ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2023-24

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
2023 - 24, பள்ளிச் செயல்பாடுகளும் தினக்கொண்டாட்டங்களும்

ஜூன்

பள்ளி நுழைவுத் திருவிழா- 2023

நுழைவுத் திருவிழாவை முன்னிட்டு, பள்ளி மற்றும் அதன் வளாகம் ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்டு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. புதிதாகச் சேர்ந்த அனைத்து முன் தொடக்க மற்றும் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு எழுத்து மந்திரக்கோல் வழங்கப்பட்டது. 4-ம் வகுப்பு நண்பர்கள், குழந்தைகளை கவர பறவைகள் மற்றும் விலங்குகள் போல் வேடமணிந்து விழாவை சிறப்பித்தனர். இந்த ஆண்டு நுழைவுத் திருவிழா தொடக்கப்பள்ளி, உயர் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பிரிவுகள் இணைந்து நடத்தப்பட்டது. மேல்நிலைப் பள்ளி முற்றத்தில் வைத்து நுழைவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு மேல்நிலைப் பள்ளி முதல்வர் டி. கிரி வரவேற்புரை வழங்கினார். சித்தூர் தத்தமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் எம்.சிவக்குமார் நுழைவுத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார். கேரளாவிற்கு ஐந்து நாள் பயணமாக வந்த NIIT அலகாபாத் பேராசிரியர் ரமேஷ் திரிபாதி, தனது மாணவர்களுடன் நுழைவு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பினிதா கே.ஜி விழாவிற்கு நன்றியுரை கூறினார். சித்தூர் ஜெயண்ட்ஸ் கிளப் சார்பில் தொடக்கப் பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு கற்றல் கருவிகள் வழங்கப்பட்டது. நுழைவுத் திருவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

சர்வதேச சுற்றுச்சூழல் தினம்

சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை டி. ஜெயலட்சுமி வரவேற்புரை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி. மோகன்தாஸ் தலைமை வகித்தார். கல்வி நிலைக்குழுத் தலைவர் கே. சுமதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலரும், பிஆர்சி பயிற்சியாளருமான கிருஷ்ணமூர்த்தி தயாரித்த பல்வேறு வகையான பறவைகளின் படங்களின் கண்காட்சி இடம்பெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் லீலா மந்திரத்தில் நடைபெற்ற கேரளாவின் பல்வேறு பறவைகளின் படக் கண்காட்சியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் முன் தொடக்கப் பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கான சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுற்றுச்சூழல் தினம் தொடர்பான கவிதைகள், உரைகள் மற்றும் செய்திகள் போன்ற நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினர். இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் தின உறுதிமொழியை 4-ம் வகுப்பு படிக்கும் ஸ்ரேயாதாஸ் அனைவருக்கும் எடுத்துரைக்க, குழந்தைகள் அனைவரும் அதை ஏற்றுக் கூறினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆசிரியை சுனிதா நன்றி கூறினார். மதியம் 2 மணிக்கு சுற்றுச்சூழல் தின வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.