ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2024-25
ஜூன்
பள்ளி நுழைவுத் திருவிழா 2024-25
நமது பள்ளியின் நுழைவுத் திருவிழா ஓய்வுபெற்ற தலைமையாசிரியை டி. ஜெயலட்சுமி துவக்கி வைத்தார். பிடிஏ தலைவர் பி. மோகன்தாஸ் தலைமை வகித்த இவ்விழாவிற்கு, ஆசிரியை சுனிதா வரவேற்புரை கூறினார். PTA துணைத் தலைவர் ஜி.சுகதன், எஸ்.எம்.சி. தலைவர் கே. பி. ரஞ்சித், எம்.பி.டி.ஏ. தலைவி கே. சுமதி உள்ளிட்டோர் பேசினர். முன்னாள் மாணவன் சுதீஷ் சோபனா இசை பாடினான். புதிய குழந்தைகளுக்கு கற்றல் கருவிகள் வழங்கப்பட்டது. விடுமுறைக்கால செயல்பாடாக நடத்தப்பட்ட நாட்குறிப்பு தயாரிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வகுப்புகளுக்கு வழி நடத்தப்பட்டது.
- வீடியோவைப் பார்ப்போம் - பள்ளி நுழைவுத் திருவிழா 2024
சுற்றுச்சூழல் தினம்
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க புதிய தலைமுறையினருக்கு நினைவூட்ட மற்றொரு சுற்றுச்சூழல் தினம். பள்ளி காலைக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி கூறப்பட்டது. குழந்தைகள் சுவரொட்டிகள் மற்றும் முத்திரை வாக்கியங்களுடன் ஊர்வலம் நடத்தினர். குழந்தைகள் தங்கள் வீடுகளில் மரக்கன்றுகளை நட்டனர். பிடிஏ துணைத் தலைவர் ஜி.சுகதன் குழந்தைகள் பள்ளியில் மரக்கன்றுகள் நடவும் காய்கறி விதைகள் விதைக்கவும் செய்தனர். 3 மற்றும் 4 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- வீடியோவைப் பார்ப்போம் - சுற்றுச்சூழல் தினம் - 2024
மதுரம் மலையாளம்
சித்தூர் ஜெயண்ட்ஸ் குழுவினர் 5 மாத்ருபூமி செய்தித்தாள்களை நமது பள்ளிக்கு வழங்கினர். சித்தூர் ஜெயண்ட்ஸ் குழு தலைவர் ரவிக்குமார், பள்ளி காலைக்கூட்டத்தில் மாணவர் பிரதிநிதிக்கு செய்தித்தாளை வழங்கி துவக்கி வைத்தார். ஜெயண்ட்ஸ் குழு பிரதிநிதிகள், மாத்ருபூமி நிருபர் சுரேந்திரநாத், PTA தலைவர் பி. மோகன்தாஸ், துணைத் தலைவர் ஜி.சுகதன், எஸ்.எம்.சி. தலைவர் கே.பி.ரஞ்சித், ஆசிரியை எஸ். சுனிதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பேசினர். இது குழந்தைகளிடம் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த உதவும்.
வாசிப்பு தினம்
படித்து வளரவும் சிந்தித்து ஞானம் பெறவும் வேண்டும் என நமக்கு கற்றுத் தந்த பி.என்.பணிக்கரை நினைவுகூற வாசிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. 'வாசிப்பு வாரத்தின் தொடக்கமாக காலைக் கூட்டத்தில் வாசிப்பு உறுதிமொழி கூறப்பட்டது. குழந்தைகள் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சுவரொட்டிகளை காட்சிப்படுத்தினர். பள்ளி நூலகத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. வகுப்பு நூலகங்கள் செயல்படத் தொடங்கின. ஒவ்வொரு வகுப்பினரின் செயல்பாடுகளும் காலைக்கூட்டத்தை நிறைவுபடுத்தியது. கவிதை, உரை, பொன்மொழிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழத்தினர். குழந்தையுடன் பெற்றோர் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கும் "நல்ல வாசிப்பு நன்மை வாசிப்பு" என்னும் போட்டியும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் கவிதை மொழிதல், கதை சொல்லுதல், புத்தகக்குறிப்பு ஆகியவை உட்படும். வாசிப்பு வாரத்தின் இறுதியில் பிரபல எழுத்தாளர் வைசாகன் குழந்தைகளுடன் உரையாடினார். மேலும் வாசிப்பு வினாடி வினா வெற்றியாளர்களுக்கும் வகுப்புகளில் நடைபெற்ற வாசிப்பு மற்றும் கையெழுத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
யோகா தினம் மற்றும் இசை தினம்
ஆரோக்கியமான வாழ்வில் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஜூன் 21 ஆம் நாள் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. வாழும் கலை (Art of living) ஆசிரியை லீலா ஜனார்த்தனன் குழந்தைகளிடம் உரையாற்றினார். மேலும் குழந்தைகளுக்கு சில எளிய யோகா பயிற்சிகளும் சொல்லிக் கொடுத்தார். தலைமை ஆசிரியை தீபா, ஆசிரியை சுனிதா உள்ளிட்டோர் யோகாவின் முக்கியத்துவம் பற்றி பேசினர். 1 ஆம் வகுப்பு மாணவன் ஜின்ஸ்வின் கே மற்றும் முன் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இசை தினமும் ஆன இந்த நந்நாளில் பாடல்களைப் பாடினர்.
காய்கறி நாற்றுகள் விநியோகம்
சித்தூர் துஞ்சத்தெழுத்தச்சன் நினைவு நூலக வளாகத்தில், மண்ணுத்தி சவுத் சன் வேளாண் பண்ணை மற்றும் விவசாய பழமர பிரச்சாரக் குழு இணைந்து நடத்திய விழாவில், நமது பள்ளிக்கும் வளர்ப்பு பைகள், காய்கறி நாற்றுகள் மற்றும் இயற்கை உரங்கள் கிடைத்தன. நகரசபைத் தலைவி கே. எல். கவிதா விழாவினைத் துவக்கி வைத்தார். கவுன்சிலர்கள் சுமதி மற்றும் ஷீஜா பேசினர்.
ஜூலை
நல்ல வாசிப்பு நன்மை வாசிப்பு
நமது பள்ளியில் "நல்ல வாசிப்பு நன்மை வாசிப்பு" என்னும் போட்டி வாசிப்பு தினத்தின் தொடர்பாக நடத்திய செயல்பாடாகும் . இது பெற்றோர் மற்றும் குழந்தை இருவரும் பங்கேற்கும் போட்டியாகும். கவிதைமொழிதல், கதை சொல்லுதல், புத்தகக்குறிப்பு ஆகிய போட்டிகள் இடம்பெற்றன. விக்டோரியா நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்தனர். மலையாளம் மற்றும் தமிழ் பிரிவுகளில் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் உண்டு. பெற்றோரின் ஆதரவு குழந்தைகளிடம் நம்பிக்கையை வளர்க்கிறது. மேலும் பெற்றோர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்தல் என்பதுவே இப்போட்டிகளின் நோக்கமாகும்.