ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /ELA

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്
இல (ELA)

கற்றலுக்கு ஒரு நிழல்

2022-23 கல்வியாண்டில் சமக்ரா ஷிக்ஷா கேரளாவால் செயல்படுத்தப்பட்ட ஒரு சிறப்புத் திட்டமாகும் இல (ELA- Enhancing Learning Ambiance மேம்படுத்தும் கற்றல் சூழல்). இந்த திட்டம் 4 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிட் காலத்திற்குப் பிறகு குழந்தைகளின் கற்றலில் உள்ள இடைவெளியைக் குறைத்தல் மற்றும் அறிவை மெருகூட்டும் கற்றல் செயல்பாடுகளை திரும்பப் பெறுதல் ஆகிய இலக்குகளை மனதில் கொண்டு தொகுக்கப்பட்ட ஒரு சிறப்புத் திட்டமே இலா. தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்பாடுகளில் என்னவெல்லாம் நடவடிக்கைகள் மேற்கொள்வது என BRC உதவியுடன் SRG கூட்டத்தில் கலந்துரையாடி முடிவு செய்யப்பட்டது. மலையாளம் மற்றும் சுற்றுச்சூழல் பாடங்களில் வேறுபட்ட செயல்பாடுகள் திட்டமிடப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கதை, கவிதை அரங்கு, வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்வையிடுதல், அறிவியல் சோதனைகள், களப் பயணங்கள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டது.

அறிவியல் விந்தைகள்

||

ELA வின் முதல் செயல்பாடு பிப்ரவரி 2, 2023 வியாழக்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்றது. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சி.பி.சுனந்தன் குழந்தைகளுக்கு அறிவியல் வகுப்பெடுத்தார். வானவில் பற்றிய சுவாரசியமான கதையின் மூலம், நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளும் அறிவியல் சோதனைகளுக்கு ஏற்றது என்பதை தெளிவுபடுத்தினார். கண்ணாடி, தண்ணீர், காகிதம், துணி போன்ற பொருட்களைப் பயன்படுத்தி நீர் மற்றும் காற்று தொடர்பான பரிசோதனைகள் நடத்தி அறிவியல் அதிசயங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சிக்கு பிடிஏ தலைவர் மோகன்தாஸ் தலைமை வகித்தார். நகராட்சிக் கல்வி நிலைக்குழுத் தலைவி கே.சுமதி முன்னிலை வகித்தார். பிஆர்சி பயிற்சியாளர் கிருஷ்ணமூர்த்தி, சிஆர்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீஜா, பிடிஏ துணைத் தலைவர் ஜி.சுகதன், எஸ்எம்சி தலைவர் ரஞ்சித், தலைமையாசிரியை பொறுப்பாளர் சுனிதா, எஸ்ஆர்ஜி கன்வீனர் ஸ்ரீஜா உள்ளிட்டோர் பேசினர். இதைப்போலவே குழந்தைகள் காலை க் கூட்டத்தில் சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி, சோதனைக் குறிப்புகள் எழுதி வருகின்றார்.

சோப்பு தயாரித்தல்

சோப்பு தயாரிப்பது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு பயனுள்ள செயலாக இருந்தது. 10-2-2023 அன்று ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை லதா குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு சோப்பு தயாரிப்பின் பல்வேறு நிலைகளை அறிமுகப்படுத்தப்படுத்தினார். அதன் தொழில்நுட்ப அம்சங்களை மிக விரிவாக விளக்கவும் செய்தார். இந்நிகழ்ச்சியை சித்தூர் - தத்தமங்கலம் நகராட்சி கல்வி நிலைக்குழு தலைவியும், எம்.பி.டி.ஏ., தலைவியுமான சுமதி துவக்கி வைத்தார். விழாவில் வார்டு கவுன்சிலர் ஸ்ரீதேவி ரகுநாத், பி.டி.ஏ., தலைவர் மோகன்தாஸ், துணைத் தலைவர் ஜி.சுகதன், எஸ்எம்சி தலைவர் ரஞ்சித், தலைமையாசிரியை பொறுப்பாளர் சுனிதா, ஆசிரியர் செயலாளர் சுப்ரபா ஆகியோர் பேசினர். இது போன்ற முன்னுதாரணமான செயல்பாடுகள் இன்னும் அதிகமாக செயல்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் பரிந்துரை செய்ததனர்.

களப் பயணம்

களப் பயணம் என்பது சுற்றுச்சூழல் கற்றலில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். குழந்தைகள் நேரில் பார்த்து அறிவை சேகரிக்க இது ஒரு வாய்ப்பு. பிப்ரவரி 11ம் தேதி, 4ம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், பி.டி.ஏ., தலைவர், எம்.பி.டி.ஏ., தலைவி ஆகியோர் சேர்ந்து கஞ்சிக்கோடு ஆர்யவைத்யா பார்மசி மூலிகை தோட்டத்திற்கு பயணம் சென்றனர். பல்வேறு வகையான மருத்துவ தாவரங்கள் அவற்றின் பெயர்கள் மற்றும் பயன்பாடுகளை ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும். பணியாளர் பெஞ்சமினும் அவரது உதவியாளர்களும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை சொல்லி கொடுத்தனர். நம்மைச் சுற்றியுள்ள பல தாவரங்கள் நம் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை அவர்கள் விளக்கினர். பயனுள்ள புதிய அறிவுகள் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைத்தது. அழிந்து கொண்டிருக்கும் செடிகள், நட்சத்திர மரங்கள் மற்றும் இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளுக்கு உணர்த்தப்பட்டது.

அங்கிருந்து களப் பயணம் பாலக்காடு திப்பு சுல்தான் கோட்டையை அடைந்தது. வரலாற்றுச் சின்னமான கோட்டை பற்றி குழந்தைகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. கோட்டைக்குள் இருக்கும் காட்சிகளைப் பார்த்துவிட்டு, குழந்தைகள் அங்கு சிறிது நேரம் விளையாடவும் வேடிக்கை பார்க்கவும் நேரம் கிடைத்தது. சிறந்த பயண அனுபவத்தை எப்படி எழுதுவது என்பதற்கான வழிமுறைகளை குழந்தைகளுக்கு வழங்கி பயணக் குழு பள்ளிக்குத் திரும்பியது. குழந்தைகளின் களப் பயண அனுபவங்களின் தொகுப்பும் தயாரிக்கப்பட்டது.

கதை மற்றும் கவிதைப் பட்டறை

மொழி கற்றலை ஒரு சுவாரசியமான அனுபவமாக மாற்றியதில் கவிதைகளும் கதைகளும் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன. பிப்ரவரி 23, வியாழன் அன்று, GVGHSS ஆசிரியை ரஞ்சுதேவி ஆர் தலைமையில் நடந்த கவிதை மற்றும் கதைப் பட்டறை குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நாபிறழ் பயிற்சிக்கான வேடிக்கையான வாக்கியங்களைகஆரம்பிக்கப்பட்டது. சுவாரஸ்யமான இடத்தில் கதையை நிறுத்தி கதை பூர்த்தி செய்ய குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. வெவ்வேறு கதை முடிவுகள் ஆசிரியரை ஆச்சரியப்படுத்தியது. குழந்தைகளின் கற்பனைத்திறன் மற்றும் கதை எழுதும் திறன் எடுத்துரைக்க வேண்டியதாகும். இன்னொரு கதையை குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஆசிரியை நாட்டுப்புறப் பாடலைத் தொடங்கினார். நந்தனாவின் மெல்லிசைக் குரலுடனும் குழந்தைகளின் தாளங்களுடனும் பட்டறை நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமையாசிரியைப் பொறுப்பாளர் சுனிதா வரவேற்புரையும் ஹேமாம்பிகா நன்றியுரையும் வழங்கினார்.

படிப்பு பயணம்

இலாவின் ஒரு பகுதியாக மற்றொரு களப் பயணம் கேரளாவின் பூந்தோட்டமான மலம்புழாவிற்கு செல்லப்பட்டது. நான்காம் வகுப்பு மாணவர்கள் 65 பேரும், 9 ஆசிரியர்கள் மற்றும் பி.டி. ஏ. சேர்ந்து மேற்கொண்ட இப்பயணம் குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மலம்புழை அணை, பூந்தோட்டம் தவிர பாம்பு பூங்கா மற்றும் மீன்வளம் ஆகியவையும் பார்வையிடப்பட்டது. பலவிதமான பாம்புகள் மற்றும் மீன்களை குழந்தைகளுக்குக் காண முடிந்தது. பூந்தோட்டத்தை ஒட்டிய பூங்காவிலுள்ள விளையாட்டுக்களை குழந்தைகள் விரும்பினர்.

மதிய உணவுக்குப் பிறகு, தஸ்ராக் என்னும் இடத்திற்கு பயணம் தொடர்ந்தது. மலையாள இலக்கியத்தில் புதிய பாதையை அமைத்த ஓ.வி.விஜயனின் பழம்பெரும் பூமியான தஸ்ராக், தொன்மையையும் பெருமையையும் பாதுகாத்து வந்த நினைவுச் சின்னமே. நாவலில் வரும் கதாபாத்திரங்களின் படங்கள் மற்றும் சூழல்கள் அங்கே நிறைந்து நிற்கின்றது. கலையரங்கில் இருந்த படங்கள், விஜயனின் படைப்புகள், கார்ட்டூன்கள், கடிதங்களின் தொகுப்பு ஆகியவை குழந்தைகளுக்கு புதிய விருந்தாகவே அமைந்தன. ஓ.வி.விஜயன் பற்றி அங்குள்ள பணியாளர் அரவிந்தாக்ஷன், குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு உதவும் வகையில் அறிவுரைகள் மற்றும் விளக்கங்களை வழங்கினார். இந்த களப் பயணம் குழந்தைகளிடம் ஆர்வத்தையும் அறிவையும் வளர்க்க உதவியது.