ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /செயல்பாடுகள்/2022-23
ஜூன்
பள்ளி நுழைவுத் திருவிழா- 2022
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, குழந்தைகள் பள்ளிக்கு வருவதால் அவர்களை வரவேற்க குருத்தோலை மற்றும் மாவிலையால் பாரம்பரியமாக அலங்கரிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. பள்ளி முற்றத்தில் செண்டை மேளத்திற்கு ஏற்ப குழந்தைகள் தாளத்துடன் விளையாடினர். குழந்தைகள் கேரளக் கலை வடிவங்களான கதகளி, சாக்கியார் கூத்து, தெய்யம், களரி, மோகினியாட்டம், திருவாதிரை போன்ற வேடங்கள் அணிந்திருந்தனர். செண்டை மேளத்தோடு கேரளக் கலை வடிவ வேடமணிந்த குழந்தைகளும் மற்ற குழந்தைகளும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அணிக்கோடு வரை ஊர்வலம் சென்று திரும்பினோம். காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. குழந்தைகளே வரவேற்புரை, வாழ்த்துரை மற்றும் நன்றி உரைகளை வழங்கினர். ஜெயன்ட் சங்க உறுப்பினர்கள் முன் தொடக்க மற்றும் ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்றல் கருவிகள் அடங்கிய பொதிகள் வழங்கினர். சுமார் 200 குழந்தைகளுக்கு பொதிகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு பொதியிலும் ஒரு நோட்புக், பேனா, பென்சில், கட்டர், அழிப்பான், க்ரையோன் போன்றன இருந்தது. துவக்க விழாவில் ஜெயண்ட் குரூப் பிரதிநிதி, சித்தூர் தத்தமங்கலம் நகரசபை தலைவி கவிதா, கல்வி நிலைக்குழு தலைவி கே.சுமதி, வார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எம்.சுவாமிநாதன், எம்பிடிஏ தலைவி பினி, தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரண்டாம் வகுப்பின் கல்வியியல் மாஸ்டர் பிளானை தலைவர் துவக்கி வைத்தார். குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. குழந்தைகளது கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 4-ம் வகுப்பு மாணவி தேவஸ்ரீயின் மோகினியாட்டம் குறிப்பிடத்தக்கது. பாட புத்தகங்களும் வழங்கப்பட்டன.
- வீடியோவைப் பார்ப்போம் - நுழைவுத் திருவிழா - 2022
சர்வதேச சுற்றுச்சூழல் தினம்
இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஜூன் 6 திங்கட்கிழமை,காலைக் கூட்டத்தில் குழந்தைகளது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. குழந்தைகள் தங்கள் வீடுகளில் மரக்கன்றுகளை நட்டனர். மேலும் பதிப்புகள் மற்றும் பேட்ஜ் தயாரித்தனர். ஜூன் 6ஆம் தேதி சுற்றுச்சூழல் பாடல், உரை மற்றும் பதிப்பு வெளியீடு நடைபெற்றது. ஒவ்வொரு குழந்தையும் மிகவும் அழகாக பதிப்பைத் தயார் செய்து வந்தனர். பி.டி.ஏ., தலைமையில் பள்ளி வளாகத்தில் 2 மரக்கன்றுகள் நடப்பட்டன. குழந்தைகள் பள்ளி வளாகத்தில் பதிப்புகள் மற்றும் சுவரொட்டிகளுடன் ஊர்வலம் நடத்தினர். தலைமையாசிரியை தலைமையில் பச்சை மிளகாய், தக்காளி, கத்தரி, அவரை மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டன. காய்கறி நாற்றுகளை குழந்தைகளே நடவு செய்தனர். ஆசிரியர்கள் மற்றும் PTA நிர்வாகிகள் சுற்றுச்சூழல் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். சுற்றுச்சூழல் தினம் 2022 ன் முத்திரை வாக்கியமான ஒரே ஒரு பூமி என்பதை மாணவர்களுக்கு உணர்த்தி இந்த ஆண்டின் சுற்றுசூழல் தினம் இனிதே முடிவுற்றது.
- வீடியோவைப் பார்ப்போம் - சுற்றுச்சூழல் தினம் - 2022
குழந்தை தொழில் எதிர்ப்பு தினம்
ஜூன் 12 குழந்தைத் தொழில் எதிர்ப்பு தினத்தன்று குழந்தைகள் ஊர்வலம் நடத்தப்பட்டது. காலைக் கூட்டத்தில் குழந்தைத் தொழில் விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் என்றால் என்ன? அதை அனுபவிக்கும் குழந்தைகளின் உரிமைகள் மறுக்கப்படுவதையும் விளக்கப்பட்டது. சிறு குழந்தைகள் பள்ளிக்கு வந்து கற்பதன் அவசியத்தையும் அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு வகுப்புகளுக்கும் குழந்தை தொழில் எதிர்ப்பு தொடர்பான கருத்துக்களை வழங்கி, சுவரொட்டி தயாரித்து வெளியிடப்பட்டது.
வாசிப்பு தினம்
||வாசிப்பு தினத்தன்று நடைபெற்ற சிறப்புக் காலைக் கூட்டத்தில், குழந்தைகள் வாசிப்பு தின உரையை வழங்கினர். தலைமையாசிரியை ஜெயலட்சுமி. டி குழந்தைகளுக்கு வாசிப்பு நாளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். குழந்தைகள் தயாரித்த வாசிப்பு நாள் பதிப்பு, சுவரொட்டி போன்றவை காலைக் கூட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. வாசிப்பு வார விழா மற்றும் வாசிப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக வாசிப்புப் போட்டி, வினாடி-வினா போட்டி, சுவரொட்டி எழுதும் போட்டி மற்றும் குழந்தைகளுடன் இணைந்து தாய்மார்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் "அம்மாவுடன்" என்ற சிறப்பு போட்டி ஆகியன நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.
யோகா தினம்
சர்வதேச யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. யோகா ஆசிரியை லீலா ஜனார்த்தனன் ( Art of living faculty) யோகாவின் முக்கியத்துவத்தை விளக்கினார். பின்னர் குழந்தைகளுக்கு பிரார்த்தனை, யோகா, தியானம் மற்றும் பிராணாயாமா பயிற்சி அளிக்கப்பட்டது. குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் யோகா பயிற்சிகளை செய்தனர். குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்து கொண்ட நிகழ்வு அமைதியாகவே முடிந்தது. ஜூலை 5 முதல் எங்கள் பள்ளியில் கிருஷ்ணம்மாள் என்ற யோகா ஆசிரியை வைத்து யோகா வகுப்புகள் தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
ஜூலை
பேப்பூர் சுல்தானின் நினைவாக
மலையாள இலக்கியத்தின் பெருமையை தெளிவுபடுத்திய கதைகளின் சுல்தான் வைக்கம் முகமது பஷீரின் நினைவு தினம் ஜூலை 5ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. எளிமையான அழகான பஷீரின் கதை உலகத்தை குழந்தைகள் அறிந்துகொள்ள இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்தது. குழந்தைகள் பஷீரினுடையவும் அவரது கதாபாத்திரங்களான குஞ்ஞு பாத்தும்மா, சுஹாரா, மஜீத் மற்றும் நாராயணி போன்றவர்களின் வேடமணிந்து அதேபோன்று நடித்துக் காட்டினர். மேலும் அவரது வாழ்க்கை குறிப்பு மற்றும் கதைகள் பற்றின வீடியோக்களும் ஒளிபரப்பப்பட்டது. பஷீரின் படைப்புகள் மற்றும் கதாபாத்திரங்கள் நிறைந்த சுவரொட்டிகளையும் குழந்தைகள் தயாரித்தனர். சிறப்பாக செயலாற்றிய குழந்தைகளை தலைமையாசிரியையும், ஆசிரியர்களும் பாராட்டினர்.
சந்திரதினம்
நிலவில் கால் வைத்த மனிதகுலத்தின் வரலாற்று சாதனையை நினைவுகூற சந்திர நாள் ஜூலை 21 அன்று கொண்டாடப்பட்டது. சந்திர தினத்தை முன்னிட்டு அறிவியல், சமூக அறிவியல், கணிதம் ஆகிய சங்கங்களை முன்னாள் தலைமை ஆசிரியை நளினி துவக்கி வைத்தார். சந்திர தினத்தையொட்டி, விண்வெளி வீரரின் ஆடை அலங்காரம், பதிப்பு, விளக்கப்படம், பிளக் கார்ட், சந்திர நாள் பாடல், வினாடி-வினா, வகுப்பு அளவிலான நிகழ்ச்சி, பள்ளி அளவிலான நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிலவில் மனிதன் இறங்குவதைக் காட்டும் வீடியோவும் காண்பிக்கப்பட்டது. அறிவியல் கிளப் திறப்பு விழாவையொட்டி, எண்ணெய் மற்றும் தீப்பெட்டி இல்லாமல் எப்படி தீ மூட்டுவது என்பதை, ஜி.வி.ஜி.எச்.எஸ்., அறிவியல் ஆசிரியைகள் அனிதா, புவனேஷ்வரி, சுமஜா ஆகியோர் செய்து காட்டினர். அதன்பின் குழந்தைகளும் சோதனைகள் செய்து காண்பித்தனர். எண்ணியல் படங்களைக் காண்பித்துக் கொண்டு கணிதச் சங்கம் திறந்து வைக்கப்பட்டது.
- வீடியோவைப் பார்ப்போம் - சந்திரதினம் - 2022
ஆகஸ்ட்
ஹிரோஷிமா - நாகசாகி தினம்
ஆகஸ்ட் 2022 ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வீசி 77 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஹிரோஷிமா நாகசாகி தினங்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதி பள்ளியில் அனுசரிக்கப்பட்டது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நடந்த போரின் வீடியோக்கள் குழந்தைகளுக்கு காண்பிக்கப்பட்டது. குழந்தைகள் உருவாக்கி வந்த சுவரொட்டிகள் மற்றும் முத்திரை வாக்கியங்களை வைத்து போர் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. அனைத்து வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளும் அமைதியின் சின்னமான சடகோ கொக்குகளை உருவாக்கினர். ஹிரோஷிமா-நாகசாகி தினத்தையொட்டி அனைத்து வகுப்புகளிலும் போர் எதிர்ப்பு சுவரொட்டி தயாரிக்கும் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அணுசக்தி பயன்பாட்டைப் பற்றி குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சுதந்திரதினம்
2022 சுதந்திர தினத்தினத்தின் 75 ஆவது ஆண்டு விழா ஆசாதி கா அமிருத் மகோத்சவ் என்ற பேரில் நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. பாரத மாதா, காந்தியடிகள், நேருஜி, பகத்சிங், ஜான்ஸி ராணி, பாரதியார் மற்றும் கேரள, தமிழ் நாட்டு, ராஜஸ்தானி வேடமணிந்த மாணவமணிகளும் 76 ஆம் சுதந்திர தினத்தை விழாவாக்கினர். ஆகஸ்ட் 15 காலை 9 மணிக்கு கொடியேற்றி வரவேற்புரை வழங்கினார் தலைமையாசிரியை ஜெயலட்சுமி. PTA தலைவர் மோகன்தாஸ் தலைமையுரை ஆற்றினார். வார்டு கவுன்சிலர் ஸ்ரீதேவி, கல்வி நிலை தலைவி K. சுமதி, SMC பொறுப்பாளர் K.P ரஞ்சித், PTA துணைத் தலைவர் G சுகதன், சித்தூர் CRC தலைவர் மனோஜ் கே. மேனோன் போன்றோர் வாழ்த்துரை கூறினர். CRC மற்றும் லயன்ஸ் க்ளப் உறுப்பினர்கள் இனிப்பு வழங்கினர். ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் நமது பள்ளி கூட முற்றத்திலிருந்து அணிக்கோடு வரை ஊர்வலம் சென்றனர். அதன் பிறகு பள்ளி கலையரங்கில் வைத்து நர்சரி முதல் 4 ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் பங்கு பெற்ற தேச பக்தி கானம், பேச்சுப் போட்டி, நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- வீடியோவைப் பார்ப்போம் - சுதந்திரதினம் - 2022
கேரள உழவர் தினம்
மலையாள வருடப்பிறப்பான சிம்மம் 1ம் தேதி உழவர் தினமாகக் கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து பள்ளிக்கு பக்கத்திலுள்ள நெல் வயலை பார்வையிட்டனர். நெல் கதிர்கள் விளைந்து நிற்கும் வயல்வெளிகளை குழந்தைகள் பார்த்து ரசித்தனர். விவசாயம் தொடர்பான நாட்டுப்புற பாடல்களை குழந்தைகள் பாடினர். 4ம் வகுப்பு மாணவி நந்தனாவின் பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. விவசாய கலாச்சாரம் நம் வாழ்வோடு எவ்வளவு தொடர்புடையது என்பதை ஆசிரியர்கள் விளக்கினர். உழவர் தின களப்பயணம் குறித்து குழந்தைகள் குறிப்புகள் எழுதினர்.
- வீடியோவைப் பார்ப்போம் - கேரள உழவர் தினம் - 2022
தமிழ் மன்றம்
ஆகஸ்ட் 23ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் ஜெயந்தி தமிழுக்கும் அமுதென்றுபேர் என்னும் பாரதிதாசனின் பாடலைப் பாடி தமிழ் மன்றத்தைத் துவக்கி வைத்தார். ஆசிரியர் செயலர் சுப்ரபா வரவேற்புரையும் தலைமையாசிரியை ஜெயலட்சுமி வாழ்த்துரையும் வழங்கினர். 4ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீஷிகாவும் தமிழுக்கும் அமுதென்றுபேர் என்ற பாடலைப் பாடினாள். 1 ஆம் வகுப்பு தமிழ் ஆசிரியை பிர்தௌஸ் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
கைவேலைக் குழு
ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 3 மணிக்கு மேல்நிலைப் பள்ளி கைவினை ஆசிரியர் பிரதீபா, குழந்தைகளுக்கு காகிதத்தில் பைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் தயாரிக்க பயிற்சி அளித்து கைவேலைக் குழுவைத் திறந்து வைத்தார். தலைமையாசிரியை ஜெயலட்சுமி வாழ்த்துரையும் ஆசிரியை பிர்தௌஸ் நன்றியுரையும் கூறினர்.
- வீடியோவைப் பார்ப்போம் - தமிழ் மன்றம் & கைவேலைக் குழு
செப்டம்பர்
ஓணவிழா
வகுப்புகளிலும் பள்ளி முற்றத்திலும் குழந்தைகள் பூக்கோலமிட்டனர். குழந்தைகள் மாவேலி, வாமனன் வேடமணிந்த காட்சி அனைவருக்கும் பிடித்ததது. புலி வேஷம் அணிந்த குழந்தைகள் தாள மேளங்களுடன் துள்ளி ஆடினர். புலிக்குட்டிகளுக்கு அலங்காரம் செய்தது இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவனான தேஜஸ் ஆவான். குழந்தைகள் ஓணப் பாடல், பேச்சு, குழுப் பாடல்கள், திருவாதிரை, நடனம் போன்றவற்றை நிகழ்த்தினர். பாடல் ஆசிரியை சுலதா, குழந்தைகளுக்கு ஓண பாடல்கள் பாட பயிற்சி அளித்தார். குழந்தைகளுக்கான நாற்காலி விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதற்கிடையில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ஓண விருந்து தயார் செய்தனர். முன் தொடக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையிலான குழந்தைகள் ஓணக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
- வீடியோவைப் பார்ப்போம் - ஓணவிழா - 2022
ஆசிரியர் தினம்
செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் ஓண விடுமுறையானதால் ஆன்லைனில் குரு வணக்கம் செலுத்தப்பட்டது. வாழ்த்து அட்டை மற்றும் பேச்சுப் போட்டி போன்ற செயல்பாடுகள் ஆன்லைன் வழியாக நடத்ப்பட்டது. மாணவர்கள் அழகான வாழ்த்து அட்டைகளை உருவாக்கினர். செய்யப்பட்ட வாழ்த்து அட்டைகள் ஓண விடுமுறைக்குப் பிறகு பதிப்பாக்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் இணைந்து பூங்கொத்து வழங்கி தலைமையாசிரியை ஜெயலட்சுமி கவுரவிக்கப்பட்டார்.
- வீடியோவைப் பார்ப்போம் - ஆசிரியர் தினம் 2022
பள்ளி கலைவிழா
பள்ளிக் கலை விழா 2022 செப்டம்பர் 24 மற்றும் 26 தேதிகளில் நடைபெற்றது. குழந்தைகள் பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், மெல்லிசை, கவிதை மொழிதல், மாப்பிள்ளைப் பாட்டு, கதை சொல்லுதல், ஆங்கில கவிதை மொழிதல், மோனோ ஆக்ட், நாட்டுப்புற நடனம், தேசபக்தி பாடல் போன்ற போட்டிகளில் பங்கேற்றனர். இரண்டாவது நாள் தமிழ் கலைவிழா நடைபெற்றது. திருக்குறள் ஒப்புவித்தல், கதை சொல்லுதல், மெல்லிசை, தமிழ்க்கவிதை மொழிதல், தேசபக்தி பாடல் ஆகிய போட்டிகளில் தமிழ்வழிக் குழந்தைகள் கலந்து கொண்டனர். தரத்தை நிர்ணயிக்கவும் வெற்றியாளர்களைத் தீர்மானிக்கவும் நடுவர்கள் வரவழைக்கப்பட்டனர். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும், துணை மாவட்ட அளவிலான கலை விழாவில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது.
- வீடியோவைப் பார்ப்போம் - பள்ளிக் கலைவிழா 2022
சத்துணவு கண்காட்சி - 2022
30.09.2022 அன்று சித்தூர் ஜி.வி.எல்.பி பள்ளியில் சத்துணவு மாத விழாவின் ஒரு பகுதியாக சத்துணவு கண்காட்சி நடத்தப்பட்டது. காலைக் கூட்டத்தில் சத்துணவு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மோகன்தாஸ் தலைமையில் AEO குஞ்ஞிலட்சுமி சத்துணவுக் கண்காட்சியை துவக்கி வைத்தார். தலைமை விருந்தினராக சித்தூர் NMO ரெஜின் கலந்து கொண்டார். MPTA தலைவி மற்றும் நகராட்சி கல்வி நிலைக்குழு தலைவி சுமதி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் சுகதன், பள்ளி மதிய உணவு பொறுப்பாளர் ஆசிரியை பிர்தௌஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தலைமையாசிரியை ஜெயலட்சுமி வரவேற்புரையும் ஆசிரியர் செயலர் சுப்ரபா நன்றியுரையும் கூறினர். அதனைத் தொடர்ந்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு சத்தான உணவுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. பொல்புள்ளியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் நதிரா தலைமையில் விழிப்புணர்வு வகுப்பும் நடந்தது.
- வீடியோவைப் பார்ப்போம் - சத்துணவு கண்காட்சி - 2022
அக்டோபர்
காந்தி ஜெயந்தி
ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் காந்தி ஜெயந்தி தொடர்பான நிகழ்ச்சிகள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது. குழந்தைகள் காந்திஜியின் வேடம் அணிந்து வந்து பாடல்கள் பாடினர். குழந்தைகள் காந்தியின் படம் வரைந்தும் பதிப்புகள் தயார் செய்தும் வந்தனர். காந்திஜியைப் பற்றி உரையாற்றவும் செய்தனர். இதனுடன் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
- வீடியோவைப் பார்ப்போம் - காந்தி ஜெயந்தி - 2022
பள்ளி பாராளுமன்ற தேர்தல்
சித்தூர் ஜி வி எல் பி பள்ளியின் பள்ளித் தலைவர் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றது. போட்டியிடும் குழந்தைகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டது. வகுப்புத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள் பள்ளித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டனர். அவர்கள் விரும்பும் சின்னங்களில் போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஓட்டுச்சாவடிகளில் நிறுவப்பட்டது. வோட்டிங் மெஷின் என்ற செயலி மூலம் தேர்தல் நடத்தப்பட்டது. இரண்டு ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. ஒவ்வொரு சாவடியிலும் கட்டுப்பாட்டு அலகு (Control unit) மற்றும் வாக்குப் பதிவு அலகு (Balot unit) க்கு தலா இரண்டு மொபைல் போன்கள் நிறுவப்பட்டது. வாக்குச் சீட்டுகளுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்ற குழந்தைகள், விரலில் மை பூசி, வாக்காளர் பட்டியலில் கையெழுத்திட்டு ரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்களித்தனர். பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு பள்ளி தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.குழந்தைகள் தேர்தல் பிரசாரம் முதல் வெற்றிக் கொண்டாட்டம் வரையிலும் ஆரவாரம் செய்தனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் வருங்கால சந்ததியினருக்கு வாக்களிக்கும் முதல் பாடத்தை கற்பிப்பதே இதன் நோக்கம். அதிக வாக்குகள் பெற்று பள்ளித் தலைவராக 4 பி வகுப்பைச் சேர்ந்த சனுருத் எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே வகுப்பில் பயிலும் ஸ்மிருதி. எச் இரண்டாவது இடத்தைப் பெற்றார். பள்ளிக் காலைக் கூட்டத்தில் வெற்றியாளர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
- வீடியோவைப் பார்ப்போம் - பள்ளி பாராளுமன்ற தேர்தல் - 2022 , தேர்தல் முடிவுகள் -2022
பள்ளி விளையாட்டு (2022-2023)
பள்ளி அளவிலான விளையாட்டு போட்டி அக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. போட்டிக்கு முன், குழந்தைகளை நான்கு குழுக்களாக சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சை எனப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. ஜி வி ஜி எச் எஸ் எஸ் விளையாட்டு ஆசிரியர்கள் ஜிஜி, ஜெயக்குமார், ரமித் ஆகியோர் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தனர். ஆசிரியர் ஹிதாயத்துல்லாஹ்வின் மேற்பார்வையில் சரியாக காலை 9.00 மணிக்கு விளையாட்டுப் போட்டி ஆரம்பமானது. ஒவ்வொரு குழுக்களிலுள்ள குழந்தைகளும் தங்கள் குழுவின் நிறக் கொடியை ஏந்தி அணி வகுத்தனர். பி.டி.ஏ தலைவர் விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினார். எல்பி மினி பிரிவில் குழந்தைகளுக்கான 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், அகலம் தாண்டுதல், ரிலே முதலிய போட்டிகளும், எல் பி குழந்தைகள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ரிலே முதலிய போட்டிகளும் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சித்தூர் - தத்தமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் சிவக்குமார் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். துணை மாவட்ட விளையாட்டுப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு அடுத்த நாள் முதல் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
பள்ளி சின்னம் (லோகோ)
அக்டோபர் ஜி. வி. எல். பி. பள்ளியின் சின்னம் (லோகோ) வெளியிடப்பட்டது. பள்ளி விளையாட்டு தொடக்க விழாவில் இந்த விழா நடைபெற்றது. ஜி. வி. ஜி. எச். எஸ். வரைபடக்கலை ஆசிரியர் இராஜேந்திரன் சின்னத்தை வடிவமைத்தார். வெளியீட்டு விழாவில் ஆசிரியை சுனிதாவிடம் பிடிஏ தலைவர் பி.மோகன்தாஸ் சின்னத்தை வழங்கினார். சின்னம் வரைந்த ராஜேந்திரனை ஆசிரியர் சுனிதா பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். சின்னத்தை வரையும்போது ஏற்பட்ட உணர்வை குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டார் ராஜேந்திரன். லோகோவில் உள்ள இரண்டு கைகள் ஒவ்வொரு மாணவரின் சரியான வளர்ச்சிக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு இன்றியமையாதது என்றும் மேலே உள்ள கிரீடம் GVLP பள்ளிக்கான கிரீடமே என்றும் விவரித்தார். சித்தூர் பிபிசி உன்னிகிருஷ்ணன் என், கல்வி நிலைக்குழு தலைவர் சுமதி கே, எஸ்எம்சி தலைவர் கே.பி.ரஞ்சித், பி.டி.ஏ துணைத் தலைவர் சுகதன். ஜி, ஜி.வி ஜி.ஹெச்.எஸ்.எஸ் விளையாட்டு ஆசிரியர்கள் ஜிஜி., ஜெயகிருஷ்ணன், ரமித் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அட்சரமுற்றம்
தேசாபிமானி நடத்தும் பள்ளி அளவிலான அட்சரமுற்றம் வினாடி வினா போட்டி கேரளப்பிறவி தினமான நவம்பர் 1ஆம் தேதி நடத்தப்பட்டது. இப்போட்டியில் நான்காம் வகுப்பு மாணவி அனுஸ்ரீ B முதலிடம் பெற்றாள். மூன்று மற்றும் நான்காம் வகுப்புகளைச் சேர்ந்த சுமார் ஐம்பது குழந்தைகள் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியின் போது தேசாபிமானி நாளிதழின் அதிகாரிகள் பள்ளிக்கு வருகை தந்தனர். வெற்றி பெற்ற அனுஸ்ரீக்கு துணை மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பளிக்கப்பட்டது.
நவம்பர்
கேரளப் பிறவி
நவம்பர் 1ம் தேதி கேரளப் பிறவி தினம் கொண்டாடப்பட்டது. பள்ளிக் காலைக்கூட்டத்தில் கேரளப் பாடல், புராணக்கதை, குழுப் பாடல், பதிப்புகள், பேச்சுப்போட்டி போன்ற நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினர். ஆசிரியர் சுனிதா குழந்தைகளிடம் கேரளப்பிறவி பற்றி உரையாற்றினார். இந்நாளில் இரண்டாம் கட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையும் நடத்தப்பட்டது. போதைக்கு எதிரான முத்திரை வாக்கியங்கள் சொல்லிக்கொண்டு மனித சங்கிலி மற்றும் ஊர்வலத்தில் குழந்தைகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
பாடத்திட்ட சீர்திருத்தம் – பள்ளி அளவிலான பொது விவாதம்
ஜி.வி.எல் பி. எஸ் சித்தூரில் கேரள பாடத்திட்ட கட்டமைப்புகள் பற்றிய பள்ளி அளவிலான பொது விவாதம் 11-11-2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்வி நிலைக்குழு தலைவர் கே.சுமதி, பிடிஏ தலைவர் மோகன்தாஸ் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அனைவரையும் நான்கு குழுக்களாக்கி, கேரள பாடத்திட்டக் கட்டமைப்புகள் பற்றி விவாதிக்கவும், கருத்துக்கள் வழங்கவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அனைவரின் பங்களிப்பும் முழுமையாக இருந்தது. கலந்துரையாடலின் போது அனைவரிடமிருந்தும் பெறப்பட்ட புதிய ஆலோசனைகள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது.
குழந்தைகள் தினம்
முன் தொடக்கப்பள்ளி குழந்தைகளின் பிரார்த்தனையுடன் குழந்தைகள் தின நிகழ்ச்சிகள் துவங்கியது. காலைக் கூட்டத்திற்கு குழந்தைகள் நேருமாமாவின் வேடமணிந்து வந்தனர். ஸ்ரேயா தாஸின் குழந்தைகள் தின உரை நேரு மாமாவை நினைவுபடுத்தியது. முன் தொடக்கப்பள்ளி முதல் நான்காம் வகுப்பு வரையிலான குழந்தைகள் நேருவைப் பற்றிய பாடல்களைப் பாடினர். முன் தொடக்கப் பள்ளி ஆசிரியை அம்பிகா, குழந்தைகளுக்கு நேருவின் தொப்பி செய்ய கற்றுக் கொடுத்தார். குழந்தைகள் குழந்தைகள் தின பதிப்புகளையும் காட்சிப்படுத்தினர். ஜி வி ஜி எச் எஸ் எஸ் சித்தூரிலுள்ள என் எஸ் எஸ் மாணவர்கள் நமது பள்ளியில் குழந்தைகள் தின நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.
ஹரித வித்யாலயம் ப்ரோமோ படப்பிடிப்பு
அரசின் ரியாலிட்டி ஷோவான ஹரிதவித்யாலயம் போட்டிக்கு நமது சித்தூர் ஜிவிஎல்பி பள்ளி தேர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 22.11.2022 அன்று CDit நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேர் பள்ளியின் தனித்துவமான செயல்பாடுகளை படமாக்க பள்ளிக்கு வந்தனர். காலை 9 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. காலைக்கூட்டம் முதல் சுமார் இருபது நிகழ்ச்சிகளை மிக விரிவாக செயல்படுத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தயாராக இருந்தனர். பள்ளியின் பெளதீக சூழ்நிலையும், கற்றல் மேன்மைகளையும் தகவல் தொழில்நுட்ப யுக்திகளைப் பயன்படுத்தியுள்ள கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளும் படமெடுக்கப்பட்டன. கோவிட் காலத்தில் நடத்தப்பட்ட ஆன்லைன் செயல்பாடுகளின் காணொளிகளும் காண்பிக்கப்பட்டது . முன்னர் நடத்திய பள்ளித் தேர்தல், கல்விச் சுற்றுலா, அம்மாவுடன் போன்ற நிகழ்ச்சிகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டன. 4 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து வரலாற்றுச் நினைவுச்சின்னமான சித்தூர் துஞ்சன் மடத்திற்கு ஒரு கல்விப் பயணத்தை ஏற்பாடு செய்தனர். இயற்கை அழகையும், விளைநிலங்களையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விவசாயிகள் தினத்தன்று நடத்தப்பட்ட ஆய்வுப் பயணமும் மீண்டும் நடத்தப்பட்டது. துணை மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளிக்கு வருகை தந்து தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கினார். PTA தலைவர், SMC தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். KITEன் முதன்மைப் பயிற்சியாளர் பிரசாத் தேவையான வழிகாட்டுதலையும் உதவிகளையும் வழங்கி உடனிருந்தார். தற்காலிகமாக தலைமையாசிரியை பொறுப்பிலுள்ள சுனிதா படப்பிடிப்பு சிறப்பாக நிறைவடைந்ததற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
டிசம்பர்
RBSK Screening
குழந்தைகள் நலப் பாதுகாப்புக்காக, சித்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த இரண்டு ஜேபிஎச் அதிகாரிகள் பள்ளிக்குச் வருகை தந்து, முன் தொடக்க வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை உள்ள அனைத்து குழந்தைகளின் எடை மற்றும் உயரத்தைப் பதிவு செய்தனர். மேலும், குழந்தைகளுக்கு கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. RBSK Screening 15 டிசம்பர் 2022 அன்று தொடங்கி ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் தினக்கொண்டாட்டம்
மாற்றுத்திறனாளிகள் தினத்தின் பகுதியாக அந்த வகையைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளி மைய காலைக் கூட்டத்தில் இந்திரஜித்தின் ஆங்கில பேச்சு சிறப்பாக இருந்தது. குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, சிறந்த படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குழந்தையும் தங்கள் உள்ளங்கைகளைமையில் முக்கி சார்ட்டில் பதித்து தங்கள் வருகையை உறுதிப்படுத்தினர். நந்தனாவின் நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சதா காகிதப் பூக்கள் உருவாக்கி குழந்தைகளுக்கு வழங்கினாள். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கிரையோண்கள் மற்றும் ஓவியப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆசிரியை அம்பிகாவின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
- வீடியோவைப் பார்ப்போம் - மாற்றுத்திறனாளிகள் தினக்கொண்டாட்டம் - 2022
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
அரையாண்டுத் தேர்வுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் சேர்ந்து புல்க்கூடு உருவாக்கினர். கிறிஸ்துமஸ் தாத்தாவும் குழந்தைகளும் சேர்ந்து நடனமாடி, பாட்டுப் பாடி, பரிசுகளை வழங்கினர். குழந்தைகள் அனைவரும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியை லில்லியின் வகையாக குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது. இரண்டாம் வகுப்பு மாணவி ஹெலன்ஷைன் கொண்டுவந்த கேக்கை வெட்டி நண்பர்களுக்குக் கொடுத்தாள்.
- வீடியோவைப் பார்ப்போம் - கிறிஸ்துமஸ் - 2022
ஜனவரி
புத்தாண்டு கொண்டாட்டம்
புத்தாண்டை வரவேற்றுக் கொண்டு புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களும் மாணவர்களும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிசுகளையும் பரிமாறிக்கொண்டனர். கேக் வெட்டி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. குழந்தைகள் வாழ்த்து அட்டைகளைத் தயாரித்தனர்.
தேசிய குடற்புழு நீக்க தினம்
தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு ஜனவரி 17 அன்று சித்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அறிவுறுத்தலின் படி பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுக்குப் பின் அல்பாண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட்டன. வகுப்பு ஆசிரியர் தலைமையில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாத்திரை சாப்பிடும் முறையை விளக்கி, வகுப்பிலிருந்தே குழந்தைகளை சாப்பிட வைக்கப்பட்டது. பள்ளியிலுள்ள மாணவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.
கல்விச் சுற்றுலா
சித்தூர் ஜி.வி. எல். பி. பள்ளியிலிருந்து எர்ணாகுளத்திற்கு கல்விச் சுற்றுலா செல்லத் தீர்மானிக்கப்பட்டது. 13-1-2023 வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கிய பயணத்தில் 61 மாணவர்கள், 9 ஆசிரியர்கள் மற்றும் 5 PTA உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கொச்சி துறைமுகத்திற்கு வந்த குழந்தைகள் உப்பு நீர்தடாகம் மற்றும் சீன வலைகளைக் கண்டு வியந்தனர். அங்கிருந்து படகு வழியாக மட்டாஞ்சேரியை அடைந்தோம். வல்லார்பாடம் கொள்கலன் முனையம், கப்பல்கள், படகுகள், உயரமான கட்டிடங்கள் ஆகியவற்றை படகு சவாரியின் போது கண்டு மகிழ்ந்தனர். வரலாற்று நினைவுச்சின்னங்கள் நிறைந்த குறுகலான தெருக்களில் நடந்து யூத பள்ளியைஅடைந்தோம். சினகோக் என்ற யூதமதத் தலைவரின் வரலாறு மற்றும் செயல்பாடுகள் குறித்து வழிகாட்டி குழந்தைகளுக்கு விளக்கிக் கொடுத்தார். குழந்தைகள் சுவரில் உள்ள விளக்கங்களைப் படித்து புரிந்து கொண்டனர். மட்டாஞ்சேரியில் இருந்து மீண்டும் படகில் ஏறி கொச்சி திரும்பப்பட்டது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்து லுலு மால் அடைந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, குழந்தைகள் அங்குள்ள சவாரிகளில் விளையாடி மகிழ்ந்தனர். அங்கிருந்து கிடைத்த ரப்பர் மற்றும் கட்டர் அடங்கிய பரிசுடன் மகிழ்ச்சியாக நிறைவுபெற்றது. மாலை 6.30 மணிக்கு அங்கிருந்து திரும்பிவிட்டோம். இரவு 11:30 மணியளவில் சித்தூரை அடைந்தோம். குழந்தைகளை ஆவலோடு எதிர்பார்த்திருந்த பெற்றோருடன் அவரவர் வீடு திரும்பினர்.
- வீடியோவைப் பார்ப்போம் - கல்விச் சுற்றுலா - 2023
குடியரசு தினம்
74 வது குடியரசு தின விழாவில் பிடிஏ தலைவர் பி மோகன்தாஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். SMC தலைவர் ரஞ்சித், தலைமையாசிரியை பொறுப்பாளர் சுனிதா, PTA துணைத் தலைவர் ஜி சுகதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். குழந்தைகளின் தேசபக்தி பாடல், குடியரசு தின உரை, பதிப்பு வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகளுக்குப் பின் காணொலி காட்சிப்படுத்தப்பட்டது. நமது அரசியலமைப்புச் சட்டத்தை சிறப்பாக விளக்கியதற்காக ஒவ்வொரு வகுப்பு குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தியாகிகள் தினம்
ஜனவரி 30ஆம் தேதி தியாகிகள் தினத்தன்று காலைக் கூட்டத்தில் காந்திஜியைப் பற்றிய உரைகள் வாழ்க்கை வரலாறு, போன்றவற்றை குழந்தைகள் கூறினர். குழந்தைகள் காந்திஜியின் படங்களை சார்ட்டுகளில் வரைந்து காலைக் கூட்டத்தில் காண்பித்தனர். பள்ளியில் காந்திஜியின் வாழ்க்கை வரலாறு காணொளி காட்சிப்படுத்தப்பட்டது. பள்ளி நூலகத்தின் ஒரு பகுதியாக, தியாகிகள் தினத்தை முன்னிட்டு காந்தியடிகளின் புத்தகக் கண்காட்சி வைக்கப்பட்டு அவற்றை படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. குழந்தைகள் தயாரித்து வந்த காந்திஜியின் மகத்தான வாசகங்கள் அடங்கிய பதிப்புகள் காட்சிப்படுத்தப்ப்பட்டன.
- வீடியோவைப் பார்ப்போம் - உலக தியாகிகள் தினம் - 2023
பிப்ரவரி
ஹாப்பி ட்ரிங் (HAPPY DRINK)
பிப்ரவரி 24 அன்று ஹாப்பி ட்ரிங் என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பி.டி.ஏ. தலைவர் பி.மோகன்தாஸ் தலைமை வகித்த இந்நிகழ்ச்சியை கல்வி நிலைக்குழு தலைவர் சுமதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு என்எம்ஓ ரெஜின், பிபிசி உண்ணிகிருஷ்ணன், பிஆர்சி பயிற்சியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். குழந்தைகள் தயாரித்த பல்வேறு வகையான பானங்களின் கண்காட்சி வைக்கப்பட்டது. பெற்றோர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளியின் சார்பாக தர்பூசணி பழச்சாறு வழங்கப்பட்டது. ஆசிரியர் செயலாளர் சுப்ரபா நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
கால்பந்து தொடக்க விழா
24.02.2023 அன்று, வண் மில்லியன் கோல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பாலக்காடு விளையாட்டு கவுன்சிலின் ஒத்துழைப்புடன் பள்ளி அளவில் கால்பந்து பயிற்சி தொடங்கப்பட்டது. குழந்தைகளில் கால்பந்து ஆர்வத்தை வளர்க்க விளையாட்டு கவுன்சில் பள்ளிக்கு இரண்டு கால்பந்துகளை வழங்கியது. பள்ளி பி.டி.ஏ தலைவர் பி.மோகன்தாஸ் கால்பந்து பயிற்சியை தொடங்கி வைத்தார். ஆசிரியர் ஹிதாயத்துல்லா தலைமையில் மூன்று மற்றும் நான்காம் வகுப்புக் குழந்தைகளுக்கு கால்பந்து பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டது.
டூத் ஃபேரி டே (TOOTH FAIRY DAY)
பிப்ரவரி 28ஆம் தேதி இந்திய பல் மருத்துவ சங்கத்தின் சார்பாக லயன்ஸ் கிளப் தலைமையில் குழந்தைகளுக்கு இலவச பல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. பி.டி.ஏ தலைவர் பி.மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியை லயன்ஸ் கிளப் தலைவர் பத்மஜா பிரதீப் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் மனோஜ் கே மேனன் மற்றும் பிரதீப் மேனன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பல் பராமரிப்பு குறித்து டாக்டர் சுபோத், டாக்டர் பிரணிதா பிரபாகர், டாக்டர் பிரின்ஸ் ஜேம்ஸ் ஆகியோர் வகுப்பு எடுத்தனர். நிகழ்ச்சிக்கு முன் தொடக்க ஆசிரியர் அம்பிகாதேவி நன்றியுரை கூறினார். டாக்டர் சுபோத், டாக்டர் பிரணிதா பிரபாகர், டாக்டர் பிரின்ஸ் ஜேம்ஸ், டாக்டர் ஜோம்சி, டாக்டர் பிரவீணா, டாக்டர் பத்மபிரியா, டாக்டர் மைவிழி, டாக்டர் மிதுன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அனைத்து குழந்தைகளின் பற்களையும் பரிசோதித்து சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு தேவையான அறிவுரைகளையும் வழங்கினர். முதல் பல் இழந்த அனுபவம் என்னும் தலைப்பில் கதை எழுதும் போட்டியும் நடத்தப்பட்டது. சிறந்த இரண்டு படைப்புகளுக்கு பரிசுகளும் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
மார்ச்
ஆண்டுவிழா கொண்டாட்டம் 2022 - 23
சித்தூர் ஜிவிஎல்பி பள்ளியின் ஆண்டு விழா சித்தூர்-தத்தமங்கலம் பேரூராட்சி தலைவி கே.எல். கவிதா துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பிரபல எழுத்தாளர் வைசாகன் கலந்து கொண்டார். PTA தலைவர் பி. மோகன்தாஸ் தலைமை தாங்கிய விழாவிற்கு தலைமை பொறுப்பாளர் சுனிதா வரவேற்புரை வழங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் சிவக்குமார் பரிசுகள் வழங்கினார். நகராட்சி கவுன்சிலர்கள் கே.சுமதி, ஸ்ரீதேவி ரகுநாத், எஸ்எம்சி தலைவர் ரஞ்சித் கேபி, பிடிஏ துணைத் தலைவர் சுகதன் ஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 2021-22ஆம் கல்வியாண்டின் எல்எஸ்எஸ் வெற்றியாளர்களுக்கும் துணை மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. ஆசிரியர் செயலாளர் சுப்ரபா நன்றிரை கூறினார். 2022-23 ஆம் கல்வியாண்டின் பள்ளிச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து PSITC ராசியபானு தயாரித்த காணொளி காட்சிப்படுத்தப்பட்டது. பின்னர் குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. மாலை 5 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி இரவு 9:45 மணிக்கு நிறைவடைந்தது.
கற்றல் திருவிழா
பொதுக் கல்விப் பாதுகாப்பு வேள்வியின் பாகமாக செயல்படுத்தப்பட்ட கற்றல் திருவிழா 21/03/2023 செவ்வாய்க் கிழமை காலை 10 மணிக்கு சித்தூர் துஞ்சன் நினைவு நூலக வளாகத்தில் நடத்தப்பட்டது. தலைமையாசிரியை டி.ஜெயலட்சுமி வரவேற்புரை வழங்கிய இந்நிகழ்ச்சிக்கு கல்வி நிலைக்குழுத் தலைவர் கே. சுமதி தலைமை வகித்தார். சித்தூர் தத்தமங்கலம் பேரூராட்சி தலைவி கே.எல்.கவிதா விழாவினைத் துவக்கி வைத்தார். SMC தலைவர் கே.பி.ரஞ்சித், PTA துணைத் தலைவர் ஜி. சுகதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆசிரியர் எஸ். சுனிதா நன்றியுரை கூறினார். குழந்தைகளின் கல்வித் திறனை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த கற்றல் திருவிழா நடத்தப்பட்டது. 1 முதல் 4ம் வகுப்பு வரை உள்ள அனைத்து குழந்தைகளும் கற்றல் திருவிழாவில் பங்கேற்றனர். சைகைப் பாடல் மலையாளம் மற்றும் ஆங்கிலம், மலையாள கவிதை, தமிழ் கவிதை, ஆங்கில கவிதை, நாட்டுப்புற பாடல், நாடகம், பூதப்பாட்டு, நடனம், சோதனை, திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற நிகழ்ச்சிகளை குழந்தைகள் நிகழ்த்தினர். கற்றல் திருவிழாவில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். பின்னர் அனைத்து குழந்தைகளுக்கும் எலுமிச்சை பானம் வழங்கப்பட்டது.
லிட்டில் சாம்பியன்ஸ், விளையாட்டுத் திருவிழா - 2023
பி.ஆர்.சி.யின் பரிந்துரையின்படி, முன் தொடக்கக் குழந்தைகளுக்கு லிட்டில் சாம்பியன்ஸ் விளையாட்டு விழா நடத்த, ஆசிரியர் கூட்டத்தில் விளையாட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. முன்னதாக குழந்தைகளுக்கான விளையாட்டுகள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சி 22.3.2023 புதன்கிழமை காலை சரியாக 10.15 மணிக்கு தொடங்கியது. இறைவணக்கத்திற்குப் பின் தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி.டி அனைவரையும் வரவேற்றார். ஆசிரியை சுனிதா தலைமை வகித்த இவ்விழாவினை சித்தூர் தத்தமங்கலம் பேரூராட்சி கல்வி நிலைக்குழு தலைவர் சுமதி. கெ துவக்கி வைத்தார். முன் தொடக்க ஆசிரியை அம்பிகாதேவி திட்டத்தை விளக்கினார். பெற்றோர்களான கே.கே.நாராயணன் மற்றும் அனு. A தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். பின்னர் குழந்தைகளுக்கு சுமதி. கெ பரிசுகளை வழங்கினார். செய்தவர் கே. நிகழ்ச்சிக்கு முன் தொடக்க ஆசிரியை பத்மபிரியா .ஜெ நன்றியுரை கூறினார். உருளைக்கிழங்கு விளையாட்டு, பந்து விளையாட்டு, முத்துக்கள் சேகரிப்பது, பாட்டிலுக்குள் காகிதத்தை ஊதுவது, மெழுகு உருவம் வரைவது போன்ற விளையாட்டுகள் விளையாடியதின் வீடியோவும் காண்பிக்கப்பட்டது.