ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /துவக்கப் பள்ளி

துவக்கப்பள்ளி

முகவுரை

பெண் குழந்தைகளுக்கு கல்வி தடை செய்யப்பட்ட காலத்தில் அவர்களது கல்வியை முன்னேற்றுவதற்காக கொச்சி ராஜாவால் இப்பள்ளிக்கூடம் துவங்கப்பட்டது. இது மேல்நிலைப் பள்ளியிலிருந்து வேறுபட்டு, 1961 முதல் தனியாக செயல்படத் துவங்கியது. 1966 ஆம் ஆண்டு செஷனல்முறை நடைமுறைக்கு வந்து 1991ல் முடிவுற்றது. இரண்டு முன் துவக்க வகுப்புகளும், இரண்டு பிரிவுகள் வீதமுள்ள மலையாள வகுப்புகளும், ஒவ்வொரு பிரிவுள்ள தமிழ் வகுப்புகளும் இங்கு செயல்பட்டு வருகிறது. முன் துவக்கப்பள்ளியில் 2 ஆசிரியர்களும், நான்கு தமிழ் ஆசிரியர்களும், எட்டு மலையாள ஆசிரியர்களும் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.

முன் துவக்கப்பள்ளி

2000 ஆம் ஆண்டில் நமது மாநிலம் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் பொதுப்பள்ளி பாதுகாப்பின் மூலம் பொதுப் பள்ளிகளில் முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இதன் வாயிலாக நமது பள்ளியின் வளர்ச்சியிலும், கஷ்ட நஷ்டத்திலும் என்றென்றும் உறுதுணையாக உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைமையில் 2004 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு முன் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. அப்போது எம்.எல்.ஏவாக இருந்த திரு. அச்சுதன் அவர்கள் துவங்கி வைத்தார். பதினைந்து குழந்தைகளும் ஒரு ஆசிரியருமாக துவங்கிய நமது முன் துவக்கப்பள்ளியில் தற்போது 70 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும், ஒரு ஆயாவும் உள்ளனர். இவ்வாறு -2 முதல் +2 வரை ஒரே சுற்றுச்சுவராக உள்ள கட்டிடத்திலே நமது அரசு விக்டோரியா ஆரம்பப்பள்ளி நிலை நிற்கிறது.

2004ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 15 குழந்தைகளோடு தொடங்கியதே நமது அரசு விக்டோரியா முன்துவக்கப்பள்ளி. முன்காலங்களில் பாடப்புத்தகங்கள் இல்லாமல் களிவண்டி என்னும் கையேட்டின் உதவியோடு கதையும், விளையாட்டும் என்ற நிலையும் துவங்கினோம். ஒவ்வொரு வருடமும் இங்கு நடைபெறும் கொண்டாட்டங்களில் இக்குழந்தைகளின் பாட்டும், நடனமும், நாடகமும், மாறுவேடமும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. இதன் மூலம் குழந்தைகளின் கலைத் திறனை வளர்க்கவும், மேடை பயத்தைப் போக்கவும் முடிகிறது. பள்ளி விளையாட்டுப் போட்டிகளிலும் இக்குழந்தைகள் பங்கேற்கின்றனர். ஆகவே தனி ஓட்டப்பந்தயம், தவளைச்சாட்டம், பொட்டேட்டோ ரேஸ், எலுமிச்சையும் ஸ்பூனும் போன்ற போட்டிகள் நடத்தி குழந்தைகளின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கின்றோம். இரண்டு முறை நமது பள்ளியிலிருந்து மாவட்ட அளவிலான முன் துவக்கப் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுண்டு. இதில் ஒரு முறை கலாதிலகமும், கலாபிரதிமையும் பள்ளிக் குழந்தைகளே தக்க வைத்தனர்.

2006 ஆம் ஆண்டு குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் இரண்டு ஆசிரியர்களும், ஒரு ஆயாவும் நியமிக்கப்பட்டனர். அந்த வருடமே பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியோடு ஒரு பாட புத்தகம் கொண்டுவரப்பட்டது. பல நல்ல உள்ளங்களின் துணையோடு முன் துவக்கப்பள்ளி நல்ல முறையில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் வந்து சேர்கின்ற குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கும், அவர்களது கலை, விளையாட்டு திறன்களை கண்டறிந்து, அதனை முன்னேற்றவும் முடிகிறது. முன் துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கான பௌதிக சௌகரியங்கள் ஏற்படுத்துவதில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பங்கு பாராட்டுக்குரியது.

முன் துவக்கப்பள்ளி ஆரம்பித்த தலைமை ஆசிரியர்களான திரு. தோமஸ் அவர்களும், திருமதி. அம்பிகா அவர்களும் சேர்ந்து மின்விசிறிகள் நன்கொடை அளித்தனர். அந்தக் காலக் கட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களாக இருந்த திரு. தினேஷ் அவர்கள் பில்டிங் பிளாக்சும், திரு. பிரதீப் அவர்கள் வகுப்பறைக்கு தரையோடும், ஆசிரியர்கள் குழந்தைகளுக்குத் தேவையான மேசைகளும் நன்கொடையாக வழங்கினார். பெஞ்சுகள், டெஸ்க்குகள், அலமாரிகள் போன்றவை பள்ளி நிதியுதவியிலிருந்து வாங்கப்பட்டது. ஆறுமுகன் என்னும் பெற்றோர் குழந்தைகளுக்கு விளையாடுவதற்காக மரக்குதிரை, வாத்து, சைக்கிள், பந்துகள் போன்ற விளையாட்டுச் சாமான்கள் நன்கொடை அளித்தார். விளையாட்டுச் சாமான்கள் வாங்குவதற்காக நிதியிலிருந்து கார்கள், ஸ்கூட்டர்கள், சிறிய பொம்மைகள், வழுக்கள் போன்றவை வாங்கப்பட்டது. பெற்றோர்களின் உதவியோடு வகுப்பறை சுவர்கள் படங்கள் வரைந்து அழகுபடுத்தப்பட்டது. முன் துவக்கப்பள்ளியின் முன்னேற்றத்தில் ஆசிரியர்களுடையவும், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களுடையும் பங்கு குறிப்பிடத்தக்கது.


துவக்கப்பள்ளி

சிறந்த படைப்பாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கிய வரலாறு நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கு உண்டு. இதற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாமல் இன்றும் நமது துவக்கப்பள்ளி செயல்பட்டு முன்னிலையில்தான் நிற்கிறது. இதன் முக்கிய உறைவிடம் இங்குள்ள குழந்தைகளும், ஆசிரியர்களுமே. ஒரு தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் இப்பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். துவக்கப் பள்ளியில் 326 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

ஆசிரியர்கள் அனைவரும் இங்கு பயிலும் அனைத்து மாணவர்களையும் தங்களது சொந்தக் குழந்தைகளைப் போலவே கருதுகின்றனர். இவர்களின் ஒத்துழைப்பும், தியாக மனப்பான்மையும் இப்பள்ளியின் முன்னேற்றத்தின் அடிப்படையாகும். அனைத்து ஆசிரியர்களுக்கும் தேவையான அளவு மடிக்கணினி இருப்பதால் தகவல் தொழில்நுட்பத்தை போதுமான அளவு கற்பித்தலில் உட்படுத்துகின்றனர். கலை, விளையாட்டு போன்ற துறைகளில் எப்பொழுதும் முன்னிலையில் நிற்கிறது நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம். இது மட்டும் அந்த சமூகத் துறையிலும் விலை மதிப்புடைய நன்கொடைகள் வழங்கி வருகின்றோம்.

இப் பள்ளியில் படித்து சென்ற நல்ல நிலையில் உள்ள முந்தைய மாணவர்களை மிகச்சிறந்த மாதிரியாகக் கொண்டு குழந்தைகள் அனைவரும் படித்து வருகின்றனர். புகழ்பெற்ற பின்னணிப் பாடகி பத்மபூஷன் திருமதி பி. லீலா, எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளர் திரு. பத்மராஜனின் மனைவியுமான திருமதி. ராதா லட்சுமி பத்மராஜன், வரலாற்றாசிரியர் திரு. கோபாலன் குட்டி, வரலாற்றிசிரியரும், தமிழ் பண்டிதனுமான திரு.சி கோவிந்தன், திரைக்கதை எழுத்தாளரான திரு ஜோன்போள் போன்ற எண்ணற்றவர்களை உருவாக்கிய ஒரு நீண்ட வரலாறு நமது துவக்கப்பள்ளிக்கு உண்டு.

வேறுபட்ட பல சூழலில் இருந்து வருகின்ற குழந்தைகளாக இருப்பினும் அவர்களது தனிப்பட்ட திறமைகள் எடுத்துரைக்க வேண்டிய ஒன்றே ஆகும். ஒவ்வொரு மாணாக்கரின் சூழ்நிலைகளை அறிந்து கொள்வது ஆசிரியரின் கடமை அல்லவா? எனவே அவர்களது வீடுகளுக்கு சென்று சூழ்நிலைகளை அறிந்து கொள்கின்றோம். மேலும் எங்களால் முடிந்த அளவு அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதும் உண்டு. இவ்வாறு நாங்கள் சேவைகள் செய்து முன்னேற்றப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம்.

குழந்தைகளின் எண்ணிக்கை

வகுப்புகள் மாணவர்கள் மாணவிகள் மொத்தம்
முன் துவக்கப்பள்ளி 34 39 73
1 35 47 82
2 31 42 73
3 33 46 79
4 37 55 92
மொத்தம் 170 229 399

பெற்றோர் ஆசிரியர் சங்கம்

ஒரு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் மிக முக்கியமான ஒன்றாகும். இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் கல்வித்தரத்தையும், பௌதீக சூழ்நிலையையும் உயர்த்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளி உயர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களது ஒத்துழைப்பு முழுமையாக கிடைப்பதுண்டு.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடு கற்றல் துணைக்கருவிகள், பென்ஞ், டெஸ்க் போன்றவை நமது பள்ளிக்கு கிடைத்ததுண்டு. பள்ளியின் கலை, விளையாட்டு செயல்பாடுகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கதே. தற்போதைய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. கே.பி. ரஞ்சித், துணைத் தலைவர் திரு. சாமிநாதன், சங்க உறுப்பினர்கள் திரு.மோகன்தாஸ், திருமதி.ஷீபா, திரு. ஸ்ரீஜித், திருமதி.ஹீரா, திரு. வைவசுதமனு, திரு. சுகதன், திரு.குமார், திருமதி.சுனிதா என்பவர்களாவர். கல்விச்சுற்றுலாவின் போதும் இவர்கள் செய்கின்ற உதவிகள் குறிப்பிடத்தக்கதாகும். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடு தான் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. எம்.எல்.ஏவிடம் அடிக்கடி சென்று தேவைகளை முறையிட்டதன் அடிப்படையில் இது நமக்கு கிடைத்தது.

கோடைக்கால விடுமுறையின் போதும் யோகா வகுப்புகள், அபாக்கஸ் போன்றவை குழந்தைகளுக்காக பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்வதுண்டு. இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடும், உறுதுணையோடுமே நமது அரசு விக்டோரியா ஆரம்பப் பள்ளிக்கூடம் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றது.