സ്കൂൾസൗകര്യങ്ങൾപ്രവർത്തനങ്ങൾക്ലബ്ബുകൾചരിത്രംഅംഗീകാരം

2018 -19, பள்ளிச் செயல்பாடுகளும் தினக்கொண்டாட்டங்களும்

ஜூன்

பள்ளி நுழைவுத் திருவிழா

 

நமது பள்ளியில் ஜூன் ஒன்றாம் நாள் நுழைவு விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு எழுத்துக்களாலான கிரீடம் அணிவித்தோம். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு பரிசுப்பைகள் வழங்கினர். நுழைவுத் திருவிழாப் பாடல் அனைவரும் கேட்கும்படி செய்தோம். கல்வி அமைச்சரின் உறுதிமொழியை அனைவரும் கூறினோம். பள்ளிச் சீருடை மற்றும் புத்தகங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. வார்டு கவுன்சிலர் சிவகுமார் விழாவினைத் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பின்பு அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது.


உலக சுற்றுப்புற தினம்

 

உலக சுற்றுப்புற தினமான ஜூன் 5 ஆம் நாள் சுற்றுப்புற தின உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். குழந்தைகளுடைய பதிப்புகளும் வெளியிடப்பட்டது. தலைமையாசிரியை ஷைலஜா அவர்கள் உலக சுற்றுப்புற தினம் கொண்டாடுவதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் பற்றி குழந்தைகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தைக் குறைக்க வேண்டும் என அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். பின்பு குழந்தைகளுடைய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் சுற்றுப்புறத்தோடு தொடர்புடைய பாடல்கள், கவிதைகள், குறிப்புகள் போன்றன இடம்பெற்றன. குழந்தைகள் ப்ளக்கார்டு பிடித்துக்கொண்டும் பேட்ஜ் அணிந்து கொண்டும் சுற்றுபுற தின ஊர்வலம் நடத்தினர். கவுன்சிலர் சாமிநாதன் மரக்கன்றுகள் நட்டு, சுற்றுப்புற தினத்தைத் தொடங்கி வைத்தார். அனைத்து குழந்தைகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.


முன்னறி சோதனை

ஜூன் 11 ஆம் தேதி வேறு பள்ளிகளிலிருந்து புதிதாக வந்து சேர்ந்த குழந்தைகளுக்கு முன்னறிவு சோதனை நடத்தப்பட்டது.

ஹலோ இங்கிலீஷ்

ஜூன் 12-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஹலோ இங்கிலீஷ் வகுப்பு ஐந்து நாட்கள் இரண்டு மணிக்கூர் வீதம் அனைத்து வகுப்புகளிலும் நடத்தப்பட்டது.


அய்யன்காளி நினைவு தினம்

அய்யன்காளி நினைவு தினமான ஜூன் 18-ம் தேதி சமூக சீர்திருத்தவாதியான அய்யன்காளி அவர்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி, அவரது சேவைகள் பற்றியும் குழந்தைகளுக்கு அறியச் செய்தோம்.


வாசிப்பு வாரம்

 

ஜூன் 19, பி.என் பணிக்கரின் நினைவு நாளை வாசிப்பு தினமாக கொண்டாடினோம். வாசிப்பு தின வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. தலைமையாசிரியை ஷைலஜா முன்னிலையில், குழந்தைகள் கவிதைகள், கதைகள், பி.என் பணிக்கரை பற்றின குறிப்புகள் போன்றவற்றைக் கூறினர். தலைமையாசிரியை அனைவருக்கும் வாசிப்பு தினத்தின் முக்கியத்துவத்தை விவரித்துக் கொடுத்தார். வகுப்பு நூலகமும், பள்ளி நூலகமும் இயன்ற அளவு பயன்படுத்தி வாசிப்புக் குறிப்பு எழுதுவதற்கு குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஒரு வாரம் முழுவதும் வாசிப்பு வாரமாக கொண்டாடப்பட்டது. தமிழ் மற்றும் மலையாள சங்கங்களின் தொடக்கமும், முடிவும் ஒரே நாளில் நடத்தப்பட்டது.


யோகா தினம்

ஜூன் 21 ஆம் நாள் யோகா தினம் கொண்டாடப்பட்டது. யோகா ஆசிரியை கிருஷ்ணம்மாள் யோகா செய்தும், மாணவர்களை செய்ய வைத்துக் கொண்டும் யோகா தினத்தைத் தொடங்கி வைத்தார். அன்று முதல் குழந்தைகளுக்கு யோகா வகுப்பு தொடங்கப்பட்டது. வாழ்க்கையில் யோகாவிற்கு உள்ள முக்கியத்துவத்தை அனைத்துக் குழந்தைகளும் புரியும் விதத்தில் எடுத்துரைத்தார்.


ஹலோ இங்கிலீஷ்

 

ஜூன் 22 அன்று ஹலோ இங்கிலீஷ் என்ற ஓராண்டு திட்டத்தை ஆசிரியை சுமங்கலா துவக்கி வைத்தார். ஆசிரியை ஜீனா உடனிருந்தார். ஒன்றாம் வகுப்பு பிள்ளைகளும் ஆங்கிலத்தில் குறு நிகழ்வு, பாடல்கள், சைகைபாடல்கள், கதைகள், பேச்சுகள் எனப் பல நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அன்றைய தினம் ஆசிரியை சுப்ரபா தலைமையில் ஆங்கில சங்கம் திறப்பு விழாவும் இடம்பெற்றது. அனைத்து ஆசிரியர்களும் ஆங்கிலக் கழகத்தை திறமையாக முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்தனர்.



உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினம்

உலக போதைப்பொருள் எதிர்ப்பு நாளான ஜூன் 26 அன்று, போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி அனைவராலும் எடுக்கப்பட்டது. வகுப்பில் போதைப்பொருள் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அறிமுகம் இல்லாதவர்கள் கொடுக்கும் இனிப்பு மற்றும் தின்பண்டங்களை குழந்தைகள் வாங்க வேண்டாம் என தலைமையாசிரியை ஷைலஜா எச்சரித்தார்.


ஜூலை

மருத்துவர் தினம்

ஜூலை 1ஆம் நாள் மருத்துவரான பிதான் சந்திர ராய் அவர்களது பிறந்தநாளை நாம் மருத்துவர் தினமாக கொண்டாடுகின்றோம். ஆரோக்கியம் என்பது வாழ்க்கை முறையும் உட்பட்டதுதான் என்ற கருத்தினை குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. வீடியோ காட்சியும் காண்பிக்கப்பட்டது.


துஞ்சன் குருமடத்திற்கு ஒரு பயணம்

 

ஜூலை மூன்றாம் தேதி துஞ்சன் குருமடம் சென்றோம். நான்காம் வகுப்புக் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த களப்பயணத்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதனால் துஞ்சன் குருமடத்தின் முக்கியத்துவத்தை அறிய முடிந்தது. அங்கே சில குழந்தைகள் ராமாயணம் வாசித்தனர்.



பஷீர் நினைவு தினம், மொழிச் சங்க துவக்கம், வாசிப்பு வார முடிவு

 

ஜூலை 5 ஆம் நாள் பஷீர் நினைவு தினம், மொழிச் சங்க துவக்கம், வாசிப்பு வார முடிவு என்பன நடத்தப்பட்டது. சேகரிரிபுரம் மாதவன் இந்நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். ஒன்றாம் வகுப்பில் பயிலும் அனஸ்தூப், அனர்கயா என்னும் குழந்தைகளின் தந்தை ஏஞ்சல் பாபு அவர்கள் வரைத்த பஷீரின் படம் வெளியிடப்பட்டது. சேகரிபுரம் மாதவன் குழந்தைகளுக்கு நாட்டுப்புறப் பாடல்களும் கவிதைகளும் பாடிக் கொடுத்தார். கிரிஜா குழந்தைகளுக்கு நாட்டுப்புறப் பாடலை பாடிக் கொடுத்தார். குழந்தைகள் பஷீர் கதைகளான பூமியுடெ அவகாசிகள், பாத்தும்மயுடெ ஆடு போன்றவற்றிலிருந்து சில பாகங்களை மட்டும் நாடகமாக நடித்துக் காண்பித்தனர். பஷீர் கவிதைகளும் கூறினர். வாசிப்புக் குறிப்புகளும் வாசித்தனர். அனைத்து குழந்தைகளும் பதிப்புகள் தயாராக்கியிருந்தனர். ரமணன் புராணம் நாட்டிய காவியமாக நிகழ்த்தினர். தமிழ் குழந்தைகள் நாட்டுப்புற நடனம், திருக்குறள், குழுப்பாடல் போன்றவற்றை நிகழ்த்தினர்.


சந்திர தினம்

 

சந்திர தினமான ஜூலை 21 விடுமுறை நாளானதால் சந்திரத் தினத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் யாவும் ஜூலை 20ஆம் தேதியே நடத்தப்பட்டது. அறிவியல் இலக்கிய பரிஷத் செயலாளர் பிரசாத் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அறிவியல் சங்கத்தின் தொடக்கமும் அன்றைய நாள் நடந்தது. பிரசாத் சந்திரனைப் பற்றியும் கிரகங்களைப் பற்றியும் வெளியேற்றம், வேலியிறக்கம், சந்திரகிரகணம், சூரியகிரகணம் போன்றவற்றைப் பற்றியும் எளிமையான மொழிநடையில் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார். ஜூலை 27-ஆம் தேதி நடைபெறக்கூடிய சந்திர கிரகணத்தை பார்க்க தவறாதீர்கள் என்று குழந்தைகளுக்கு நினைவூட்டினார். பின்பு குழந்தைகள் உருவாகிவந்த ராக்கெட்டின் மாதிரி காண்பிக்கப்பட்டது. குழந்தைகள் ஆம்ஸ்டிராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் போன்றோரது வேடமணிந்து வந்தனர். மற்ற குழந்தைகள் அவர்களிடம் சந்திர பயணத்தின் சிறப்புக்களை கேட்டறிந்தனர். அனைத்து குழந்தைகளும் அவரவர் தயாராக்கி வந்த பதிப்புகளை வெளியிட்டனர். இரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொம்மலாட்டம் நிகழ்த்தினர். ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் நிலாவினுடையவும் நட்சத்திரங்களுடையவும் பாடல்கள் பாடி நடமாடினர். தமிழ் குழந்தைகள் கிரகங்களைப் பற்றிய ஒரு பாடலுக்கு நடனமாடினர். பின்பு காணொளி காண்பிக்கப்பட்டது.


திரு.எ.பி.ஜே அப்துல் கலாம் நினைவு நாள்

 

எ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களைப் பற்றிய குறிப்பு (ஒலி அலைகள்) காலை கூட்டத்தில் அனைத்து மாணவர்களும் கேட்கும்படி செய்தோம். ஒன்றாம் வகுப்பு மாணவர்களான அன்ஸ்தூப், அனர்கயா என்பவர்களின் தந்தை ஏய்ஞ்சல் பாபு வரைந்த எ.பி.ஜே அப்துல் கலாமின் படம் வெளியிடப்பட்டது. அவரது வாழ்க்கை வரலாறு ICT ன் உதவியோடு அனைத்து வகுப்புகளிலும் காண்பிக்கப்பட்டது.


பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம்

 

2018 ஜூலை 31 செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணிக்கு இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 150 பெற்றோர்கள் இதில் பங்கேற்றனர். கவுன்சிலர் பிரியா இப்பொதுக்கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரஞ்சித் கே.பி தலைமை தாங்கினார். தலைமையாசிரியை ஷைலஜா வரவேற்புரை வழங்கினார். மேலும் வரவு செலவு கணக்குகளும் வாசித்தார். பின்பு இவ்வருட பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டது. கே.பி ரஞ்சித் மறுபடியும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் சுவாமிநாதன் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தாய் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவியாக தீபாவும் துணைத்தலைவியாக லக்ஷ்மியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


ஆகஸ்ட்

ஹிரோஷிமா தினம்

 

ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமா தினம் நல்லமுறையில் கொண்டாடப்பட்டது. யுத்தத்தின் கொடுமைகளை குழந்தைகளுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் ஆசிரியை சுப்ரபா வகுப்பு நடத்தினார். குழந்தைகள் உருவாக்கிக் கொண்டு வந்த பிளக்கார்டுகளைப் பிடித்துக்கொண்டு, பாட்ஜ் அணிந்துகொண்டு ஊர்வலம் நடத்தினர். யுத்தம் வேண்டாம் யுத்தம் வேண்டாம் இனி ஒரு யுத்தம் வேண்டவே வேண்டாம் என்னும் முத்திரை வாக்கியத்தை முழக்கிக் கொண்டு ஊர்வலம் நடத்தினர். பதிப்புகளும் படங்களும் குழந்தைகள் உருவாக்கினர். யுத்தத்தினால் ஏற்படும் கொடுமைகளை உணர்த்தும் காணொளி (வீடியோ) காண்பிக்கப்பட்டது. போரின் கொடுமைகள் யாவும் குழந்தைகளுடைய மனதில் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.


சுதந்திர தினம்

 

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் சிறப்பான முறையில் கொண்டாடுவது போல இவ்வருடம் கொண்டாட முடியவில்லை. கனத்த மழையானதனால் குழந்தைகள் குறைவாகவே பங்கேற்றனர். இருப்பினும் வந்த குழந்தைகளை வைத்துக் கொண்டு நல்ல முறையில் கொண்டாடினோம். நமது பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ரஞ்சித் கொடியேற்றினார். தலைமையாசிரியையும் ஆசிரியர்களும் சுதந்திரதினத்தை பற்றியும் சுதந்திரதின நல்வாழ்த்துக்களும் குழந்தைகளுக்கு அறிவித்தனர். குழந்தைகளுடைய தேசபக்திப் பாடல், மாறுவேடம், பேச்சுப்போட்டி போன்ற கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பின்பு அனைவருக்கும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது.


செப்டம்பர்

பள்ளித் தேர்தல்

குழந்தைகளில் ஜனாதிபத்தியத்தின் மதிப்பை வளர்ப்பதற்கும் தேர்தல் எவ்வாறு நடக்கிறது என்பதை அறியச் செய்வதற்காகவும் ஒவ்வொரு பள்ளிகளிலும் தேர்தல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் நடக்கின்ற தேர்தலைவிட முற்றிலும் மாறுபட்டதாக இவ்வருட தேர்தல் நடத்தப்பட்டது. ICT ன் துணையோடு பள்ளித் தேர்தல் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு வகுப்புகளிலும் வகுப்புத் தேர்தல் நடத்தப்பட்டு, வகுப்புத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 4A, 4B, 4C என்னும் மூன்று வகுப்புகளிலுள்ள தலைவர்கள் நோமினேஷன் வழங்கினர். குழந்தைகளே அவர்களுக்குப் பிடித்தமான சின்னங்களைத் தேர்ந்தெடுத்தனர். தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒருவார காலஅளவு கொடுக்கப்பட்டது.

போட்டியாளர்கள்
போட்டியாளர்களின் பெயர் வகுப்பும் பிரிவும் சின்னங்கள்
வரிஷ்ட். எஸ் 4 B ஆப்பிள்
சரண்ஜித். எஸ் 4 A ஸ்ட்ராபெர்ரி
ஸ்ரியா. எஸ் 4 B மாங்காய்
மீரா. எஸ் 4 C பலாப்பழம்
சிவாகினி. எஸ் 4 C வாழைப்பழம்
அஸ்வதி. ஜே 4 A அன்னாசிப் பழம்

செப்டம்பர் ஐந்தாம் தேதி காலை 4 பூத்துகள் 4 வகுப்புகளிலாக அமைக்கப்பட்டது. ப்ரிசைடிங் மற்றும் போளிங் அலுவலர்கள் குழந்தைகளாகவே இருந்தனர். சரியாக காலை 10:30 மணிக்கு தேர்தல் ஆரம்பித்தது. எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் கைப்பேசியில்( மொபைல்) அமைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அனைத்து குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் எலக்ட்ரானிக் வாக்களித்தனர். கை விரலில் மை தடவியது ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய ஒரு அனுபவமாக இருந்தது. எலக்ட்ரானிக் வாக்கு ஆனதனால் வாக்கு எண்ணுதல் மிக மிக சுலபமாக இருந்தது. தேர்தலுக்குப் பிறகு தேர்தல் முடிவும் அதே நாள் அறிவிக்கப்பட்டது. சரண்ஜித் பள்ளித் தலைவராகவும் வரிஷ் பள்ளித் துணைத் தலைவராகவும் அறிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிவு
போட்டியாளர்களின் பெயர் வகுப்பும் பிரிவும் ஓட்டுக்களின் எண்ணிக்கை
சரண்ஜித். எஸ் 4 A 99
வரிஷ்ட். எஸ் 4 B 86
அஸ்வதி. ஜே 4 A 38
ஸ்ரியா. எஸ் 4 B 35
மீரா. எஸ் 4 C 19
சிவாகினி. எஸ் 4 C 13


உலக எழுத்தறிவு தினம்

உலக எழுத்தறிவு தினமான செப்டம்பர் 8 ஆம் தேதி குழந்தைகளுக்கு பதிப்புகள் தயாராக்குதல், வாசிப்பு, கதை சொல்லுதல் போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டது. அனைத்து வகுப்பினரும் இதில் பங்கேற்றனர். குழந்தைகளுக்காக சில வீடியோக்களும் காண்பிக்கப்பட்டது. அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.

வித்தியாசமான விருந்து (சத்யா)

 

ஒவ்வொரு வருடமும் நமது பள்ளியில் ஓண விருந்து தயாராக்குவது உண்டு. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணம் இவ்வருடம் ஓண விருந்து வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. எனினும் குழந்தைகளுடைய வேண்டுகோளுக்கிணங்கி நான்காம் வகுப்பு மாணவர்களுடைய பாடப்பகுதி யோடு தொடர்புபடுத்தி செப்டம்பர் 26ஆம் தேதி ஒரு சிறிய ஓண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து மாணவர்களின் முழு ஒத்துழைப்போடு விருந்து நடந்தேறியது. அனைத்து குழந்தைகளும் ஒவ்வொரு விதமான உணவு வகைகள் வீட்டிலிருந்து கொண்டுவந்தனர். ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவ்வாறு இது ஒரு சிறப்பான விருந்தாக மாறியது. கூட்டுகறி, அவியல், பச்சடி, கிச்சடி, இஞ்சிப் புளி, ஊறுகாய், காளன், ஓலன், ரசம், சாம்பார், மோர், அப்பளம், பழம், பால் பாயசம் போன்ற பல உணவு வகைகளும் விருந்தினை சிறப்பாக மாற்றியது. மகிழ்ச்சியுடன் அனைத்து குழந்தைகளும் இதில் பங்கேற்றனர். குழந்தைகளுடைய ஒற்றுமையும் ஒத்துழைப்பும் சேர்ந்து இவ்விருந்து மாபெரும் வெற்றி அடைந்தது.


வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்

செப்டம்பர் 27ஆம் தேதி வகுப்புதல பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடத்தப்பட்டது. வகுப்பு மதிப்பீடு (தேர்வு) ஒரு கண்ணோட்டம். குழந்தைகளுடைய தரமும் கலந்துரையாடப்பட்டது. குழந்தைகளுடைய பிரச்சினைகள், தூய்மை, நல்ல பழக்கவழக்கங்கள், போன்றன பற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டது. பெற்றோர்களிலிருந்து ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் வீட்டுப்பாடங்களில் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவலாம் என்றும் இக்கல்வியாண்டில் என்னென்ன செயல்பாடுகள் செய்யலாம் என்றும் கலந்துரையாடப்பட்டது. அறிவியல் கண்காட்சி, கலைநிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டி போன்றவை இவ்வருடம் மாவட்ட அளவில் இல்லாததால் பள்ளியில் இப்போட்டிகளை எப்பொழுது நடத்தலாம் என்றும் கலந்துரையாடப்பட்டது. கலைநிகழ்ச்சி அக்டோபர் 26 ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அக்டோபர்

உலக முதியோர் தினம்

அக்டோபர் 1 ஆம் நாள் உலக முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு அவரவரது தாத்தா, பாட்டியை பற்றி சொல்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர்களது நல்ல மனதைப் பற்றி குழந்தைகள் கூறினர். வயதான நமது தாத்தாவையும் பாட்டியையும் பார்த்துக் கொள்வது நம்முடைய கடமையாகும் என்ற அறிவுரை குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டது.


காந்தி ஜெயந்தி

 

ஆசிரியர்களும் குழந்தைகளும் அக்டோபர் 2 ஆம் தேதி பள்ளியில் காந்தி ஜெயந்தி கொண்டாடுவதற்காக ஒன்றுகூடினர். குழந்தைகள் காந்திஜி பற்றிய கவிதைகள் பாடினர். அவர்களது பாதிப்புகளும் காண்பித்தனர். குழந்தைகளது கலைநிகழ்ச்சிகளும் மிக அருமையாக இருந்தது. காந்தி ஜெயந்தி தினமான இன்று உலகம் முழுவதும் அகிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. காந்திஜியினுடைய வாழ்க்கை வரலாறு குழந்தைகளுக்கு ப்ரொஜெக்டர் மூலம் காண்பிக்கப்பட்டது. அவரைப் பற்றின ஒலி அலைகள் குழந்தைகளுக்கு கேள்விக்கப்பட்டது.


அக்டோபர் 23

அக்டோபர் 23ஆம் தேதி வித்யாரங்கத்தினுடைய கவிதை, கதை, நாடகம், நாட்டுப்புறப்பாடல், வரைதல் போன்ற கூட்டங்கள் (குழுக்கள்) உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கூட்டங்களுடைய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டது. குழந்தைகளுடைய மேன்மைகள் மற்றும் திறமைகள் என்னென்ன என்பதை கண்டுபிடிக்க இது மிகச்சிறந்த செயல்பாடாக அமைந்தது.

அக்டோபர் 30 SRG

நவம்பர் 1 கேரளப்பிறவி தினத்தில் குழந்தைகளுடைய கலை நிகழ்ச்சிகள் எப்பொழுது நடத்த வேண்டும்? எவ்வாறு நடத்த வேண்டும்? எங்கு வைத்து நடத்த வேண்டும்? என்றெல்லாம் SRG ல் தீர்மானிக்கப்பட்டது.


நவம்பர்

கேரளப்பிறவி

 

கேரளப்பிறவி தினமான நவம்பர் ஒன்றாம் தேதி நடத்தவேண்டிய நிகழ்ச்சிகள் யாவும் அவரவரது வகுப்பறைகளில் நிகழ்த்த தீர்மானிக்கப்பட்டது. இந்த நன்னாளில் காலைப் பொதுக்கூட்டத்தில் கேரளத்தினுடைய முக்கியத்துவத்தைக் குறித்து தலைமையாசிரியை உரையாற்றினார். பின்பு அனைத்து குழந்தைகளுக்கும் கேரளப்பிறவி நல்வாழ்த்துக்களை வழங்கினார். பின்பு ஒவ்வொரு வகுப்பினரும் தேசபக்தி பாடல், திருவாதிரை, பேச்சுப்போட்டி, கதை சொல்லுதல், கவிதை சொல்லுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். கேரளத்தினுடைய முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்காகவும் கேரள வரலாற்றை அறிந்து கொள்வதற்காகவும் வேண்டி குழந்தைகளுக்கு காணொளி (வீடியோ) காண்பிக்கப்பட்டது. படித்துப் புரிந்து கொள்வதைவிட காணொளி வாயிலாகப் பார்த்து எளிதில் புரிந்துகொண்டனர். ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள குழந்தைகள் யாவும் உருவாக்கிக் கொண்டு வந்த பதிப்புகளை வெளியிட்டனர்.


குழந்தைகள் தினம்

நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை மிக சிறப்பாக கொண்டாடினோம். காலைப் பொதுக்கூட்டத்தில் ஜவஹர்லால் நேருவின் வேடமணிந்து வந்த குழந்தைகள் கண்களைக் குளிரச் செய்தன. முன்தொடக்கப் பள்ளி குழந்தைகளுடைய பாடல் மிக மிக அருமையாக இருந்தது. ஜவஹர்லால் நேருவைப் பற்றி தலைமையாசிரியை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்தார். குழந்தைகளுடைய பேச்சுப் போட்டியும் இடம்பெற்றது. ஒவ்வொரு வகுப்புக் குழந்தைகளும் நேருவைப் பற்றிய பாடல்கள் பாடவும்,கதைகள் கூறவும் செய்தனர். ஒவ்வொரு வகுப்பினரும் தயாராக்கி வந்த பதிப்புகள் காலைக் கூட்டத்தில் வைத்து வெளியிடப்பட்டது.நேருவினுடைய வாழ்க்கை வரலாறு ஒலி அலைகள் மூலம் குழந்தைகளுக்குக் கேள்விக்கப்பட்டது. இவ்வாறு குழந்தைகள்தினம் மிக நல்ல முறையில் கொண்டாடப்பட்டது.

மாற்றுத்திறனாளி வாரக்கொண்டாட்டம்

நவம்பர் 27 முதல் டிசம்பர் 4 வரை நடத்தப்படுகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கொண்டாட்டத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்த வேண்டுமென்று SRGயில் கலந்துரையாடினோம். சமுதாயத்தில் அனைவராலும் ஒதுக்கப்படுகின்ற மாற்றுத்திறனாளிகளை அங்கீகரிப்பதற்கு உதவுகின்ற செயல்பாடுகள் திட்டமிடவும் அவர்களை சமுதாயத்தில் உயர்த்திக் கொண்டு வருவதற்காகவும் வேண்டியே இந்த மாற்றுத்திறனாளி வாரக்கொண்டாட்டம். இதன் நோக்கத்தை ஒவ்வொரு குழந்தைகளும் அறிவதற்காக ஒன்று முதல் நான்கு வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் படம் வரைதல் போட்டி நடத்தப்பட்டது. மூன்று, நான்கு வகுப்புக் குழந்தைகளுக்கு சுவரொட்டி தயாரித்தல் போட்டியும் நடத்தப்பட்டது. முதலிடம் பெற்ற குழந்தைகளுடைய படைப்புகள் பி.ஆர்.சிக்கு அனுப்பப்பட்டது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களது நிகழ்ச்சிகளை உட்படுத்தி மிக நல்ல முறையில் காலைக்கூட்டம் நடத்தினோம்.


டிசம்பர்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

 

இந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மிக சிறப்பாக இருந்தது. 21.12.2018 வெள்ளிக்கிழமை குழந்தைகள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் தாத்தாவின் வேடமணிந்த குழந்தைகள் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்கினர். பிறகுழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் சேர்ந்து ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று பாட்டுகள் பாடிக்கொண்டு புல்கூட்டை பார்த்து மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்த குழந்தைகளது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மேலும் ஆசிரியை லில்லி அனைத்து குழந்தைகளுக்கும் கேக் வழங்கினார். கிறிஸ்துமஸ் தாத்தாவோடு சேர்ந்து குழந்தைகள் பள்ளியைச் சுற்றிலும் ஆடியும் பாடியும் கிறிஸ்துமஸ்ஸை வரவேற்றனர்.


ஜனவரி

தேசிய இளைஞர் தினம்

உலகிலுள்ள இளைஞர்களின் மனதில் இடம் பிடித்த சிறந்த ஆளுமை நிறைந்த ஒருவரென்றால் அது விவேகானந்தர் என்றழைக்கப்படும் நரேந்திரன். இவரின் 156 ஆம் பிறந்த நாளையொட்டிஜனவரி 12ஆம் தேதி இளைஞர் தினம் கொண்டாடினோம். 12 ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறையாதலால் 11 ஆம் தேதி வெள்ளியன்றே கொண்டாடினோம். விவேகானந்தரின் பொன்மொழிகள் காலைக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. அவர் எழுதிய நூல்கள், மேடைபேச்சுகள் பற்றி ஆசிரியர்களால் விவரிக்கப்பட்டதுடன், குழந்தைகள்அவருடைய பதிப்பும் வெளியிட்டனர்.


குடியரசு தினம்

 

தலைமையாசிரியை காலை 9 மணியளவில் கொடியேற்றி, தொடர்ந்து கொடி வணக்கப்பாடல் ஒலிக்க இனிதான குடியரசு தினம் இவ்வருடம் அரங்கேறியது. இந்தியப்பண்பாட்டு மரபினை பாதுகாக்க வலியுறுத்தி தலைமையாசிரியை உரையாற்றினார். அனைத்து வகுப்பு குழந்தைகளும் தேசபக்திப் பாடல்கள் பாடினர். காந்தியடிகள், பண்டித ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற ஆயிரக்கணக்கான தியாகிகளால் கிடைத்த சுதந்திரத்தையும், டாக்டர் .அம்பேத்கர் தலைமையில் உருவான அரசியலமைப்புச் சட்டத்தையும் பேணி காக்கவேண்டிய தலையாய கடமை நம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என ஆசிரியை சுப்ரபா உரையாற்றினார்.


தியாகிகள் தினம்

இந்தியாவின் தேசத்தந்தை காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30 நாம் தியாகிகள் தினமாக கொண்டாடுகிறோம். இன்றைய தினம் காலைக் கூட்டத்தில் காந்திஜியின் வாழ்க்கை வரலாறு, குறிக்கோள்கள் போன்றவற்றை மாணவர் வாசித்தனர். காலை 11 மணியளவில் அன்னாரின் பேரில் அனைத்து தியாகிகளையும் நினைவிற்கொண்டு மெளனப் பிரார்த்தனை செய்யப்பட்டது.


பிப்ரவரி

கல்விச் சுற்றுலா

 

சுற்றுலா என்றாலே பிள்ளைகளுக்கு உற்சாகம் தான். ஒவ்வொரு வருடமும் குழந்தைகளின் மனதை கவரும் விதமாகவும், விளையாட்டு, மன மகிழ்ச்சி போன்றவற்றைத் தூண்டும் விதத்திலும் கல்விச் சுற்றுலா செல்வது வழக்கம். பிப்ரவரி 2ஆம் நாள் பீச்சி அணைக்கட்டு, அருங்காட்சியகம், மிருகக்காட்சி சாலை, ஸ்நேகதீரம் கடற்கரை போன்ற இடங்களுக்கு கல்விச் சுற்றுலா சென்றோம். 75 குழந்தைகள், ஆசிரியர்‍கள் மற்றும் PTA அங்கங்கள் அடங்கிய குழு சென்றோம். முதலில் பீச்சியிலுள்ள அணைக்கட்டுக்கு சென்றோம். பிளாஸ்டிக் பொருட்கள் இல்லை என பரிசோதித்த பின்னர் உள்ளே கடத்தி விட்டனர். தண்ணீர் இயற்கையின் வரம் என்றும் அணைக்கட்டுகளைப் பாதுகாப்பது நமது கடமையாகும் என்று என்றும் சுப்ரபா டீச்சர் விளக்கினார். இதன் அருமை தெரியாமல் மனிதன் நாசம் செய்கின்றான் என்றும் கூறினார். அணைக்கட்டை பார்வையிடும்போது பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுவரக்கூடாது என்று சொல்லப்பட்ட தன் நோக்கம் இதுவே. குழந்தைகள் அனைவரும் உற்சாகத்துடன் அணைக்கட்டை கண்டு மகிழ்ந்தனர். பீச்சி அணைக்கட்டுக்கு உட்பகுதியில் உள்ள பூந்தோட்டத்தில் சென்றபோது குழந்தைகளுடைய மனது விளையாட்டின் மீதுள்ள விருப்பத்தை எங்களுக்கு நேரில் அறிய முடிந்தது. குழந்தைகளுடைய ஒழுக்கமான நடத்தைகள் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை ஆச்சரியப்படுத்தியது.

பின்பு நாங்கள் மிருகக்காட்சி சாலைக்கு சென்றோம். குழந்தைகளுக்கு இது மிக மகிழ்ச்சி மிக்க ஒரு அனுபவமாக இருந்தது. பாட்டி கதைகளிலும் பாடபுத்தக கதைகளிலும் கேட்டும் படித்தும் புரிந்துகொண்ட மிருகங்களையும் பறவைகளையும் நேரில் பார்த்த பொழுது அவர்களுடைய சந்தோஷத்திற்கு அளவே இல்லை.. ஒவ்வொரு பறவைகளையும் விலங்குகளையும் பார்க்கும்பொழுது குழந்தைகள் அவற்றின் பெயரையும் சிறப்புகளையும் ஆசிரியர்களிடம் கேட்டு புரிந்து கொண்டனர். பின்பு பழங்கால பாதுகாப்புகளை நினைவுபடுத்துகின்றன அருங்காட்சியகத்திற்குச் சென்றோம். இது குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாகஇருந்தது. பலவிதமான கற்கள், பழைய காலத்தில் பயன்படுத்திய ஆயுதங்கள், மிருகங்களின் எலும்புக்கூடுகள் போன்றன குழந்தைகளுக்கு வியக்கத்தக்க ஒரு அனுபவமாகவே இருந்தது.

பின்பு சினேஹதீரம் கடற்கரைக்குச் சென்றோம். கடற்கரை என்றாலே குழந்தைகளுக்கு உற்சாகமும் சந்தோஷமும் தான். கடற்கரையில் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி விளையாடி மகிழ்ந்தனர். ஏறக்குறைய மாலை நேரமானதும் விளையாட்டை நிறுத்த சொன்னபோது அவர்கள் இனியும் நிறைய நேரம் விளையாட வேண்டுமென்று ஆரவாரத்தோடு ஒரே குரலில் சொன்னது ' சுற்றுலாவினுடைய இனிமையான ஒரு நினைவாகும். சரியாக ஆறு மணிக்கு திரும்பினோம். கல்வி சுற்றுலாவில் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுடையவும் உற்சாகம் ஆசிரியர்களை வியக்க வைத்தது.


புற்றுநோய் தினம்

புற்றுநோய் தினமான பிப்ரவரி 4-ஆம் தேதி குழந்தைகளுக்கு புற்றுநோயைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் ஒரு விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. இந்நோயின் கொடுமையைப் புரிந்துகொள்வதற்காக ஒரு காணொளி (வீடியோ) காண்பிக்கப்பட்டது.

உலக தாய்மொழி தினம்

உலக தாய்மொழி தினமான பிப்ரவரி 21ஆம் தேதி தாய்மொழி உறுதிமொழி காலைக்கூட்டத்தில் வைத்து அனைத்து குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கப்பட்டது. எனது தாய்மொழி என்னும் தலைப்பில் குழந்தைகள் பேசினர். தாய்மொழி தொடர்பாக கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டது. புதிய மொழி விளையாட்டுக்களும் வகுப்புகளில் நடத்தப்பட்டது.

தேசிய அறிவியல் தினம்

சர்.சி.வி. ராமன் அவர்கள் தனது கண்டுபிடிப்பான ராமன் விளைவு உலகத்திற்கு அறியச் செய்த தினமான பிப்ரவரி 28 ஐ நாம் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகின்றோம் என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது.


மார்ச்

ஷலபோல்ஸவம் -2019

 

அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி சித்தூரில் ஷலபோல்ஸவம்[1]-2019 மார்ச் 8 சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இப்பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளின் கண் கொள்ளாகாட்சியாக இருந்தது ஷலபோல்ஸவம்-2019. மிகவும் நல்ல சிறப்புமிக்க நிகழ்ச்சிகளும், குழந்தைகளின் கலை திறன்களும் இப்பள்ளி குழந்தைகளின் சிறப்பை எப்பொழுதும் எடுத்துக் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றது. மாலை 4 மணிக்கு வார்டு கவுன்சிலர் சிவகுமார் இவ்விழாவினைத் துவங்கி வைத்தார். முன்னாள் மாணவர் சங்க தலைவரும், ஓய்வுபெற்ற RDD யுமான சிவன் தலைமை தாங்கினார். மேலும் வாழ்த்துரை வழங்கியது வார்டு கவுன்சிலர்கள் மணிகண்டன் மற்றும் சாமிநாதன், துணை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயஸ்ரீ, BPO மனு சந்திரன், ஆசிரியர் சங்கத் தலைவர் ரஞ்சித், அரசு விக்டோரியா மேல்நிலைப்பள்ளி மேலாளர் ராஜீவன் போன்றவர்களாவர். 2018ல் எல்.எஸ்.எஸ்[2] தேர்வில் வெற்றி பெற்ற ஐந்து மாணவர்களான ப்ரயாக் கிருஷ்ணா, ஆஷ்ணா. எஸ், ஆரதி.ஜெ, நந்திதா கிருஷ்ணா, மேகா போன்றவர்களுக்கு விருதுகளையும்ம் புத்தகங்களையும் வார்டு கவுன்சிலர் சிவகுமார் வழங்கி, பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும் நமது குட்டி செஸ் சாம்பியனான வைகப்பிரபாவுக்கு விருதும், புத்தகங்களும் வழங்கி பாராட்டினார். ஷலபோல்ஸவம்-2018 ன் நிறைவு வேளையில் ஆசிரியை சுப்ரபா நன்றியுரை வழங்கினார். இவ்வருட ஆண்டு விழாவின் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் அனைவரையும் கவரும் வகையிலும், ஒன்றோடொன்று ஒப்புமைப்படுத்த முடியாத அளவுக்கு சிறப்பாகவும் இருந்தது. பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவமாகவும், கண்ணுக்கு விருந்தாகவும் இருந்தது. ஒவ்வொரு வகுப்பினுடைய நிகழ்ச்சிகள் அனைத்தும் கண்களைக் குளிரச் செய்வதாகவே இருந்தது. ஒவ்வொரு நடனத்திற்கும் ஏற்ற ஆடை, அலங்காரங்கள் கண்களை வியக்க வைத்தது. ரங்கபூஜை, ஜப்பானீஸ் நடனம், ராஜஸ்தானிய நடனம், பஞ்சாபி நடனம், காளை விளையாட்டு, நாட்டுப்புற நடனம், மோகினி ஆட்டம், சினிமா பாடல்களுக்கான நடனம், கவிதை சொல்லுதல், பேச்சுப் போட்டி போன்ற கலை நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினர். நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒன்றிற்க்கொன்று மேன்மையான தாகவே இருந்தது. இத்தனை சிறப்புமிக்க நடனங்களையும், சிகை அலங்காரங்களையும் செய்தது ஜின்ஸ்வி கோபாலும், உதவியாளரான விஷ்ணுவும் ஆவர்.

பள்ளியோடு நின்றுவிடுவதில்லை ஆசிரியர் மாணவர் தொடர்பு...

 

எங்களது குழந்தைகளை முழுமையாக புரிந்து கொண்டு, அவர்களது தனித் திறமைகளைக் கண்டறிந்து, அதனை வெளிக் கொணர்ந்து, அவர்களை வெற்றிப் பாதையில் வழிநடத்துவதே அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் முக்கிய பணியாகும். வெறும் பள்ளியோடும், வகுப்பறையோடும் நின்றுவிடாமல் ஒவ்வொரு குழந்தையிலும் ஆழ்ந்து செல்ல வேண்டும் என்னும் நோக்கத்தோடு பிப்ரவரி மாதத்தில் குழந்தைகளின் வீடுகளுக்குச் செல்லப்பட்டது. அனைத்து ஆசிரியர்களும் பல குழுக்களாகப் பிரிந்து, இடங்களை தேர்வு செய்து இந்த நற்செயல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழந்தையும் வாழ்கின்ற சூழ்நிலை, குடும்பச் சூழல், சமூக நிலை போன்றவற்றை மிக நுணுக்கமாக ஆராய்ந்து அவர்களை முன்னேற்றத்திற்கான வழியில் கொண்டு செல்வதற்கான செயல்பாடுகளை நாங்கள் திட்டமிட்டு நடத்தி வருகின்றோம். பள்ளியிலும், வகுப்பறையிலும் நாம் பார்க்கின்ற குழந்தைகள் அல்ல ஒவ்வொரு வீடுகளிலும் நாம் காண்பது. ஒவ்வொரு குழந்தையையும் நாம் முழுமையாகத் தெரிந்துகொள்ள அவர்களது வீட்டு சூழ்நிலை தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளின் வீடுகளுக்கும் சென்று நாங்கள் விசாரிப்பதுண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த செயல்பாடு நல்ல முறையில் ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு சிறந்த பாசப்பிணைப்பு உண்டாகிறது. இது ஒவ்வொரு குழந்தையும் புரிந்து கற்பிக்க ஆசிரியர்களுக்கு பெரிதும் துணை புரிகிறது.


ஆவணம்

  1. ஷலபோல்ஸவம் என்பது 2019ஆம் ஆண்டு அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி நடத்திய ஆண்டுவிழா.
  2. நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசு நடத்தும் உதவித்தொகை தேர்வு