ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2017-18

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്

2017- 18, பள்ளிச் செயல்பாடுகளும் தினக்கொண்டாட்டங்களும்

ஜூன்

நுழைவுத் திருவிழா

2017- 18 கல்வி ஆண்டின் முதல் நாளான ஜூன் 1- பல்வேறு நிகழ்வுகளுடன் இனிதே தொடங்கியது. வண்ண பலூன்களை கையிலேந்திய வண்ணம் குழந்தைகளும் பெற்றோரும் இன்முகத்துடன் மகிழ்ச்சி பொங்க காட்சியளித்தனர். தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். PTA தலைவர் சிறப்புரையாற்றினார். வார்டு கவுன்சிலர் சிவகுமார் நுழைவுத் திருவிழாவை இனிதே தொடங்கி வைத்தார். வார்டு கவுன்சிலர் மணிகண்டன், PTA துணைத் தலைவர் சுதாகரன் போன்றோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்களுக்கு சீருடை, பாடப்புத்தகம் போன்றன வழங்கப்பட்டது. புதிய மாணாக்கருக்கு கையேடு, பென்சில், செதுக்கி, அழிப்பான் போன்றன அடங்கிய பை இலவசமாய் அளிக்கப்பட்டது.

உலக சுற்றுச் சூழல் தினம்

வழக்கமான முறையில் இவ்வருடமும் ஜூன் 5 பல்வேறு நிகழ்வுகளோடு கொண்டாடப்பட்டது. மாணாக்கர் முத்திரை வாக்கிய அட்டைகளோடு ஊர்வலம் சென்றனர். பதிப்பு, சுவரொட்டி போன்றனவும் தயாரிக்கப்பட்டது. குறுநாடகம், வினாடிப் வினா போட்டி போன்றனவும் நடந்தேறியது. பல்லுயிரியல் பூங்கா உருவாக்கி, மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றுச்சூழல் ஆர்வலர் குஞ்ஞுகுஞ்ஞு என்பவர் இந்நிகழ்வுகளுக்கு தலைமை வகித்தார். இயற்கை வேளாண்மை குறித்தும், பயன்படாத குப்பிகளில் செடி வளர்க்கும் முறை பற்றியும், சொட்டு நீர் பாசனம் பற்றியும் விளக்கமளித்தார். விதைகளை விதைத்தும், கன்றுகள் நட்டும் இந்நாள் சிறப்பாக கடந்து போனது.

வாசிப்பு வாரம்

ஜூன் 19 வாசிப்பு வாரம் இருவார வாசிப்பு விழாவாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் கவிதா தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து எனது வாணி[1] என்ற பள்ளிக்கூட வானொலி நிகழ்வு, நடந்தேறியது. வகுப்பறை நூலகங்கள் விரிவுபடுத்தப்பட்டது. கதை எழுதுதல், கவிதை எழுதுதல், வினாடி வினா நிகழ்ச்சி, சுவரொட்டி தயாரித்தல், வாசிப்பு போட்டி, கையெழுத்து போட்டி போன்றன நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. வைக்கம் முகம்மது பஷீர் அவர்களின்ஒரு சில நூல்களில் வரும் கதாபாத்திரங்களை மாணவர்கள் வேடமிட்டு நடித்துக் காட்டினர்.

யோகா தினம்

யோகா செய்வதனால் ஏற்படும் நன்மைகள், யோகாவின் முக்கியத்துவம் போன்றவற்றை அனைவருக்கும் புரியும் வகையில் கூறி யோகா ஆசிரியர் சுனில் ஜூன் 21 அகில உலக யோகா தினத்தைத் தொடங்கி வைத்தார் . வாரத்தில் 2 நாட்கள் யோகா வகுப்புகள் நம் பள்ளியில் நடக்கிறது. 3, 4 வகுப்பிலுள்ள பிள்ளைகளைக்கு மட்டுமே யோகா வகுப்புகள் உள்ளன.



ஜூலை

பஷீர்தினம்

வாசிப்புவார நிறைவு விழாவுடன், மக்களின் எழுத்தாளர் என அறியப்படும் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் நினைவு தினமும் நடைபெற்றது. இதன் தொடச்சியாக ஜீலை 7 ஆம் தேதி சித்தூரிலுள்ள மலையாள மொழியின் தந்தையான துஞ்சத்து எழுத்தச்சனின் நினைவிடத்திற்கு சென்று வந்தோம்.


இரு வாரவாசிப்பு விழா

இரு வாரவாசிப்பு நிறைவு விழாவினையொட்டி ஜீலை 14 அன்று சித்தூர் துஞ்சன் நினைவு நூலகம் சென்றோம். 4ஆம் வகுப்பு பிள்ளைகளை உட்படுத்திய இப்பயணம் அனைவருக்கும் சிறந்த ஒரு அனுபவமாக அமைந்தது. பல சிறந்த புத்தகங்களின் தொகுப்பு இந்த நூலகத்தில் உண்டு. மலையாளம், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி நூல்கள் இருந்தன.

வித்யாரங்கம், மலையாளஅரங்கு தொடக்கம்

ஜூலை 20 அன்று ஜி.வி.ஜி.எச்.எஸ்.ஆசிரியை உமாமகேசுவரி இரண்டு கல்வி அரங்குகளையும் தொடங்கி வைத்தார்.


சந்திர தினம்

சந்திர தினமான ஜூலை 21, காலையிலேயே குழந்தைகளுக்கு நிலா தொடர்பான காணொளி காண்பிக்கப்பட்டது. மதியம் சிறுபரிசோதனைகள் செய்தும், நிலா வினைப் பற்றிய பாடல்கள் பாடியும் அறிவியல் மன்றம் தொடங்கப்பட்டது. பப்பெட் ஷோ நடைபெற்றது. நீல் ஆம்ஸ்ட்ராங் வேடமணிந்து வந்த மாணவன் அனைவர் கவனத்தையும் ஈர்த்தான்.


பள்ளிபொதுக்குழு

2017- 2018 வருடத்தின் பள்ளிபொதுக்குழு ஜூலை 28 மதியம் கூடப்பட்டது. கவுன்சிலர் சிவகுமார் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை ஷைலஜா நிகழ்வுப் பதிவை வாசித்ததுடன் முன்வருட வரவு, செலவு கணக்குகளை வாசித்தார். 175-ற்கும் அதிகமான பெற்றோர்கள் பங்கெடுத்த இக்கூட்டத்தில் புதிய PTA தலைவராக ரஞ்சித் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். PTA துணைத் தலைவராக சுதாகரனும் MPTA தலைவியாக ஷீபாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


ஆகஸ்ட்

ஹிரோஷிமா தினம்

ஆகஸ்ட் 6, ஹிரோஷிமா தினத்தன்று முத்திரை வாக்கிய அட்டைகளுடன் போர் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. போரின் துன்பங்களை உணர்த்த ஹிரோஷிமா, நாகசாகி சம்பவங்களின் காணொளி காண்பிக்கப்பட்டது. ஆகஸ்ட் 9 அன்று வெள்ளையனே வெளியேறு, உப்பு சத்தியாகிரகம், வாகன் துயரம் போன்ற முக்கிய சரித்திர நிகழ்வுகளுடையவும் காணொளி காண்பித்தது பிள்ளைகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக மாறியது.


சுதந்திர தினம்

ஆகஸ்ட் 15, 70 ஆம் சுதந்திர தின விழாவான இன்று 9 மணியளவில் PTA தலைவர் கொடியேற்றி வாழ்த்துரை வழங்கினார். குழந்தைகளின் சுதந்திரதின பதிப்பு வெளியிடப்பட்டது. தேசபக்திப் பாடல்கள் பாடியும் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளுடனும் இனிப்பு வழங்குதலுடன் விழா இனிதே முடிவுற்றது.


செப்டம்பர்

ஓணவிழா

எல்லா வருடமும் பெற்றோரின் சிறந்த ஒத்துழைப்புடன் நடத்தக் கூடிய ஒரு சுபநிகழ்வாகும் ஓணவிழா. தாய்மார்கள், பெற்றோர்கள் அனைவரும் சேர்ந்து 500 பேருக்கு ஓணவிருந்து சமைத்தோம். இது ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும் பூக்களமிட்டும், ஓணப் பாட்டு, திருவாதிரைகளி, சுந்தரிக்கு பொட்டிடுதல், புலியாட்டம், மகாபலி, வாமன வேடம் அணிதல் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

பள்ளித் தேர்தல்

இந்த மாதத்தின் மிகச்சிறந்த ஒரு நிகழ்ச்சியாகும் பள்ளித் தேர்தல். குழந்தைகளையே தேர்தல் அலுவலர்களாக பணி செய்து சிறப்பான முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. குழந்தைகளுக்கு விருப்பமான சின்னங்கள் கொடுத்து வாக்களித்த முறை குழந்தைகளை ஆச்சரியப்படுத்தியது. இவ்வாறு பள்ளித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்டோபர்

காந்தி ஜெயந்தி

அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி விழாவில் ஒன்று முதல் நான்கு வரையுள்ள குழந்தைகள் பங்கேற்றனர். தலைமையாசிரியை காலைக்கூட்டத்தில் காந்திஜெயந்தி தின அறிக்கையை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்தார். காந்திஜியினுடைய வாழ்க்கை வரலாறு, காந்திக் கதைகள், வெள்ளையனே வெளியேறு, தண்டி யாத்திரை போன்ற காணொளி (வீடியோ) காண்பிக்கப்பட்டது.


உப மாவட்ட விளையாட்டு விழா

பள்ளி விளையாட்டுப் போட்டி அக்டோபர் 9ஆம் தேதி நடத்தப்பட்டது. மிக உற்சாகத்தோடு அனைத்து குழந்தைகளும் 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற போட்டிகளில் பங்கெடுத்தனர். இதிலிருந்து உபமாவட்ட விளையாட்டுப் போட்டிக்காக குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பயிற்சிகளும் கொடுக்கப்பட்டது. உபமாவட்ட விளையாட்டு போட்டி கஞ்சிக்கோடு அசீசி பள்ளியில் வைத்து அக்டோபர் 10ஆம் தேதி நடந்தது. நமது பள்ளியிலிருந்து 19 குழந்தைகள் பங்கேற்றனர்.

பள்ளிக் கலைவிழா

பள்ளிக் கலைவிழா 20, 21 தேதிகளில் நடந்தது. 20-ஆம் தேதி கூடுதல் போட்டிகள் நடைபெற்றது. 21ஆம் தேதி தமிழ் கலை விழா நடந்தது. உபமாவட்ட கலை விழாவிற்காக ஓவியப்போட்டி, கர்நாடக சங்கீதம், கவிதை மொழிதல், கதை சொல்லுதல், மெல்லிசை போன்ற போட்டிகளில் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பயிற்சியும் கொடுக்கப்பட்டது.

உபமாவட்ட அறிவியல் விழா

பள்ளி கைவேலைப் போட்டிகள் செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடத்தப்பட்டது. களிமண் உருவம் செய்தல், ஊதுபத்தி தயாரித்தல், ஃபேப்ரிக் பெயிண்டிங், உபயோகமற்ற பொருட்களை கொண்டு உபயோகமுள்ள பொருட்கள் தயாரித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, குழந்தைகளும் தேர்வு செய்யப்பட்டது. அவர்களுக்கான பயிற்சியும் கொடுக்கப்பட்டது. அறிவியல், சமூக அறிவியல், கணித அறிவியல் வினாடி வினா போட்டிகள் நடத்தி, முதலிடம் மற்றும் இரண்டாவது இடம் பெற்ற குழந்தைகளைக் கண்டறிந்தோம். உபமாவட்ட அறிவியல் விழா அக்டோபர் 25, 26, 27 தேதிகளில் தூய சின்னப்பர் மேல்நிலைப்பள்ளி, கொழிஞ்சாம்பாறையில் நடத்தப்பட்டது. கைவினைப்பொருட்கள் செய்தல், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் போன்ற விழாக்களில் குழந்தைகள் நல்ல முறையில் பங்கேற்று பரிசு பெற்றனர். பேப்ரிக் பெயிண்டிங்கில் ஆஷ்ணா. எஸ், அறிவியல் சார்ட்டில் அபிநந்தன், நந்தனா, சமூக அறிவியல் சார்ட்டில் ஜிதின், விஷால், அறிவியல் சோதனைப் போட்டியில் லக்ஷ்மி, ஆர்யா, சாக்(எழுதுகோல்) தயாரித்தலில் மதுமிதா, எம்ப்ராய்டரியில் தாரா ரமேஷ் போன்றோர் பங்கேற்று பரிசுகளும் வென்றனர். மாவட்டதல அறிவியல் சார்ட் போட்டியில் அபினந்த், நந்தனா என்பவர்களும் பேப்ரிக் பெயின்டிங் போட்டியில் ஆஷ்ணாவும் முதலிடமும் பெற்றனர்.

மாதிரி வகுப்பு பெற்றோர் ஆசிரியர் சங்கக்கூட்டம்

மாதிரி வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நமது பள்ளியில் நல்ல முறையில் நடந்தது. ஓணத்தேர்வில் குழந்தைகள் பெற்ற தரம் பெற்றோர்களுடன் கலந்துரையாடப்பட்டது. பெற்றோர்கள் குழந்தைகளுடைய கற்றல் முன்னேற்ற படிவத்தில் கையெழுத்திட்டனர். பெற்றோர்களுக்கான அழைப்பிதழ் தயாராக்கியது குழந்தைகளே என்பது குறிப்பிடத்தக்கது. BPO மனு சந்திரனும், பிஆர்சி கோர்டினேட்டர் முரளியும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குழந்தைகளின் கற்றல் தரம் ஃப்ளோசார்ட்டாக ப்ரொஜெக்டர் வழி காண்பிக்கப்பட்டது. அனைத்து வகுப்புகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் நடத்தப்பட்டது. குழந்தைகள் பலவிதமான கலைநிகழ்ச்சிகளையும் நிகழ்த்தினர்.

நவம்பர்

கேரளப்பிறவி தினம்

கேரள மண்ணின் மணமுள்ள சில கலைநிகழ்வுகள் நவம்பர் 1 கேரளப்பிறவி தின காலைக் கூட்டத்தில் நடந்தேறியது. இது கேரள பண்பாட்டை அறிந்துகொள்வதற்கு பெரிதும் துணைபுரிந்தது.


குழந்தைகள் தினம்

நவம்பர் 14, குழந்தைகள் தினத்தன்று குழந்தைகள் நேரு மாமாவின் வேடமணிந்து காலைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். முன்தொடக்க குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து காலைக்கூட்டம் நடத்தப்பட்டது. நேருஜியின்ஒலிப்பதிவு ஒலிப்பெருக்கி வாயிலாக ஒலிபரப்பப்பட்டது.

பைலட் பள்ளி

நமது பள்ளியினை பைலட்[2] பள்ளியாக அரசாங்கம் தேர்வு செய்துள்ளது. சித்தூர் உப மாவட்டத்தின் ஒரே ஒரு பைலட் பள்ளி என்னும் பதவியைப் பெற்றுள்ளது நமது ஜி.வி.எல்.பி.பள்ளி சித்தூர். இதன்பலனாக 10 மடிக்கணினியும், 4 ப்ரொஜெக்டர்களும் கிடைத்தது. குழந்தைகளுக்கு IT பயிற்சியளித்து புத்துணர்வூட்டி வருகிறோம். நவம்பர் 17 மதியம் 2 மணிக்கு இதன் திறப்புவிழா நடைபெற்றது. ஜில்லா பஞ்சாயத்து நிலைக்குழு அங்கம் பினுமோள் இதை தொடங்கி வைத்தார்.

பள்ளி நூலகம்

அதிக புத்தகங்களைக்கொண்ட மேம்படுத்தப்பட்ட பள்ளி நூலகம் திறக்கப்பட்டது. நகரசபை செயர்மேன் திருவேங்கிடம் நவம்பர் 17ஆம் தேதி பள்ளிமாணவர் தலைவி ஆஷ்ணாவுக்கு முதல் புத்தகத்தை வழங்கி, தொடங்கி வைத்தார்.

உபமாவட்ட கலை விழா

நவம்பர் 21,22,23,24, தேதிகளில் நடைபெற்ற உபமாவட்ட கலைவிழா நமது பள்ளியில் இனிதே அரங்கேறியது. பள்ளிக்கூடம் முழுதும் திருவிழா போல காணப்பட்டது. பென்சில் டிராயிங், மலையாளம் செய்யுள், வாட்டர் கலர், தேசபக்திப் பாடல், பேச்சுப் போட்டி, தமிழ் கதை சொல்லுதல் போன்ற போட்டிகளில் முதலிடம் பெற்றோம். சிறந்த அரசு பள்ளிக்கான முதலிடமும், உபமாவட்ட அளவில் LP பள்ளிகளில் இரண்டாமிடமும் பெற்றுள்ளோம். இவ்வெற்றிக்கனியை தந்த போட்டியாளர்களுக்கு உளமார்ந்த நன்றியும், பாராட்டுக்களும்.

டிசம்பர்

இரண்டாம் நிலை மதிப்பீடு

டிசம்பர் 15 ஆம் தேதி இரண்டாம் நிலை மதிப்பீடு தொடங்கியது. 22 ஆம் தேதி முடிவடைந்தது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முன்தொடக்கப் பள்ளியினர் உருவாக்கிய புல்கூடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆசிரியை லில்லி தோமஸ் அனைவருக்கும் கேக் வழங்கினார். குழந்தைகள் கிருஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ஊர்வலம் நடத்தினர். டிசம்பர் 22 ஆம் நாள் முதல் கிருஸ்துமஸ் விடுமுறை தொடங்கியது.

ஜனவரி

புத்தாண்டு

டிசம்பர் மாத விடுமுறைக்கு பிறகு ஜனவரி ஒன்றாம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. புத்தாண்டு நல்வாழ்த்துக்களை காலைக்கூட்டத்தில் வைத்து ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டோம். குழந்தைகள் புத்தாண்டு வாழ்த்து அட்டைகள் மற்றும் மிட்டாய்கள் கொடுத்து மகிழ்ந்தனர். இவ்வாறு உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் புத்தாண்டை வரவேற்றனர்.

வகுப்பு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் விழிப்புணர்வு வகுப்பு

ஜனவரி 11ஆம் தேதி வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. பூஜா பெற்றோர்களும் குழந்தைகளும் என்னும் தலைப்பில் வகுப்பெடுத்தார். இது ஒரு கெளன்சிலிங் வகுப்பாக இருந்தது. இது பெற்றோர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருந்தது. ஒவ்வொரு வகுப்பு ஆசிரியர்களும் அவரவரது வகுப்பு மதிப்பீட்டு கிராஃபை ப்ரொஜெக்டர் வழியாக பெற்றோர்களுக்கு விவரித்துக் கொடுத்தனர். பின்தங்கிய நிலையில் நிற்கின்ற பகுதியை சுட்டிக்காண்பித்து, குழந்தைகளுக்கு கற்றலில் உதவவேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தேர்வின் விடைத்தாள்களிலும் கற்றல்முன்னேற்ற படிவத்திலும் பெற்றோர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. அவர்களது கருத்துக்கள் கூறுவதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.

தேசிய இளைஞர் தினம்

தேசிய இளைஞர் தினத்தில் சுவாமி விவேகானந்தர் அவர்களை பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது.


ICT வகுப்பு

ஜனவரி 18 ஆம் தேதி KITE முதன்மைப் பயிற்சியாளர் பிரசாத் நமது பள்ளிக்கு வருகை தந்தார். சுமார் இரண்டு மணிநேரம் ICTன் பயன்பாடு பற்றியும் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றியும் ஆசிரியர்களுக்கு விளக்கினார்.

பிரகதி

ஜனவரி 22ஆம் தேதி பிரகதி[3]யின் படிவம் முனிசிபாலிட்டியில் வழங்கப்பட்டது.


தேசப்பற்று தினம்

ஜனவரி 23, சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளன்று தேசப்பற்று தினமாக காலைக்கூட்டத்தில் நல்ல முறையில் கொண்டாடப்பட்டது.

குடியரசு தினம்

ஜனவரி 26 குடியரசு தினம் எப்பொழுதும் போலவே கொடியேற்றியும் குழந்தைகளுடைய கலைநிகழ்ச்சிகளுடனும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட தலைவர்கள் பற்றிய ஒரு காணொளி காண்பிக்கப்பட்டது.


கல்விச் சுற்றுலா

ஜனவரி 27 ஆம் தேதி கல்விச்சுற்றுலா சென்றோம். 65 குழந்தைகளும் ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் மிகவும் உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் நல்லமுறையில் சென்றோம். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. பீச்சி அணைக்கட்டு, அருங்காட்சியகம், மிருகக்காட்சிசாலை, பிளவர் ஷோ, சினேகதீரம் கடற்கரை என்னும் இடங்களுக்கு சென்றோம். பலவிதமான பூக்களையுடைய திருவிழா குழந்தைகளை வியப்பூட்டியது.

தியாகிகள்தினம்

ஜனவரி 30, தியாகிகள்தினத்தில் மௌன பிரார்த்தனைக்கு பிறகு தொழுநோய் நிவாரண உறுதிமொழி சொல்லிக்கொடுத்து குழந்தைகளையும் சொல்ல வைக்கப்பட்டது.

அபூர்வமான சந்திர கிரகணம்

ஜனவரி 31 ஆம் தேதி 152 வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய அபூர்வ சந்திர கிரகணம் ப்ரொஜெக்டர் மூலம் குழந்தைகளுக்கு காண்பிக்கப்பட்டது. இந்த வானவேடிக்கை குழந்தைகளை ஆச்சரியப்படுத்தியது.

பெப்ரவரி

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு வகுப்பு, மாஸ்டர்பிளான் பிரகதி வெளியீடு

பெப்ரவரி 1 ஆம் தேதி பொதுக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் பாகமாக பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு வகுப்பு பிஆர்சி பயிற்சியாளர் சுமங்கலா நடத்தினார். நமது மாஸ்டர்பிளான் பிரகதியை ஆசிரியை சுனிதாவுக்கு சுமங்கலா வழங்கினார். DPO கிருஷ்ணன் இவ்வேளையில் உடனிருந்தார். 130 பெற்றோர்கள் இவ்வகுப்பில் பங்கேற்றனர்.


மாஸ்டர்பிளான் பிரகதி வெளியீடு

பிப்ரவரி 12 ஆம் தேதி மாஸ்டர்பிளான் பிரகதி வெளியிடப்பட்டது. ஆரம்பப்பள்ளி, உயர் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஒன்றுசேர்ந்து பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

பெப்ரவரி 13

ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி யாவும் ஒன்று சேர்ந்து தயாரித்த பள்ளி முன்னேற்ற படிவத்தினை எம்.எல்.எ கிருஷ்ணன்குட்டி திறந்து வைத்தார். மக்கள்பிரதிநிதிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.


பள்ளி ஆண்டுவிழா

2017-18 கல்வி ஆண்டின் பள்ளி ஆண்டுவிழா பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடத்தப்பட்டது. விழாவினை CTMC கவுன்சிலர் எம். சிவகுமார் தொடங்கி வைத்தார். சீனியர் அசிஸ்டன்ட் ஜெயஸ்ரீ வரவேற்புரை வழங்கினார். தலைமையாசிரியை ஷைலஜா அறிக்கை வாசித்தார். CTMC கவுன்சிலர் சாமிநாதன் மற்றும் மணிகண்டன், அரசு விக்டோரியா மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராஜீவன், BPO மனுசந்திரன், முன்னாள் மாணவர்சங்க கன்வீனர் சிவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இப்பள்ளியில் ஆரம்பக்கல்வி முடித்து, பிறகு பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பிலும் முழு A+ பெற்றவர்கள், எல்.எஸ்.எஸ் வெற்றியாளர்கள், அறிவியல் விழா மற்றும் கலைவிழா வெற்றியாளர்கள் போன்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டது. பின்பு குழந்தைகளுடைய கலைநிகழ்ச்சிகள் இரவு 10 மணி வரை அரங்கேறியது. ஆசிரியை சுப்ரபாவின் மகன் ப்ரணவ் உருவாக்கிய பவர்போயின்ட் பிரசண்டேஷனும் காண்பிக்கப்பட்டது. சுப்ரபா நன்றியுரை வழங்கி இவ்விழாவினை முற்றுப்பெறச் செய்தார்.

மார்ச்

ஆண்டு தேர்வின் முன்னேற்பாடு

மார்ச் 20ஆம் தேதி எஸ்.ஆர்.ஜி கூடி ஆண்டு மதிப்பீட்டைப் பற்றி கலந்துரையாடப்பட்டது. ஒவ்வொரு வகுப்பிலும் பயிற்றுவித்த பாடப்பகுதிகளைப் பற்றியும் மாதிரி வினாத்தாள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. வருடத் தொடக்கத்தில் அனுபவித்த கஷ்டங்கள் வருடக்கடைசியில் மாறி வருவதாக (குழந்தைகளது பாடங்களில்) ஆசிரியர்கள் கூறினர். தேர்வுக்கு கொண்டுவர வேண்டிய பொருட்களைப் பற்றி குழந்தைகளுக்கு அறிவுறுத்த கன்வீனர் கூறினார். 21.3.2018 முதல் 27.3.2018 வரை ஆண்டுத் தேர்வு நடைபெற்றது.


மேன்மைத் திருவிழா (மிகவுற்சவம்)

28.03.2018 ஆம் தேதி, மேன்மைத்திருவிழா[4] நகராட்சி துஞ்சன் நினைவு நூலகத்தில் வைத்து சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. கவுன்சிலர் சிவகுமார் மற்றும் மணிகண்டன், பி.ஆர்.சி கோர்டினேட்டர் சுமங்கலா,PTA எக்ஸிக்யூட்டிவ் உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ரஞ்சித், தலைமையாசிரியை, ஆசிரியர்கள், நூலக அலுவலர், பொதுமக்கள் போன்றவர்கள் இத்திருவிழாவில் பங்கேற்றனர். இவ்விழாவில் குழந்தைகளுடைய நாட்டியகாவியம், பேச்சுப்போட்டி, ஆங்கிலப்பாட்டு, கவிதை சொல்லுதல், புத்தகக் குறிப்பு, வாசிப்பு அட்டைகள் காண்பித்தல், சைகைப்பாடல், நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

ஆவணம்

  1. ஒவ்வொரு வகுப்பிலும் ஒலிபெருக்கிகள் பொருத்தி ஒரு வகுப்பில் இருந்து குழந்தைகள் நிகழ்த்துகின்ற நிகழ்ச்சிகள் அனைத்து குழந்தைகளும் அவரவர் வகுப்பிலிருந்து கேட்பதற்கான ஒரு செயல் திட்டம்
  2. KITEன் பைலட் திட்டம்
  3. ஜி.வி.எல்.பி பள்ளி உருவாக்கிய அகாடமிக மாஸ்டர் பிளானின் பெயர்
  4. 2017-18 கல்வியாண்டில் ஜி.வி.எல்.பி பள்ளி மாணாக்கரின் மேன்மைமிக்க செயல்பாடுகளை ஒருங்கிணைத்து நடத்தியநிகழ்ச்சி