കെ.കെ.എം.എൽ.പി.എസ്. വണ്ടിത്താവളം/தமிழ்/തിരികെ വിദ്യാലയത്തിലേക്ക് 21
மாணவர்களின் எதிர்காலம்
கொரோனா வைரசு (கொவிட்-19) காலப்பகுதியில் கல்வியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், அத்துடன் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கான ஆதரவு.
கொரோனா வைரசால் மாறிய கல்வி: இணையம் இல்லாத மாணவர்களின் எதிர்காலம்
கொரோனா வைரஸ் காரணமாக கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு, ஆன்லைன் கல்வி முறையாக மாறவும் வாய்ப்பாகி இருக்கிறது. ஒவ்வொரு கல்வி ஆண்டும் மாணவர்களின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே திட்டமிட்டு, அட்டவணைப்படி வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. அதற்கு மாணவர்களும் தங்களை தினமும் தயார்படுத்திக் கொள்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த (2020-21) கல்வி ஆண்டு இதுவரை இல்லாத புதுவிதமான ஒன்றாக அமைந்து இருக்கிறது. எந்தவித திட்டமிடலுக்கும் உட்படாத ஒன்றாக மாறி இருக்கிறது. அதற்கு கொரோனா வைரஸ் காரணமாகி விட்டது. அதுவே, கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு, ஆன்லைன் கல்வி முறையாக மாறவும் வாய்ப்பாகி இருக்கிறது. இது ஆசிரியர்களுக்கு எளிதாக இருந்தாலும், பாடங்களை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது பெரிய சவாலாக இருப்பதை மறுக்க முடியாது.
கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஆனாலும் படிப்பு தடைபட கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் வகுப்பறைகள் இல்லை. சக தோழர்கள் இல்லை. விளையாட்டு மைதானம், சந்திப்பு, கலந்துரையாடல் ஆகிய எதுவும் இல்லை. அதை எல்லாம் விட நேரடியாக ஆசிரியர்களின் பார்வை இல்லை என்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இதை எல்லாம் மீறி மாணவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது. எனவே மாணவ மாணவிகள் படிப்பதற்கு பெற்றோர்களின் பங்கு மிகவும் அத்தியாவசியம். அது இல்லை என்றால் ஆன்லைன் கல்வி என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறி விடும்.
எனவே பெற்றோரின் பங்களிப்பால் தான் ஆன்லைன் கல்வியில் அனைத்து மாணவர்களும் இணைய முடிகிறது. அதற்கு செல்போன், இணையதள இணைப்பு ஆகியவை இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நவீன உலகில் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் தொழில்நுட்ப சாதனங்கள் மாணவர்களின் கைகளில் தவழ தொடங்கி உள்ளது. எனவே அதை பயன்படுத்தவும் மாணவ மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஆசிரியர்கள், மாணவர்களை ஆன்லைன் வகுப்புக்கு தயார்படுத்த வேண்டும். அதில் பாடங்களை படிப்பது, எழுதுவது, அதை புரிந்து கொண்டு பதில் அளிக்க வேண்டியதில் உள்ள நுட்பங்களை தெரியப்படுத்த வேண்டியது இருக்கிறது. வீட்டுக்குள் வகுப்பறை சூழலை ஏற்படுத்து வது என்பது நடைமுறையில் இயலாத ஒன்று தான். எனவே குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்த வைப்பது என்பது பெற்றோருக்கு பெரிய சவாலாக மாறி இருக்கிறது. தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் நோட்டு, புத்தகம், பள்ளிச்சூழல், தேர்வு, சிறப்பு வகுப்பு, ஆசிரியரின் கண்காணிப்பு போன்றவற்றில் இருந்து மாணவர்கள் விடுபட்டு உள்ளனர். இதனால் அவர்களுக்கு கற்றலுடன் ஒரு தொடர்பற்ற ஒரு நிலை இருக்கிறது. அதில் தொடர்பை ஏற்படுத்தி நாட்டத்தை ஏற்படுத்துவது முதல் கடமையாகி விட்டது.
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், பாடங்களை நடத்தி, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் தங்களின் குழந்தைகள் பாடங்களை எந்த அளவுக்கு தெளிவாக புரிந்து கொள்வார்கள் என்ற கவலை பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்படுவதை காண முடிகிறது. மேலும் பாடம் தொடர்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் பெற்றோரும் நேரம் செலவிட வேண்டியது இருக்கிறது. ஆன்லைன் முறையிலான புதிய கற்றல் முறைக்கு மாணவர்களை மனரீதியாக தயார்படுத்த வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றை கையாளுவதையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். செல்போன், கணினி ஆகியவற்றில் ஆசிரியர்கள் கொடுக்கும் பாடங்களை படித்து மாணவர்களே கற்றுக்கொள்வார்கள் என்று விட்டு விட கூடாது. அவர்கள் மீது உரிய அக்கறையையும், கண்காணிப்பையும் காட்டி கற்றலில் மேம்பட துணையாக இருக்க வேண்டும்.
ஃபர்ஸ்ட் பெல்
கைகொடுத்த `டிவி சேலஞ்ச்’ -கேரளாவில் நடைமுறைக்குப் பழக்கப்படும் ஆன்லைன் கல்விமுறை!
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் முடங்கியுள்ளன. இருப்பினும் ஜூன் 1ம் தேதி முதல் கேரளாவில் கல்வி தொடர்பான செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது கேரள அரசு. 'ஃபர்ஸ்ட் பெல்' என்ற பெயரில் ஜூன் 1-ம் தேதி அதிகாரபூர்வமாக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ளன.
இந்த வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் பயன்பெற வேண்டும் என அரசு முடிவுசெய்திருந்தது. எனினும் கணக்கெடுப்பு முடிவுகளின் படி ஒன்றாம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை பயிலும் 2.42 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதற்கான ஸ்மார்ட்போன் அல்லது தொலைக்காட்சி வசதிகள் இல்லை. இதனால் அரசு மற்றும் தன்னார்வளர்களும் இணைந்து, அனைத்து மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தைக் காக்கும் பொருட்டு மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யக் களமிங்கியுள்ளனர். நாட்டின் கல்விக்கான இந்த மிக முக்கிய தேவையைப் புரிந்துகொண்டு கட்சிகளைக் கடந்து அரசையும் தாண்டி வணிக நிறுவனங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உதவ முன்வந்துள்ளனர்.
பெரும்பாலும் கேரளாவின் கிராமங்களில் உள்ள மாணவர்களே ஆன்லைன் வகுப்புகளை அணுகுவதில் சிக்கல் நிலவுவதனால் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு அவர்களது உள்ளூர்களிலே மாணவர்கள் சேர்த்து வகுப்புகளைக் காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ``இப்படி ஊர்களில் பொதுவான வகுப்பறைகளை உருவாக்குதல் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பள்ளி மாணவர்களும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துள்ளதை உறுதிப்படுத்த முடியும்" என 'சர்வ சிக்ஷா அபியான் திட்ட இயக்குநர் டாக்டர் ஏ பி குட்டிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சில கிராமங்களில் முன்னாள் மாணவர் சங்கங்கள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு மாணவர்களுக்கு தொலைக்காட்சி முதலிய வசதிகள் செய்யப்படுகின்றன. இதனை ஊக்குவிக்கும் விதமாக மாநில தொழில்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட "டிவி சேலஞ்ச்" என்ற திட்டத்தின் பகுதியாக உள்ளூர் தொழிலதிபர்கள் மூலம் மாணவர்களுக்கு தொலைக்காட்சி வசதிகள் செய்ய நிதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது வகுப்பறைகளுக்குத் தேவையான தொலைக்காட்சி மடிக்கணினி முதலிய பொருள்களை வாங்கும் செலவீனங்களை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செய்து கொள்ளவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவின் பாரம்பர்யமாக அறியப்படும் அங்கன்வாடி, படிப்பகம், உடற்பயிற்சிக் கூடம் எனக் கேரளாவின் அனைத்து கிராமங்களிலும் குறைந்தது அனைத்து மக்களும் பயன்படுத்தக்கூடிய பொதுவான இடம் உள்ளது. தற்போது இந்த இடங்களிலேயே மாணவர்களுக்கான போது வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு சார்ந்த தனியார் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் இந்த இடங்களில் பயிலும் மாணவர்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உதாரணமாக வயநாடு பகுதியில் அதிகபட்சமாக 9,200 மாணவர்கள் தனிப்பட்ட முறையில் தொலைக்காட்சி அல்லது கைபேசி மூலம் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள இயலாத சூழலில் உள்ளனர்.
"மடிக்கணினிகள், ப்ரொஜெக்டர்கள் மற்றும் டிவி போன்ற உபகரணங்கள் பள்ளிகளிலிருந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொது மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. சில மாணவர்களுக்கு வீடுகளிலேயே பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் வைத்திருந்தாலும் அதனை அவர்கள் பணியிடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. எனினும் சிலர் வீட்டிற்கு வந்ததும் அவர்களின் பிள்ளைகளின் வகுப்பிற்காக ஸ்மார்ட்போனைக் கொடுக்கிறார்கள்" எனக் கேரள உள்கட்டமைப்பு மற்றும் கல்விக்கான தொழில்நுட்பத்தின் (KITE) மாவட்ட ஒருங்கிணைப்பாளர், அரசு பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பம் இயக்கப்பட்ட கல்விக்கான நோடல் நிறுவனத்தைச் சேர்ந்த வி.ஜே.தாமஸ் கூறியுள்ளார்.
இந்தக் கல்வி மையங்களில் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைக்காட்சி சேனலில் குறிப்பிட்ட நேரத்திற்குக் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு என அனைத்துப் பள்ளி வகுப்புகளுக்கும் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் அனைவரும் கற்க முடியாத சூழலில் வெளியான பாடப் பிரிவுகள் மீண்டும் ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் ஒன்றாம் வகுப்பிற்குப் பாடல்கள் மூலம் பாடம் எடுத்து கடந்த வாரங்களில் இணையத்தில் பிரபலமான சுவேதா டீச்சர் தான் அரசின் இந்த முயற்சிகள் எந்த அளவிற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது என்பதற்கான சிறந்த உதாரணம்.
ஃபர்ஸ்ட் பெல் வகுப்பு எடுத்த எங்கள் ஆசிரியை
முன்னுரை
“எந்த ஒருநாடும் அந்நாட்டின் ஆசிரியர்களின் தகுதிக்கும் மேலாக உயர்ந்துவிட முடியாது” என்பதோர் பொன்னுரை. எனவே ஒரு நாட்டின் உயர்வும் தாழ்வும் அதன் ஆசிரியர்களிடமே விடப்பட்டுள்ளது. ஆசிரியர் உயர அவர்தம் நோக்குயர, போக்குயர, வாக்குயர நாடே உயரும். எனவே ஆசிரியர்களைக் கல்வியால், பயிற்சியால், தகுதியால், திறனால், தொழிலறத்தால் உயர்த்தியே எந்நாடும் உயர முடியும்.
இந்திய நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள்ளேதான் தீர்மானிக்கப்படுகின்றது. வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப உலகில் மக்களின் முன்னேற்றம், பாதுகாப்பு, நல்வாழ்வு ஆகியவற்றை நிர்ணயிப்பது கல்வியாகும். இக்கல்வி தரமானதாகவும், நாட்டு வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் அமைய முகவர்களாகச் செயல்படுபவர்கள் ஆசிரியர்கள் ஆவர். ஆசிரியர்கள் கற்பிக்கும் திறனும், உயர்ந்த தரமும், செறிந்த பண்பு நலன்களும் பெறத் துணை செய்வது ஆசிரியர் கல்வியாகும். மாணவர் பெறும் தரமான கல்வி ஆசிரியர்கள் பெறும் தரமான கல்வியையே சார்ந்தமையும்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக - திருக்குறள்
வருங்கால நற்குடிமக்களை உருவாக்கும் தலையாய பொறுப்பு ஆசிரியரிடமே உள்ளது. மாணவர்களுக்கு பாடப்பொருளைக் கற்பிப்பதோடு மாணவரின் உள்ளுணர்வை அறிதல் (understanding insight), ஆளுமையை வளர்த்தல், தகவல்களைச் சேகரித்தல், தொடர்புபடுத்திப் பார்த்தல், கற்றதைப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு திறமைகளை வளர்த்தல் ஆசிரியரின் பொறுப்பாகும். மாணவர் தம் வாழ்வில் எதிர்கொள்ள நேரும் பிரச்சனைகளை ஆய்ந்து, அலசிப் பார்த்து தீர்வு காண்பதற்கான திறமைகளை வளர்த்தல் ஆசிரியரின் பொறுப்பாகும். நற்சிந்தனைகளையும், ஆர்வத்தையும் வளர்த்து மாணவர்களிடையே நாட்டுப்பற்று பரிணமிக்குமாறு செய்வதில் ஆசிரியர் உறுதுணையாக நிற்றல் வேண்டும்.
பள்ளிக்கும் சமூகத்திற்கும் ஒர் ஆசிரியர் ஆற்ற வேண்டிய கடமைகளை எவரும் முழுமையாகப் பட்டியலிட்டுக் கூறிவிட முடியாது. ஆசிரியரின் முக்கியத்துவமும், செல்வாக்கும், பயனும், வழிகாட்டுதலும் எங்கு முடிகிறது என எவரும் வரையறுத்துக் கூறுதல் இயலாது. ஆசிரியரின் பணி பன்முகப் பரிமாணங்களை உடையது.
குளிர் காய்பவர் நெருப்புக்கு அஞ்சி அதைவிட்டு அகலாமலும் மிக நெருங்காமலும் அமர்ந்து குளிர் காய்வர். அதுபோல, மாணவனும் ஆசிரியருக்கு அஞ்சி அவரை அகலாமலும் மிகநெருங்காமலும் இருக்கவேண்டும். ஆசிரியரின் நிழல் அவரைவிட்டு நீங்காமல் செல்லும் இடம் எல்லாம் தொடர்ந்து செல்வதுபோல மாணவனும் ஆசிரியரைவிட்டு நீங்காமல் அவரைத் தொடர்ந்து செல்லுதல் வேண்டும். ஆசிரியர்பால் அன்பு மிகக்கொண்டு அவர் எவ்வகையால் எல்லாம் மகிழ்வாரோ அவ்வகையால் எல்லாம் மகிழ்வித்து, அறநெறி மாறா நடத்தை உடையவனாய் ஆசிரியரை ஒரு மாணவன் வழிபாடு செய்தல் வேண்டும்.
ஆசிரியர்களின் சிறப்பு
ஆசிரியர் என்பவர் ஒரு தொழில்நுட்ப வல்லுநர், முன்னோடி, வழிகாட்டி, மாற்றத்தின் பிரதிநிதி, செயல் ஆய்வாளர், அரசின் கல்வித்திட்டங்களைத் திறம்பட நடைமுறைப்படுத்துபவர், நேர்மறைச் சிந்தனையாளர், ஒரு நல்ல மனிதர்.
கல்வி என்பது வெறும் தகவல்களையும், அனுபவத்தினையும் வழங்கும் வெற்றுச்செயலல்ல. ஒரு முழுமையான வாழ்க்கைக்கு உதவும் வகையில் பழக்க வழக்கங்களையும், மனப்பாங்குகளையும், திறன்களையும் வளர்ப்பதும் கல்வியாகும். அத்தகு சிறப்புமிக்க கல்வியை அளிக்கும் பொறுப்பேற்றிருக்கும் ஆசிரியர்கள், மற்றவர்க்கு கற்பிக்கும் வகையில் முன்மாதிரியாகத் தாம் அக்குணங்களைப் பெற்றுப் பணியில் ஈடுபட வேண்டும். தாம் கற்பிக்கும் குழந்தைகள் மீது அக்கறையும், அன்பும் கொண்டு ஒரு முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் முனைப்புடன் நின்று வழிநடத்த வேண்டும்.
ஆசிரியர் ஒரு முன் மாதிரியாகத் திகழ வேண்டுமெனில் அவர் பின்வரும் குறைந்தபட்ச பண்புகளையேனும் பெற்று இருக்க வேண்டும்.
1.திரண்ட ஆளுமைப் பண்புடையவராக இருத்தல்
2.மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளக் கூடியவராக இருத்தல்
3.சுயசிந்தனை மற்றும் ஆக்கத்திறன் மிக்கவராயிருத்தல்
4.செய்யும் பணிக்குத் தன்னை அர்ப்பணித்தவராக இருத்தல்
5.சுமூகமாகப் பழகி ஆக்கபூர்வமான உறவுகளை நிலைநிறுத்திக் கொள்பவராக இருத்தல்
ஆசிரியர் அறிமுகம் -பணி ஈடுபாடு
கல்வி என்பது கற்போர், கற்பிப்போர், சமூகச் சூழ்நிலை இவை மூன்றிற்கும் இடையே ஏற்படும் செயல்பாடாகும். கற்றல், கற்பித்தல் என்பது ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட அற்புதச் செயல்பாடு. இதில் ஆசிரியர் ஒரு செயல்வீரராகச் செயல்பட்டு மாணவர்களின் மதிப்பைப் பெற வேண்டும். ஆசிரியர்கள் பணி மனப்பான்மையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயலாற்ற வேண்டும். கற்பித்தலில் உண்மையான ஆர்வம் கொண்டவராக கற்போரின் மனநிலைக்கு இறங்கி வந்து அவர்களது உணர்வுகளுடன், தம்முடைய உணர்வை இணையச் செய்து, புகட்ட வேண்டும். அவர்கள் வாழ்வு வளம்பெற நாளும் உதவும்போது அவர் ஒரு முன்மாதிரி ஆசிரியராகிறார்.
திருமதி. ஷெஃபினி ஆசிரியை....
1986 மே மாதம் 22ஆம் தேதி தந்தை செய்து முகம்மது (தமிழ் ஆசிரியர்) அவர்களுக்கும் தாயார் சீனத் அவர்களுக்கும் முதல் மகளாக பிறந்தார். தங்களுடைய ஆரம்பக் கல்வி அரசு ஆரம்பப்பள்ளி நெல்லிமேடில் 1994 -ல் முடித்தார்.தொடர்ந்து ஒரு வருடம் மீனாட்சிபுரம் ஜி யு பி எஸ் இ ஐந்தாம் வகுப்பு மாணவியாக 1995 கல்வி கற்றார்.ஆறாம் வகுப்பு 1996 முதல் தனது கல்வியை விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி சித்தூரில் தொடர்ந்தார்.ஒன்பதாம் வகுப்பிற்கான கற்றல் 1999-ல் கே கே எம் எஸ் எஸ் உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பமானது.அந்தப் பள்ளியிலேயே மேற்படிப்பையும் 2002-ல் முடித்தார்.வணிகவியல், வரலாறு,புவியியல்,திட்டவியல் போன்ற பாடங்களை கற்றுத் தேர்ந்தார்.ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணத்தோடும் விடாமுயற்சியோடும் அரசு ஆசிரியை பயிற்சி மையமான சித்தூரில் 2003-ல் பயிற்சி மாணவியாக கற்களானார்.
ஆசிரியப் பணியே அறப்பணி என்ற எண்ணம் மனதில் பசுமரத்தாணி போல பதிந்ததன் காரணத்தால் பயிற்சி மையத்தில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.தொடர்ந்து தந்தையாரினுடைய பள்ளியில் மூன்று மாத காலம் 2005-ல் பொருளாதாரம் துணை ஒன்றும் எதிர்பார்க்காமல் இலவச கல்வியை கற்பித்துக் கொடுத்தார். 2006-ல் அரசுக் கல்லூரி விக்டோரியா பாலக்காட்டில் பி ஏ எக்கனாமிக்ஸ் பட்டதாரி கல்வியை தொடர்ந்தார்.அதே ஆடினுடைய இறுதியில் கே கே எம் எல் பி எஸ் ஆரம்பப்பள்ளி பிரிவில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.அவருடைய கனவு 2007-ல் நனவானது.
2011 - முதல் ஆங்கில பயிற்சி ஆசிரியராக சித்தூர் பி ஆர் சி யின் தலைமையில் பணியாற்றி வந்தார். 2013 -ல் தமிழ் ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆசிரியராக மாநில மாவட்ட உபமாவட்ட முகாம்களில் பங்கு பெற்றார்.தொடரக்கூடிய இந்த கற்பித்தல் அறப்பணி மேலும் தொடர்ந்து கொண்டே வருகிறது. 2019-ல்கொரோனா தொற்று காரணமாக கேரளா அரசு பள்ளிக்கூடங்களில் ஏற்பட்ட கற்றல் இடையூறு காரணமாக பல திட்டங்களை தீட்டியது அதனுடைய அடிப்படையில் தொடங்கிய ஒன்றுதான் பஸ்ட் பல் வகுப்புகள்.
வகுப்புகளுக்கு ஆதரவளிக்க பாலக்காடு மாவட்டத்தில் இருந்து 12 ஆசிரியர்கள் முன் வந்ததனர்.அந்த ஆசிரியர்களில் ஒருவர் தான் மதிப்புக்குரிய ஆசிரியர் திருமதி. ஷெஃபினி.எஸ் அவர்கள்.கற்றல் தடைபட்டு இருக்கக்கூடிய வேலையில் கேரளா அரசு முன்வைத்த திட்டத்தில் ஒன்றுதான் பஸ்ட் பல் வகுப்புகள் அந்த வகுப்புகளில் நமது ஆசிரியருக்கும் வாய்ப்பு கிடைத்தது கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தினார் தொடர்ந்து அவருடைய பங்களிப்பும் அளவு கடந்த ஈடுபாடும் வகுப்புகளை சிறப்பிக்கவும் சரியான வேளையில் வகுப்புகளை முழுமையாக்கி கொடுக்கவும் மதிப்புக்குரிய திரு. கிருஷ்ணமூர்த்தி பி .ஆர். சி .சித்தூர் ,தமிழாசிரியர் தலைமையில் அவரால் முடிந்தது.அவர்களுக்கு எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள்,உறுப்பினர்கள் பஞ்சாயத்து தலைவர் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர் மணிகளின் பெயரில் நன்றி கூறிக் கொள்வதோடு பெருமிதம் கொள்கிறோம்.எங்கள் அனைவருடைய பாராட்டுக்களையும் இந்த நேரத்தில் அர்ப்பணிக்கிறோம்.