழந்தைகள் தினம்
இவ்வாண்டின் குழந்தைகள்தினம் மிகவும் அழகாக நடந்தேறியது. இறை வணக்கத்தோடு தினம் ஆரம்பித்தது. நேருவின் வேடமணிந்த குழந்தைகள் பள்ளிக்கு அழகு சேர்க்கும் வண்ணமிருந்தனர். தலைமை ஆசிரியை ஷைலஜா அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்து கூறினார். இதைத் தொடர்ந்து நேருமாமா பற்றிய காணொளி காண்பிக்கப்பட்டது. எல்லா குழந்தைகளுக்கும் அறிவூட்டும் வகையில் இது அமைவுற்றது. செளபர்னிகா, ஸ்ரேயா போன்ற குழந்தைகளின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. மற்ற குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் அமைந்தது. எல்லா குழந்தைகளும் இந்நிகழ் பங்கேற்று தேசபக்தி பாடல்கள், நேருபற்றிய பாடல்கள், போன்றன பாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது பள்ளியின் உயர்வை காட்டும் வண்ணம் அமைந்தது. பதிப்பு தயார் செய்து கொண்டு வந்தனர். நேருஜி குழந்தைகளுக்கென பல திட்டங்கள் தீட்டியவர். நேருவைப் பற்றி நாம் கூடுதலாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
எஸ்.ஆர்.ஜி கூட்டம்
- தூய்மையான பள்ளிக்கூடமும் சுற்றுப்புறமும்
- குழந்தை உரிமை சட்டம் 2019 - 20
- பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம்
என்னும் செயல்பாடுகளைப் பற்றி நவம்பர் 20 ஆம் தேதி கூடிய எஸ்.ஆர்.ஜி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. நவம்பர் 29ஆம் தேதி பெற்றோர் ஆசிரியர் வலுவாக்கல் முகாம் நடத்தவும் இதனை பி.ஆர்.சியில் தெரிவிப்பதற்கும் தீர்மானம் செய்யப்பட்டது.
டிசம்பர்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
இந்த வருடம் கிறிஸ்துமஸ்ஸை வரவேற்க புல்கூடும் நட்சத்திரங்களும் துவக்கப்பள்ளி வகுப்புகளில் நேரமே அமைக்கப்பட்டது. இதனால் கூடுதல் நாட்கள் புல்கூட்டை பார்ப்பதற்கான வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்தது. 19ஆம் தேதி ஆசிரியை லில்லி அனைத்து குழந்தைகளுக்கும் கேக் வழங்கினார். ஒவ்வொரு வகுப்பினரும் புல்கூடுகள் அமைத்தும் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடியும் கிறிஸ்துமஸை இனிதே வரவேற்றனர். டிசம்பர் 20ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை ஆரம்பித்தது. 30 ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டது.
ஜனவரி
புத்தாண்டு
ஜனவரி ஒன்றாம் தேதி காலைக்கூட்டத்தில் தலைமையாசிரியை ஷைலஜா குழந்தைகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்களைக் கூறினார். குழந்தைகளும் வாழ்த்து அட்டைகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர். அனைத்து குழந்தைகளும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி புத்தாண்டை இனிதே வரவேற்றோம்.
பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம், வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம்
ஜனவரி மூன்றாம் தேதி பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்றனர். தலைமையாசிரியை ஷைலஜா வரவேற்புரை வழங்கினார். இப்பொதுக்கூட்டத்தில் முக்கியமான மூன்று காரியங்கள் கலந்துரையாடப்பட்டது. தீக்காயம் ஏற்பட்ட ஒன்றாம் வகுப்பு மாணவியான ஆஞ்சலினாவிற்கான உதவிநிதி, கல்விச்சுற்றுலா, பள்ளி ஆண்டுவிழா போன்றனவாகும். அனைத்து பெற்றோர்களும் ஆஞ்சலினாவிற்கு ஆதரவு தெரிவித்தனர். கல்விச்சுற்றுலா எர்ணாகுளம் மாவட்டத்திற்கு போகலாம் என்றும் பள்ளி ஆண்டுவிழா மார்ச் மாத முதல் வாரத்தில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. பின்பு வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம் நடந்தது. மாணவர்களுடைய இரண்டாம் பருவ மதிப்பீட்டினுடைய விடைத்தாள்களிலும் கற்றல் வளர்ச்சி பதிவேட்டிலும் பெற்றோர்கள் கையெழுத்திட்டனர்.
வான ஆராய்ச்சி
ஜனவரி மாதத்தில் ஏராளமான நட்சத்திரங்களைக் காணமுடியும். நட்சத்திரங்களைப் பார்ப்பதற்கும் சந்திரனிலுள்ள பள்ளங்களைப் பார்ப்பதற்கும் வேண்டி வானவேடிக்கை லியோ அவர்களது தலைமையில் நடத்தப்பட்டது. குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இது ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது. மாலை 6 மணிக்கு லியோ அவர்களின் வகுப்போடு தொடங்கப்பட்ட வானஆராய்ச்சி இரவு 9 மணி வரை தொடர்ந்தது. சந்திரனில் உள்ள பள்ளங்களை தெளிவாக காண முடிந்தது.
கற்றல் திருவிழா - பிரதிபா சங்கமம் 2019...!
புதுப்பள்ளி பாதுகாப்பு வேள்வியின் பாகமாக உருவாக்கப்பட்டதே கற்றல் திருவிழாக்கள். 2019 ஜனவரி 26 முதல் பள்ளி நுழைவு திருவிழா வரை நீண்டு நிற்கின்ற ஒரு நிகழ்ச்சி ஆகும் இது. ஜி.வி.எல்.பி பள்ளியின் கற்றல் திருவிழா மிகவும் நல்ல முறையில் நடந்தேறியது. பிரதிபா சங்கமம் என்ற பெயரை நாங்கள் கற்ற திருவிழாவிற்காக தேர்ந்தெடுத்தோம். சித்தூரின் இதயப்பகுதியான துஞ்சத்து ஆச்சாரியன் நினைவு நூலகத்தில் 14.2.2019 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சித்தூர்-தத்தமங்கலம் முனிசிபாலிட்டி செயர்மன் கே. மது அவர்கள் பிரதிபா சங்கமத்தை தொடங்கி வைத்தார். வார்டு கெளன்சிலர் சிவகுமார் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார். நூலக அலுவலர், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கே.பி இரஞ்சித், தலைமையாசிரியை ஷைலஜா, அரசு விக்டோரியா மேனிலைப்பள்ளி முதல்வர் இராஜீவன், BPO மனு சந்திரன் போன்றவர்கள் இவ்விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினர். சித்தூரின் இதயப்பகுதி என்பதால் நிறைய பொதுமக்களும் பெற்றோர்களும் நமது பிரதிபா சங்கமத்தில் பங்கு வகித்தனர். மேலும் எங்களது குழந்தைகளின்திறமைகள் யாவும் சபையோர் அனைவரையும் கவர்ந்திழுத்தது. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களையும் உட்படுத்திக் கொண்டுள்ள சிறப்பான ஒரு விழாவாக இருந்தது என்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். குழந்தை மேதைகளுடைய கற்றல் மேன்மைகளை நேரடியாக அறிந்து கொள்ள இது ஒரு அரிய வாய்ப்பு. கவிதை, நாட்டுப்புறப்பாடல், விவசாயப் பாடல், நாடகம், கணித அறிவியல் வினாடி வினா (உடனடி பரிசு, ஆங்கில பேச்சுப் போட்டி, திருட்டுப் பழக்கம் தவறானது என்னும் உண்மையை உணர்த்தும் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் நாடகம், தண்டியாத்திரை, தமிழின் சிறப்பை உணர்த்தும் ஒரு கும்மியாட்டம் போன்ற பல கற்றல் மேன்மைகள் பிரதிபா சங்கமத்தில் இடம்பெற்றது.கேரளம் அனுபவித்த மிகப்பெரிய துன்பம் 2018ல் நடந்த வெள்ளப்பெருக்கு. அதனால் ஏற்பட்ட கொடுமைகளும் கேரள மக்களின் மனதில் அழியாமல் இருக்கிறது. இதன் நேரடி காட்சிகளை உட்படுத்திக் கொண்டு எங்களது குழந்தைகளின் நடனம் பள்ளியின் சிறப்பை பன்மடங்கு உயர்த்தியது. பார்வையாளர்களுக்கு வெள்ளப்பெருக்கக் காட்சிகளை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த இதனால் முடிந்தது. இந்த மாபெரும் வெள்ளப்பெருக்கத்திற்கு காரணம் மனிதர்களாகிய நாமே என்ற உண்மையை உணர முடிந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மதிப்புடையதாகவும் பார்வையாளர்களைக் கவரும்படியாகவும் இருந்தது. பிரதிபா சங்கமம் என்ற தலைப்பு 100% வீதமும் பொருத்தமானதாக இருந்தது. ஆசிரியர் ஜெயஸ்ரீ நன்றியுரை கூறி பிரதிபா சங்கமம்-2019 முற்றுப்பெறச் செய்தார்.
- காணொளி காண்போம் - பிரதிபா சங்கமம் 2019
கற்றல் திருவிழா- 2
அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி சித்தூரின் இரண்டாவது கற்றல் திருவிழா சித்தூர் காவிற்கு அருகாமையில் உள்ள கிராம அலுவலகத்திற்கு முன் நடத்தப்பட்டது. கற்றல் திருவிழாவில் குழந்தைகளுடைய கற்றல் செயல்பாடுகளின் மேன்மை பொதுமக்களின் முன்னிலையில் காண்பிக்கப்பட்டது. சித்தூர் தத்தமங்கலம் நகரசபை கவுன்சிலர் இத்திருவிழாவை தொடங்கி வைத்தார். பொம்மலாட்டம், நாடகங்கள், நாட்டுப்புறப் பாடல், கவிதை சொல்லுதல், பேச்சுப்போட்டி போன்ற கலை நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினார். இரண்டாவது திருவிழாவில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் அனைவரையும் கவர்ந்தது. குழந்தைகளின் செண்டை மேளம் மிக சிறப்பாகவே இருந்தது.
- காணத்தவறாதீர்கள் குழந்தைகளின் - செண்டை மேளம்
தமிழ்தென்றல்
27.1.2020 திங்களன்று ஜி.வி.எல்.பி. பள்ளியில் தமிழ்தென்றலின் தொடக்க விழா நடந்தது. இப்பள்ளியின் முன்னாள் தமிழ்மாணவரும், இப்பள்ளியிலேயே மேனிலைப்பள்ளி முதல்வராக பணியாற்றியவரும் மலப்புறம் RDD ஆக பணி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவருமான K. சிவன் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். தமிழின் பெருமைகளைப் பற்றியும், தாய்மொழியான அனைத்து மொழிகளின் சிறப்பைப் பற்றியும் விரிவாக உரையாற்றினார். அனைவரும் அவரவர் தாய்மொழி ஏதோ அதன் வழியே கற்றுத் தேர்ந்து உயர்நிலையை அடைய வேண்டும் எனவும் அதுவே சிறந்த, எளிய வழியாகும் எனவும் சிறப்பாக கூறினார். சிறப்பு விருந்தினராக கொல்லங்கோடு BPO கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார். அவர் தமிழின் முக்கியத்துவம் பற்றியும், தமிழ்த்தென்றலின் நோக்கம் பற்றியும் சிறப்புரையாற்றினார். 1 முதல் 4 ஆம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளின் பாடல், செய்யுள் மொழிதல், மற்றும் 4. C பிள்ளைகளின் விவசாயம் பற்றிய வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் இனிதே நடைபெற்றது. ஆசிரியை ஜெயஸ்ரீயின் நன்றி உரையுடன் தமிழ் தென்றலின் முதல் பகுதி நிறைவுபெற்றது. தொடர்ந்து பறவை ஆராய்ச்சியாளரான கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பறவைகள் பற்றிய ஒரு சிறப்பான வகுப்பினை மாணவர்களுக்காக நடத்தினார். மிகவும் பயனுள்ள வகுப்பாக இது அமைந்தது. தமிழ்தென்றல் இரு பகுதிகளாக சிறப்புடன் நடைபெற்றது.
- காணொளி காண்போம் -தமிழ்தென்றல்
பிப்ரவரி
ஆங்கில விழா
இந்த வருடத்தின் ஆங்கில விழா பிப்ரவரி 2ஆம் தேதி நடத்தப்பட்டது. பொதுக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் பாகமாக நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்ச்சியே ஆங்கில விழா. குழந்தைகள் ஆங்கில மொழியில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவும் ரசனையோடு கற்பிப்பதற்காகவும் உள்ள ஒரு கற்றல் திட்டமாகும் ஆங்கில விழா. ஜி. வி. ஜி. எச். எஸ். எஸ் சித்தூரின் முன்னாள் பிரின்ஸிப்பாலும், ஆங்கில ஆசிரியையுமான சூரியகுமாரி இவ்விழாவினைத் தொடங்கி வைத்தார். ஆங்கிலக் கல்வியின் சிறப்புக்களைப் பற்றி ஆசிரியை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். எனவே கற்கும் பொழுதும் விருப்பத்தோடு கற்றால் எளிமையாக புரிந்துகொள்ள முடியும் என்று அவர் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தார். குழந்தைகள் அனைவரும் விழாவில் சிறப்பாகப் பங்கேற்றனர். ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ஒன்றிற்கொன்று சிறப்பானதாகவே இருந்தது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஸ்ரீஜித் அவர்கள் விழாவிற்கு தலைமைத் தாங்கினார். ஆங்கில மொழியை விரும்புவதற்கும் எளிமையாக கையாளுவதற்கும் உள்ள ஒரு மனப்பான்மை குழந்தைகளில் வளர்ப்பதற்கான ஒரு தொடக்கமாக இருந்தது இந்த ஆங்கில விழா. இவ்விழாவை மிக நல்ல முறையில் நடத்துவதற்காக குழந்தைகளும் ஆசிரியர்களும் வகித்த பங்கு எடுத்துரைக்க வேண்டிய ஒன்றாகும்.
- காணொளி காண்போம் -ஆங்கில விழா
கற்றல் திருவிழா - விஜயசிற்பம்
சித்தூர், அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியின் 2019 - 20 கல்வியாண்டின் கற்றல் திருவிழா விஜயசிற்பம் என்ற பெயரில் நடத்தப்பட்டது. துஞ்சத்தாசாரியன் நினைவு நூலகத்தில் 20-2-2019 ஆம் தேதி சித்தூர் - தத்தமங்கலம் நகரசபை கவுன்சிலர் பிரியா இவ்விழாவினை தொடங்கிவைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். சித்தூர், பிபிசி மனு சந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்க எக்ஸிக்யூட்டிவ் உறுப்பினர் மோகன்தாஸ், நூலகர் சண்முகம் போன்றோர் இவ்விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினர். குழந்தைகளுடைய தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் ஒவ்வொரு செயல்பாடுகளும் நடந்தேறியது. வகுப்புகளிலிருந்து ஒவ்வொரு குழந்தைகளும் பெற்றெடுத்த கற்றல் அனுபவங்களின் வெளிப்பாடே கற்றல் திருவிழாவில் அரங்கேறியது.
முன் தொடக்கப்பள்ளி குழந்தைகளுடைய இறைவணக்கத்தோடு விழா தொடங்கப்பட்டது. இக்குழந்தைகளின் பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. யானைப் பாடல் பாடியும் பழங்களுடைய நன்மைகளை விவரித்தும் வாரநாட்களின் பாடல் பாடியும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் அனைவரது பாராட்டையும் பெற்றனர். பாடப் பகுதியை நாடகமாக்கியும் அறுவடைப் பாடல், தூய்மை பற்றிய நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை இரண்டாம் வகுப்பு மாணவர்கள் நிகழ்த்தி, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றனர். தனிநபர் சுகாதாரமும் சுற்றுப்புற சுகாதாரமும் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது என்பதை நினைவூட்டும் வகையில் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் நாடகம் நடத்தினர். மேலும் அவர்களுடைய ஆங்கிலப் பாடல், பழங்கள் தன் சிறப்புகளைக் கூறுதல் போன்றவை சிறப்பு மிக்கதாக இருந்தது. பேச்சுப்போட்டி, பாடப்பகுதியிலுள்ள கவிதையினுடைய நடனம், ஆங்கில பாடத்தின் நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை நான்காம் வகுப்பு மாணவர்கள் நிகழ்த்தினர். வில்லுப்பாட்டு, ஆங்கிலப் பேச்சுப்போட்டி போன்ற நிகழ்ச்சிகளை தமிழ் மாணவர்கள் சிறப்பாக நிகழ்த்தினர். பொதுக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் பாகமாக கற்றல் சமூகத்தோடு ஒன்றிணைந்ததற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் இந்த விஜயசிற்பம்.
- காணொளி காண்போம் -விஜயசிற்பம்
நண்பர் கூட்டம்
அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் படிக்கின்ற செரிப்ரல் பாள்ஸி எனும் நோயினால் பாதிக்கப்பட்ட சாந்த்ரா.எஸ் என்னும் குழந்தைக்காக பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி தேதி நண்பர் கூட்டம் என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாந்த்ராவை வரவேற்க பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளும் தயாராக இருந்தனர். பெற்றோருடன் சேர்ந்து வந்த சாந்த்ராவை பூச்செண்டுகள் கொடுத்து பள்ளி குழந்தைகள் வரவேற்றனர். அனைத்து குழந்தைகளும் மிக உற்சாகத்துடன் பல நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டனர். பள்ளியில் உள்ள ஊனமுற்ற குழந்தைகளை உட்படுத்தி நடத்தப்பட்ட காலைக்கூட்டம் அனைவருக்கும் மிகச்சிறந்த ஒரு அனுபவத்தைத் தந்தது. மேலும் எல்லா குழந்தைகளும் சேர்ந்து சாந்த்ராவை ஊர்வலமாக வகுப்பிற்கு அழைத்துச் சென்றனர். ஆசிரியர்கள் அனைவரும் சந்த்ராக் குட்டியை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். எல்லா வகுப்பிலிருந்தும் குழந்தைகள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். பாட்டுப் பாடியும், நடனமாடியும், விளையாடியும் மகிழ்ச்சி நிறைந்த ஒரு அற்புத உலகத்திற்கு குழந்தைகள் அனைவரும் சாந்த்ராவை அழைத்துச் சென்றனர். அவள் மிக மகிழ்ச்சியுடன் இருந்தாள். பள்ளியிலுள்ள நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சாந்த்ராவிற்காக உருவாக்கிய நண்பர் கூட்டம் என்னும் நிகழ்ச்சி மிகப்பெரும் வெற்றியை தந்தது. அனைவராலும் ஒதுக்கப்படுகின்ற ஊனமுற்ற குழந்தைகளுக்கு இவ்வளவு அதிக முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான நிகழ்ச்சியை உருவாக்கியதற்கு சந்திராவின் பெற்றோர்கள் மிகவும் சந்தோஷத்துடன் மனம் திறந்து அனைத்து குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
- காணொளி காண்போம் -நண்பர் கூட்டம்
மார்ச்
ஷலபோல்ஸவம் - 2020
அரசு விக்டோரியாஆரம்பப் பள்ளியின் இவ்வருட ஆண்டுவிழா ஷலபோல்ஸவம் - 2020 என்ற பெயரில் நடத்தப்பட்டது. நவீன காலகட்டத்திற்கு ஏற்றவாறு புதிய புதிய மாற்றங்களை உட்படுத்திக்கொண்டு எவ்வருடமும் போலவே இவ்வருடமும் மிகச் சிறப்பான முறையில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கலை பாரம்பரியத்தில் என்றும் தலை நிமிர்ந்து நிற்கின்ற நமது பள்ளிக்கூடம் குழந்தைகளது கலைத்திறன்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதில் தனிக்கவனம் செலுத்துவதுண்டு. பெற்றோர்களும் குழந்தைகளும் சேர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர். 2020 மார்ச் 5ஆம் தேதி நமது பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சித்தூர்-தத்தமங்கலம் நகரசபை செயர்மேன் கெ.மது தொடங்கி வைத்தார் .குழந்தைகளின் இறைவணக்கத்தோடு தொடங்கிய ஷலபோல்ஸவத்திற்கு தலைமையாசிரியை ஷைலஜா வரவேற்புரை வழங்கினார். முதலில் குத்துவிளக்கு ஏற்றிக்கொண்டு விழா ஆரம்பிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு தலைமை தாங்கியது பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் தலைவர் எம். சாமிநாதன் ஆவார். ஷைலஜா ஒரு வருட பள்ளியின் நிகழ்வுகளை அவையோர் முன் வாசித்தார். பின்பு இந்த வருடம் பிளஸ் டூ தேர்வில் முழு மதிப்பெண்களும் பெற்ற ஆர்ஷியா. எஸ், இந்த வருட எல்.எஸ்.எஸ் தேர்வு வெற்றியாளர்களான ஆராமிகா.ஆர், ஸ்ரியா. எஸ், சூர்யா சுனில்குமார்.எஸ், வைகப்பிரபா.கெ.எ, ஸனிகா. எஸ், ஷிவானி. எஸ் போன்ற மாணவியர்களுக்கும், இந்த வருட சாஸ்திர பிரதிபா வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற இரண்டாம் வகுப்பு மாணவியான இஷா ரஞ்சித்திற்க்கும் செயர்மேன் விருது வழங்கி, பாராட்டினார். மேலும் வார்டு கவுன்சிலர்களான எம்.சிவக்குமார், கெ.மணிகண்டன், ஜி.வி.ஜி.எச்.எஸ்.எஸ் பிரின்சிபால் ஆர். ராஜீவன், சித்தூர் பிபிசி மனு சந்திரன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கே. சிவன் போன்றோர்கள் இவ்விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினர். பின்பு இப்பள்ளியின் ஆசிரியை ஜெயஸ்ரீ அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
சரியாக 6:30 மணிக்கு குழந்தைகளுடைய கலை நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டது. ஒற்றப்பாலத்திலுள்ள நடனம் என்னும் நடனக் குழுவிலுள்ள நடனப் பயிற்சியாளர்களான மணிகண்டன், பிரவீன், ஜம்ஷீர், அனில் போன்றவர்கள் அனைத்து குழந்தைகளுக்கும் மிகச் சிறப்பான முறையில் பயிற்சியளித்தனர். குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் யாவும் ஒன்றிற்கொன்று மேம்பட்டதாகவே இருந்தது. முப்பது கலைநிகழ்ச்சிகள் இவ்விழாவில் அரங்கேறியது. பல வண்ண ஆடைகளை அணிந்து நிற்கின்ற குழந்தைகள் பார்வையாளர்களின் கண்களைக் கவர்ந்தது. அவையோர் மிக அற்புதமாக கைதட்டி ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் பாராட்டினர். கணபதியின் பாடலோடு தொடங்கப்பட்ட ரங்கபூஜை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றது மட்டுமின்றி இவ்விழாவினைத் தொகுத்து நடத்தியதும் குழந்தைகளே. ஒவ்வொரு நிகழ்ச்சியும் தொடங்குவதற்கு முன்பு தொகுப்பாளராக வந்தது குழந்தைகளே என்பது எடுத்துரைக்க வேண்டிய ஒன்றாகும். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் புதுமையான ஒரு அனுபவமாக இருந்தது இவ்வருட ஷலபோல்ஸவம். இவ்விழாவிற்கு திரைக்குப் பின்னால் செயல்பட்ட நடனப் பயிற்சியாளர்களுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.