ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2025-26
ஜூன்
பள்ளி நுழைவுத் திருவிழா 2025-26
2025-26 கல்வியாண்டுக்கான பள்ளி நுழைவு விழா நமது பள்ளியில் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. பொதுக்கல்வியை வலுப்படுத்தும் நோக்கத்தில் மாநில அளவில் அமுல்படுத்தப்பட்ட " ஒருங்கிணைந்த கல்வி மேன்மை திட்ட"த்தின் தாக்கம் பள்ளி நுழைவு விழாவிலும் தெளிவாகக் காணப்பட்டது.
நிகழ்ச்சியை சித்தூர் தத்தமங்கலம் நகராட்சித் தலைவி கே.எல். கவிதா தொடங்கி வைத்தார். நகர சபை கவுன்சிலர்கள் சுமதி, ஸ்ரீதேவி ரகுநாத், ஷீஜா ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி. மோகன்தாஸ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தீபா எ வரவேற்புரை நிகழ்த்தினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஜி. சுகதன், எம்.பி.டி.ஏ தலைவர் ரஷ்மி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கே.பி. ரஞ்சித் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர். ஆசிரியை சுனிதா எஸ் நன்றி கூறினார்.
புதிய மாணவர்களுக்கு கற்றல் கருவிகள் மற்றும் வண்ணக் கண்ணாடிகள் பரிசாக வழங்கப்பட்டது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் லட்டு வழங்கப்பட்டது. இவ்வருட பள்ளி நுழைவு விழா புதிய கல்வியாண்டின் சிறந்த தொடக்கமாக அமைந்தது. இது மாணவர்களிலும் பெற்றோர்களிலும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தூண்டி, பள்ளியின் சமூக உறவுகளை மேலும் வலுப்படுத்தியது.
- வீடியோவைப் பார்ப்போம் -பள்ளி நுழைவுத் திருவிழா 2025
சுற்றுச்சூழல் தினவிழா
"நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளை வெல்வோம்" என்ற முழக்கத்துடன் நமது பள்ளியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின விழாவை பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி. மோகன்தாஸ் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஜி. சுகதன், தலைமை ஆசிரியர் தீபா எ ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளி காலைக் கூட்டத்தில் மாணவர்கள் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி கூறினர். மாணவர்கள் தயார் செய்த போஸ்டர்கள், முத்திரை வாக்கியங்கள், படங்கள், பிரசுரங்கள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றன. மாணவர்கள் சுற்றுச்சூழல் தின உரை, கவிதை மற்றும் பாடல் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் தொடர்பான வினாடி-வினா போட்டியும் நடத்தப்பட்டது. மாணவர்கள் கொண்டுவந்ததும், சித்தூர் தொழில்நுட்ப பள்ளியிலிருந்து (JTS Chittur) கிடைத்ததுமான மரக்கன்றுகள் பள்ளியில் நடப்பட்டது. மேலும் மாணவர்களின் வீடுகளுக்கு கொடுத்துவிடவும் செய்யப்பட்டது.
- வீடியோவைப் பார்ப்போம் - சுற்றுச்சூழல் தினம் - 2025
வாசிப்பு தினம்
வருங்கால தலைமுறையினரை வாசிக்கத் தூண்டி, சிந்திக்க வைக்கும் திறனை வளர்த்து, விவேகம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜூன் 19-ம் தேதி பள்ளியில் வாசிப்பு நாள் கொண்டாடப்பட்டது. காலைக்கூட்டத்தில் வாசிப்பு நாள் உறுதிமொழி மாணவர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. மாணவர்கள் தயாரித்து வந்த போஸ்டர்கள், பதிப்புகள், சுவரொட்டிகள் ஆகியவை கண்காட்சிக்காக வைக்கப்பட்டது.
இந்த வாசிப்பு தினத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியரான குரியாக்கோஸ் மாஸ்டர் மாணவர்களுடன் உரையாடி, வாசிப்பு தினத்தை தொடங்கி வைத்தார். வாசிப்பின் முக்கியத்துவத்தை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்வதற்கு அவரது உரை மிகுந்த உதவியாக அமைந்தது. இது ஒரு மாதம் நீடிக்கும் வாசிப்புச் செயல்பாடுகளுக்கு தொடக்கமாக இருந்தது. விடுமுறைக்காலத்தில் சிறந்த முறையில் நாட்குறிப்பு எழுதிய மாணவர்களுக்கு டிரோஃபிகள் வழங்கப்பட்டது. வாசிப்பு போட்டி, கைஎழுத்துப் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி வினா (Quiz) கொஞ்சம் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டன. மேலும் மாணவர்களுக்கு விருப்பமான புத்தகங்கள் வழங்கி வாசிப்பை ஊக்குவிக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும், மாணவர்கள் தயார் செய்த வாசிப்பு குறிப்புகள் காலை கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. வாசிப்பு மாதத்தின் நிறைவாக, பெற்றோர்களின் வாசிப்புப் பழக்கத்தையும், படைப்பாற்றல் திறனையும் ஊக்குவிக்க, ரசனைப்பணிக்கூடம் (ரசனை முகாம்) நடத்தப்பட்டது. ஓய்வுபெற்ற ஆசிரியை பி. லதா பெற்றோர்களுக்கான வகுப்பை நடத்தினார். பங்கேற்ற பெற்றோர்களின் படைப்புகள் தொகுக்கப்பட்டன. இது ஒருபுதிய அனுபவமாக இருந்தது அனுபவம் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.
- வீடியோவைப் பார்ப்போம் - வாசிப்பு தினம் - 2025
யோகா தினம்
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதை நினைவூட்டும் வகையில், ஜூன் 21 அன்று யோக தினம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை ஏ. தீபாவின் தலைமையில் ஆசிரியர்களும் மாணவர்களும் யோக ஆசனங்களைப் பயிற்சி செய்தனர். எளிய யோகப் பயிற்சிகள் உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தையும் ஆரோக்கியத்தையும் அளிக்கும் என்று தீபா ஆசிரியர் குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார். உடல் நலத்தைப் பேணுவதில் யோகாவின் முக்கியத்துவத்தை உணரச் செய்யும் விதமாக இந்த தின விழா அமைந்தது.
- வீடியோவைப் பார்ப்போம் - யோகா தினம் - 2025
போதைப்பொருள் ஒழிப்பு தினம்
நாட்டையே விழுங்கக்கூடிய பேராபத்தை எதிரிட, போதையின் சங்கிலியை உடைத்து எறிந்து முன்னேற மாணவர்கள் தயாராக வேண்டும் என்பதற்காக, போதைப்பொருள் ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது. காலைக் கூட்டத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி கூறினர். போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செய்திகளும் படங்களும் அடங்கிய மாணவர்கள் உருவாக்கிய போஸ்டர்கள் பள்ளியில் காட்சிக்கு வைக்கப்பட்டன. போதைப் பொருளுக்கு எதிரான மனநிலையை உறுதிப்படுத்த விளையாட்டு பயிற்சியின் தலைமையில் “சும்பநடனம்” என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நமது முதலமைச்சர் பிணராய் விஜயனின் போதைப்பொருள் ஒழிப்பு தின அறிக்கையின் வீடியோவும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
- வீடியோவைப் பார்ப்போம் - போதைப்பொருள் எதிர்ப்பு தினம் - 2025
ஜூலை
பஷீர் தினம்
மலையாள இலக்கியத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரின் நினைவுநாளான ஜூலை 5 ஆம் தேதி, குழந்தைகள் பஷீரின் கதாபாத்திரங்களாக வேடமணிந்து பள்ளிக்கு வந்தனர். பஷீரின் படைப்புகளும் வாழ்க்கையும் தொடர்பான உரைகள், புத்தக அறிமுகம், கதை வாசிப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- வீடியோவைப் பார்ப்போம் - பஷீர் தினம் - 2025
சந்திர தினம்
மனிதன் சந்திரனில் காலடி வைத்தது நினைவுகூரும் வகையில், இவ்வாண்டும் ஜூலை 21 ஆம் நாள் 56ஆவது சந்திர தினம் கொண்டாடப்பட்டது. விளக்கப்படங்கள், பாடல்கள், நிலாப்பாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகள் தயாரித்த ராக்கெட், சூரிய குடும்ப மாதிரிகள் ஆகியவற்றைக் கொண்ட கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், சந்திரயான்–3 தொடர்பான வீடியோக் காட்சி மற்றும் வினாடி வினா போட்டிகள் குழந்தைகளின் அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்தன.
- வீடியோவைப் பார்ப்போம் - சந்திர தினம் - 2025
பள்ளி நிலை அறிவியல், கணித, கைவேலைத்திறன் விழா
இவ்வாண்டு பள்ளி நிலை அறிவியல், கணித, கைவேலைத்திறன் விழா ஜூலை 29, 30, 31 தேதிகளில் நடைபெற்றது. கற்றலுடன் இணைத்து, பிற செயல்பாடுகளிலும் மாணவர்களின் விருப்பம் மற்றும் திறமைகளை அறிய இத்தகைய நிகழ்வுகள் பெரிதும் உதவுகின்றன. கணித விழாவின் ஒரு பகுதியாக கணித மாதிரி (Still Model), எண் அட்டவணை (Number Chart), வடிவியல் அட்டவணை (Geometrical Chart), கணிதப் புதிர் (Math Puzzle) போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. அறிவியல் விழாவின் ஒரு பகுதியாக சார்ட் தயாரிப்பு போட்டி நடைபெற்றது. கைவேலைத்திறன் விழாவின் ஒரு பகுதியாக காகிதப் பூக்கள் தயாரித்தல், காய்கறி அச்சிடுதல் (Vegetable Printing), ஒரிகாமி, குடை தயாரித்தல், களிமண் வடிவங்கள் உருவாக்குதல், முத்துக்களால் ஆபரணம் தயாரித்தல், துணியில் ஓவியம் வரைதல் (Fabric Painting), பூத்தையல், கழிவுப் பொருட்களால் பயனுள்ள தயாரிப்புகள், பத்தி தயாரித்தல், தேங்காய் ஓடு பொருட்கள் தயாரித்தல், கயிறு மிதியடி தயாரித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றியாளர்களுக்கு உபமாவட்ட நிலை போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
- வீடியோவைப் பார்ப்போம் - பள்ளி நிலை அறிவியல், கணித, கைவேலைத்திறன் விழா - 2025
ஆகஸ்ட்
ஹிரோஷிமா தினம்
ஆகஸ்ட் 6 புதன்கிழமை, பள்ளியில் ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்பட்டது. பள்ளிக் காலைக் கூட்டத்தில் தலைமையாசிரியை தீபா ஏ, போரின் விளைவுகளை மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். மாணவர்கள் போர் எதிர்ப்பு போஸ்டர், சுவரொட்டி, பதிப்புகள், சடாக்கோ கொக்குகள் ஆகியவற்றை தயாரித்து வந்தனர். பள்ளி வளாகத்தில் போர் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர், மாணவர்கள் தயாரித்த சடாக்கோ கொக்குகள் பள்ளியின் முன்புறத்திலுள்ள மரத்தில் தொங்கவிடப்பட்டது. போரின் பயங்கரத்தைக் காட்டும் வீடியோவும் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. போர் அல்ல, அமைதியே தேவை என்பதை மாணவர்கள் உணர்வதற்கான ஒரு வாய்ப்பாக இது அமைந்தது.
- வீடியோவைப் பார்ப்போம் - ஹிரோஷிமா தினம் - 2025
பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொது கூட்டம்
பாட, பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் மாணவர்களது வளர்ச்சிக்கு துணையாக நிற்கும் பெற்றோர்கள், பள்ளிக்கு மட்டுமன்றி சமூகத்திற்கும் வலிமை சேர்க்கின்றனர். 2025–26 கல்வியாண்டின் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொது கூட்டம் ஆகஸ்ட் 8, வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு நடைபெற்றது. தலைமை ஆசிரியை தீபா. ஏ. வரவேற்புரை ஆற்றினார். பி. மோஹன்தாஸ் தலைமையில் சேர்ந்த இப்பொதுக் கூட்டத்தில் ஆசிரியை அனு. ஏ. அறிக்கை வாசித்தார். பின்னர் பெற்றோர்கள் கலந்துரையாடலில் பங்கேற்றனர். புதிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக ஸ்ரீஜித் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிரியர் ஹிதாயத்துல்லா. கே. நன்றியுரை ஆற்றினார்.
- வீடியோவைப் பார்ப்போம் - பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொது கூட்டம் - 2025
பள்ளித் தேர்தல்
2025–26 கல்வியாண்டின் பள்ளி மாணவர் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சிறப்பான முறையில் நடைபெற்றது. போட்டியாளர்கள் தங்களது வேட்புமனுக்களை சமர்ப்பித்து, தங்களது தேர்தல் சின்னங்களுடன் வகுப்பு தோறும் சென்று பிரச்சாரம் நடத்தினர். நவீன வாக்குப்பதிவு முறைக்கு இணையாக, மொபைல் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட்டது. குழந்தைகளே பிரிசைடிங் ஆபீசர், போளிங் ஆபீசர்கள் போன்ற பொறுப்புகளை மேற்கொண்டனர். 4 A வகுப்பு மாணவி அன்சிகா பள்ளித் தலைவராகவும், 4 B வகுப்பு மாணவி ஸ்ரீகாபிரஷாந்த் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.
- வீடியோவைப் பார்ப்போம்- பள்ளித் தேர்தல் - 2025
நண்பனுக்கு ஒரு செடி
குழந்தைகளில் இயற்கையின்மீது நாட்டத்தை வளர்க்கும் நோக்கில் பள்ளியில் "நண்பனுக்கு ஒரு செடி" எனும் முகாம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி நடத்தப்பட்டது. ஆகஸ்ட் 14 வியாழக்கிழமை அனைத்து குழந்தைகளும் தங்களது வீட்டிலிருந்து மரக்கன்றுகள் கொண்டு வந்து, நண்பர்களிடம் மாற்றிக் கொண்டனர். பழமரங்கள், நிழல் மரங்கள் ஆகியவையே குழந்தைகள் கொண்டு வந்தனர். மா, பலா, புளி, வேப்பு, பப்பாளி, நெல்லி, கறிவேப்பிலை, அசோகம் போன்ற செடிகளை மாணவர்கள் மாற்றிக்கொண்டனர். தலைமை ஆசிரியை தீபா. எ, இக்கோ கிளப் ஒருங்கிணைப்பாளர்களான பத்மபிரியா, ஷாமிலி ஆகியோருடன் பள்ளியின் பிற ஆசிரியர்களும் முகாமில் பங்கேற்றனர்.
- வீடியோ பார்ப்போம் - நண்பனுக்கு ஒரு செடி
சுதந்திர தின விழா
இந்தியாவின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி வளாகம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. தலைமை ஆசிரியை தீபா. எ தேசியக் கொடியை ஏற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சி.ஆர். ஸ்ரீஜித், எஸ்.எம்.சி. தலைவர் பி. மோகன்தாஸ், எம். பி.டி.ஏ. தலைவி சரண்யா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஜி. சுகதன் ஆகியோர் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தனர். பின்னர் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்தொடக்கப் பள்ளி மாணவர்களின் பன்னி நடனத்துடன் கலைநிகழ்ச்சிகள்தொடங்கப்பட்டது. தேசபக்திப் பாடல், சுதந்திர தின உரை, நாடகம், வந்தே மாதரம் - நடனம் ஆகியவை இடம்பெற்றன. சுதந்திர வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் இனிப்பு வழங்கி இவ்வாண்டு சுதந்திர தின விழா நிறைவு பெற்றது.
- வீடியோ பார்ப்போம் - சுதந்திர தினக்கொண்டாட்டம் - 2025
ஓணவிழா
27/08/2025 அன்று பள்ளியில் ஓணவிழா சிறப்பாக நடைபெற்றது. ஓண விருந்து ஏற்பாடுகளுக்காக பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஒன்று கூடி திட்டமிட்டது. ஓண விருந்திற்கான பொருட்களை பெற்றோர்கள் வழங்கினர். சாதம், சாம்பார், அவியல், தோரன், இஞ்சிப் புளி, பப்படம், பழம், சர்க்கரை வரட்டி, சிப்ஸ், சேமியா பாயசம் போன்ற பல்வேறு வகையான உணவுகள் ஓணவிருந்தில் இடம் பெற்றிருந்தன. பள்ளி வளாகத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஓணப்பூக்கோலம் அமைத்தனர். மாணவர்கள் மாவேலி, வாமனன், புலிக்குட்டிகள், மலையாளி மங்கை போன்ற வேடமிட்டனர். அனைத்து வகுப்புகளிலிருந்தும் ஓணத்தை ஒட்டி குழு நடனம், குழுப் பாடல், உரை, ஓணப்பாட்டு, திருவாதிரை போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. தாய்மார்களின் திருவாதிரையும் அரங்கேறியது. ஓண விருந்து முடிந்ததும், ஒன்று, இரண்டு வகுப்புக் குழந்தைகளுக்காக புளியங்கொட்டை பொறுக்குதல் போட்டியும், மூன்று, நான்கு வகுப்புக் குழந்தைகளுக்காக மியூசிக் சேர் போட்டியும் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியை தீபா. எ பரிசுகளை வழங்கினார். அதன் பின் கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெற்றது. உற்சாகமான கயிறு இழுத்தல் போட்டியுடன் இவ்வாண்டின் ஓணவிழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.
- வீடியோ பார்ப்போம் - ஓணவிழா - 2025
வண்ணக்கூடாரம் அமைத்தல் - தொடக்க விழா
நமது முன் தொடக்க பள்ளிக்காக கிடைத்த ஸ்டார்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள வண்ணக்கூடாரம் அமைத்தல் திட்டத்தின் தொடக்க விழா ஆகஸ்ட் 27 புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. இறைவணக்கத்துடன் கூட்டம் ஆரம்பித்தது. தலைமையாசிரியை தீபா. எ அனைவரையும் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சி.எ ஸ்ரீஜித் குமார் தலைமை வகித்தார். சித்தூர் - தத்தமங்கலம் நகராட்சியின் துணைத் தலைவர் சிவகுமார் குழந்தைகளுக்கு ஒரு உற்சாகமான ஓணப்பாட்டு பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். சித்தூர் பி.ஆர்.சி.யின் பி.பி.சி. சௌதாமா வண்ணக்கூடாரம் திட்டத்தைப் பற்றி விரிவாக விளக்கினார். வார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி ரகுநாத், ஜி.வி.ஜி. ஹெச்.எஸ்.எஸ். முதல்வர் கிரி.டி, ஜி.வி.ஜி. ஹெச்.எஸ்.எஸ். தலைமையாசிரியை பினிதா.கே.ஜி, எஸ்.எம்.சி. தலைவர் பி. மோகன்தாஸ், எஸ்.எம்.சி. துணைத் தலைவர் ரஞ்சித்.கே.பி ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்தனர். ஆசிரியர் செயலாளர் ஹிதாயத்துல்லா நன்றியுரை கூறினார். முன்தொடக்கப் பள்ளி வகுப்புக் குழந்தைகள் பெற வேண்டிய அனைத்து திறன்களையும் விளையாட்டின் மூலமும், வரைதலின் மூலமும், உருவாக்கத்தின் மூலமும் எளிதாக கற்றுக்கொள்ளும் வகையில் வகுப்பறையின் உட்புறமும் வெளிப்புறமும் முழுமையாக சீரமைக்கப்படும் இந்த வர்ணக்கூடாரம் திட்டம் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
செப்டம்பர்
அக்ஷரமுற்றம் வினாடி-வினா 2025
தேசாபிமானி செய்தித்தாள் நடத்தும் பள்ளி அளவிலான அக்ஷரமுற்றம் வினாடி-வினா போட்டி செப்டம்பர் 16 அன்று மதியம் 2 மணிக்கு நடத்தப்பட்டது. மூன்று மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் வினாடி-வினாவில் பங்கேற்றனர். போட்டியில் ஸ்ரீகா பிரசாந்த் முதல் இடத்தையும் ஸ்ரீராம் கே.எஸ் இரண்டாவது இடத்தையும், ரஷ்மி ஆர் மற்றும் அவனிகா ஆர் ஆகியோர் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றவர்கள் துணை மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள்.
பள்ளி அளவிலான விளையாட்டு விழா - 2025
பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 17 அன்று நடைபெற்றன. இதற்காக, மாணவர்கள் நான்கு குழுக்களாக (House) பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. GVGHSS ஆசிரியர்களான ஜயகுமார் மற்றும் பிரியா ஆகியோரின் தலைமையில் பயிற்சி நடந்தது. தொடக்க விழாவின்போது, ஒவ்வொரு குழுவிலுமுள்ள மாணவர்களும் தங்கள் குழுவின் வண்ணக் கொடியை ஏந்தி அணிவகுப்பு (March Past) நடத்தினர். சித்தூர்-தத்தமங்கலம் நகராட்சித் தலைவர் கே.எல். கவிதா அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சி.ஏ. ஸ்ரீஜித் குமார் மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, LP மினி பிரிவிலுள்ள மாணவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டம், ஸ்டாண்டிங் பிராட் ஜம்ப் (Standing Broad Jump), ரிலே ஆகிய போட்டிகளும்; LP கிட்டிஸ் பிரிவினருக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் (Long Jump), ரிலே போட்டிகளும் நடத்தப்பட்டன. சித்தூர்-தத்தமங்கலம் நகராட்சித் துணைத் தலைவர் எம். சிவகுமார் பரிசளிப்பு விழாவை நடத்தினார். வெற்றி பெற்ற குழுக்களின் உறுப்பினர்களுக்கும் தனிநபர் சாம்பியன்களுக்கும் கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.
- வீடியோ பார்ப்போம் - பள்ளி அளவிலான விளையாட்டு போட்டி - 2025
பள்ளிக் கலைவிழா - கிலுக்கம் 2025
நமது பள்ளிக் கலைவிழா “கிலுக்கம் – 2025” செப்டம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற்றது. சித்தூர் – தத்தமங்கலம் மாநகராட்சியின் துணைத் தலைவர் எம். சிவகுமார் விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவைத்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஜி. சுகதன், MPTA தலைவி சரண்யா, தலைமையாசிரியை தீபா ஏ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பரதநாட்டியம், நாடோடி நடனம், கதை சொல்லுதல், சைகைப்பாடல், மெல்லிசை, கன்னடக் கவிதை, ஆங்கிலக் கவிதை, மலையாளக் கவிதை, பேச்சுப் போட்டி, மாப்பிள்ளைப்பாட்டு, அரபிப் பாடல், தனியாள் நடிப்பு போன்ற பல போட்டிகளில் மாணவர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர். இரண்டாம் நாளில் நடைபெற்ற தமிழ் கலைவிழாவில் திருக்குறள் ஒப்புவித்தல், கதை சொல்லுதல், கவிதை சொல்லுதல், மெல்லிசை, தனியாள் நடிப்பு ஆகிய போட்டிகள் நடைபெற்றன. அரசு விக்டோரியா மேனிலைப்பள்ளியிலிருந்து நடுவர்களாக வந்த ஆசிரியைகள் மதிப்பீடு செய்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். வெற்றியாளர்கள் துணை மாவட்ட கலைவிழாவில் பங்கேற்பார்கள். பள்ளிதர சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
- வீடியோ பார்ப்போம் - பள்ளிக் கலைவிழா - கிலுக்கம் 2025
விஞ்ஞானோற்சவம் 2025
பள்ளி அளவிலான யுரேகா விஞ்ஞானோற்சவம் செப்டம்பர் 20, சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. மாணவர்களுக்கு சுவாரஸ்யமான செயல்பாடுகள் இருந்தன. அக்டோபர் 18 அன்று நடைபெறவுள்ள பஞ்சாயத்து அளவிலான விஞ்ஞானோற்சவத்தில் பங்கேற்பதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
ஜயன்ட்ஸ் குழுவினர் - நன்கொடை
சித்தூர், ஜயன்ட்ஸ் குழுவினர் நம் பள்ளிக்கு 5 மாத்ருபூமி செய்தித்தாள்களை நன்கொடையாக வழங்கினர். செப்டம்பர் 22, திங்கட்கிழமை பள்ளி காலைக் கூட்டத்தில் ஜயன்ட்ஸ் குழுவின் பிரதிநிதிகள் மாணவர்களுக்கு முதல் செய்தித்தாளை வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் இத்தருணத்தில் கலந்து கொண்டனர்.
அறிவுத்திருவிழா
செப்டம்பர் 24 அன்று பள்ளி அளவிலான அறிவுத்திருவிழா வினாடி-வினாப் போட்டி நடத்தப்பட்டது. நான்காம் வகுப்பு மாணவி ஸ்ரீகா பிரசாந்த் முதல் இடத்தையும், நான்காம் வகுப்பு மாணவன் ஸ்ரீராம் கே.எஸ் இரண்டாம் இடத்தையும், மூன்றாம் வகுப்பு மாணவி மித்ரஜஸ்ரீ எம். மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இந்த வெற்றியாளர்கள் துணைமாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர்.
பிரதிபா, வினாடி-வினாப் போட்டி
பள்ளி அளவிலான பிரதிபா வினாடி-வினாப் போட்டி செப்டம்பர் 25, வியாழக்கிழமை அன்று நடத்தப்பட்டது. ஸ்ரீராம் கே.எஸ் மற்றும் ஜே.எச். ஆகாஷ் ஆகியோர் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றனர்.
அக்டோபர்
உணவுத் திருவிழா
உணவு தினமான அக்டோபர் 16 அன்று உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. ஒன்று முதல் நான்கு வகுப்பு வரையிலான சுமார் 150 குழந்தைகள் இதில் கலந்து கொண்டனர். பெரும்பாலான உணவுகள் பாரம்பரிய / நாட்டுப்புற உணவுகள் ஆகும். இலை அடை, அரிசி உருண்டை, புட்டு, பணியாரம், நெய்யப்பம் உட்பட பலவிதமான பலகாரங்கள் இருந்தன. பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத்தலைவர் ஜி. சுகதன் மற்றும் எஸ்.எம்.சி தலைவர் பி. மோகன்தாஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
- வீடியோ பார்ப்போம் - உணவுத் திருவிழா - 2025
நவம்பர்
கேரளப்பிறவி தினம்
கேரளாவின் 69-வது பிறந்தநாள் நவம்பர் ஒன்றாம் தேதி கொண்டாடப்பட்டது. குழந்தைகள் கேரளப் பாரம்பரிய உடையணிந்து வந்தனர். மலையாள மண்ணின் மகிமையைத் தூண்டும் கலை நிகழ்ச்சிகளும் மேடையற்றப்பட்டது. நடனம், பாடல், உரை, குழுப்பாடல், கேரளப்பிறவி வாழ்த்துக்கள் போன்ற பல நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினர். தலைமை ஆசிரியை தீபா, அனைத்துக் குழந்தைகளுக்கும் கேரளப் பிறவி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.கேரளப்பிறவி வினாடி வினாவில் ஸ்ரிகா பிரசாந்த் முதலிடமும் மித்ரஜாஶ்ரீ எம் இரண்டாவது இடமும் அபினிதா அ மூன்றாவது இடத்தையும் வென்றனர். வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
- வீடியோ பார்ப்போம் - கேரளப்பிறவி தினம் - 2025
பாராட்டு விழா
2025–26 கல்வியாண்டின் கலைவிழா வெற்றியாளர்களுக்கான பாராட்டுவிழா நவம்பர் 6-ஆம் தேதி பள்ளியில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை தீபா ஏ. தலைமையேற்று விழாவை நடத்தினார். சித்தூர்–தத்தமங்கலம் நகராட்சியின் துணைத் தலைவர் எம். சிவக்குமார் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். வார்டு கவுன்சிலர் ஸ்ரீதேவி ரகுநாத் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த ஆண்டு நடைபெற்ற துணை மாவட்டக் கலைவிழாவில் பெற்ற சிறந்த அரசு தொடக்கப் பள்ளி விருதும், தமிழ் மற்றும் மலையாளம் பிரிவுகளில் பெற்ற முதலிட விருதுகளும், மேலும் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், குழுப் பாடல், ஆங்கிலக் கவிதை சொல்லுதல், தமிழ் தனியாள் நடிப்பு, திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குக் கிடைத்த தனிப்பட்ட கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றையும், அதேபோல் துணை மாவட்ட விளையாட்டுப் போட்டி மற்றும் துணை மாவட்ட அறிவியல் கண்காட்சி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் நகராட்சி துணைத் தலைவர் எம். சிவக்குமார் மாணவர்களுக்கு வழங்கி பாராட்டினார்.
- வீடியோ பார்ப்போம் - பாராட்டு விழா - 2025
குழந்தைகள்தினக் கொண்டாட்டம்
குழந்தைகள்தினக் கொண்டாட்டம் நவம்பர் 14 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகளுக்குப் பிரியமான நாளாக அமைந்தது. ஏராளமான குழந்தைகள் நேருவின் வேடமணிந்து குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். மேலும், அம்பேத்கர், ஜான்சி ராணி, அன்னைத்தெரசா போன்ற மகாத்மாக்களின் வேடமணிந்து வந்த குழந்தைகளும் கவனத்தை ஈர்த்தனர். முன்தொடக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன் தொடக்கப்பள்ளி குழந்தைகளின் குட்டி நாடகம் அனைவரையும் ரசிக்கச் செய்தது. ஆப்பிள், மாம்பழம், தேங்காய் போன்ற வேடமணிந்து வந்த குழந்தைகளும் இருந்தனர். இரண்டாம் வகுப்பு மாணவன் ஆகத். ஆர் நேருவின் அழகிய ஓவியத்தை வரைந்து தலைமை ஆசிரியைக்கு அன்பளிப்பாக வழங்கினான். நேருவைப் பற்றிய பாடல், குழந்தைகள் தினப் பேச்சு, குழுப்பாடல், குழந்தைகள் தின வாழ்த்துக்கள் போன்ற நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினர். தலைமை ஆசிரியை தீபா, அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். குழந்தைகள்தின வினாடிவினாவில் ஆதிதேவ் ஆர் முதலிடமும் ஸ்ரிகா பிரசாந்த் மற்றும் ஸ்ரீராம் கே எஸ் இரண்டாவது இடமும் மித்ரஜா ஸ்ரீ எம் மூன்றாம் இடத்தையும் வென்றனர்.வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- வீடியோ பார்ப்போம் - குழந்தைகள்தினக் கொண்டாட்டம் - 2025