ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /நாட்டுப்புற கலைக்களஞ்சியம்/நாட்டுப்புற விளையாட்டுக்கள்
வட்டார விளையாட்டுக்கள்
கொட்டியும்புள்ளும்
பாலக்காடு மாவட்டத்தின் வட்டாரங்களில் பிரபலமான நாட்டுப்புற விளையாட்டாகும் கொட்டியும் புள்ளும். முக்கியமாக சித்தூரின் வட்டாரங்களில் பிரபலமாகக் காணப்படுகிறது. இது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து விளையாடும் விளையாட்டாகும். இவ்விளையாட்டில் பயன்படுத்தும் புள்ளு சுமார் 15 செ.மீ நீளமுள்ள மரத்துண்டாகும். அதைத் தட்டி எறிய பயன்படுத்தும் மரத்துண்டே கொட்டியாகும். இவ்விளையாட்டு கிரிக்கெட் விளையாட்டோடு தொடர்பு கொண்டுள்ளது. விளையாடுபவர் நிற்கும் இடத்தில் ஒரு சிறிய குழி தோண்டுகிறார். குழிக்கு அருகில் இருந்து, முகத்திற்கு நேராக கையில் புள்ளை வைத்து அடிக்கப்படுகிறது. சுற்றி நிற்கும் ஒருவர் புள்ளை பிடித்தால், அடித்தவர் தோற்றிடுவார். அல்லது புள்ளு விழுந்த இடத்திலிருந்து கொட்டி வைத்து அளக்கலாம். ஐந்து முறை அளந்தால், உங்களுக்கு ஒரு புள்ளி கிடைக்கும். பிறகு அளந்த பகுதியிலிருந்து மீண்டும் அடிக்க வேண்டும். குழிக்கு அருகில் புள்ளு விழுந்தால், தோற்றுவிடுவார். இப்படி பல வழிகளில் விளையாடலாம். இந்த நாட்டுப்புற விளையாட்டு ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு பெயர்களில் அறியப்படுகிறது.
எறி பந்து
இந்த விளையாட்டு பொதுவாக லகோரி என்றும் அழைக்கப்படுகிறது. எறி பந்து இரண்டு குழுக்களாகப் பிரிந்து விளையாடப்படுகிறது. கிராமப்புறங்களில் எறி பந்து விளையாடுவதில் குழுக்கள் தீவிரமாக இருப்பார்கள். இந்த விளையாட்டில் பதினொரு சில்லுகள் (துண்டுகள்) மற்றும் வீசினால் காயமடையாத பந்து பயன்படுத்தப்படுகிறது. பதினொரு சில்லுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்படுகிறார். பின்னர் விளையாடும் அணியில் ஒருவர் பந்தைப் பிடித்து, அடுக்கப்பட்ட சில்லுகளின் மீது பந்தை தூரத்திலிருந்து வீச வேண்டும். ஒருவர் மூன்று முறை எறியலாம். தவறினால் அணியிலுள்ள அடுத்தவருக்கு வாய்ப்பு கிடைக்கும். விழுந்த சில்லுகளை குழு உறுப்பினர்கள் வரிசையில் அடுக்க வேண்டும். இதற்கிடையில், எதிரணியினர் பந்தை எடுத்து விளையாடும் அணியினர் மீது வீசுகின்றனர். விளையாடும் குழு உறுப்பினர்கள் அனைத்து சில்லுகளையும் வரிசைப்படுத்தி லகோரி என்று சொல்ல வேண்டும். இவ்வாறு விளையாட்டைத் தொடரலாம்.
கண்ணாமூச்சி
குழந்தைகள் மிகவும் விரும்பி ஆடும் ஆட்டம் இது. வயதுவரம்பின்றி அனைவரும் ஆடும் ஆட்டம் தான் கண்ணாமூச்சி. குழந்தைகள் பங்கேற்கும் இவ்விளையாட்டில் ஒருவரின் கண்களை கருப்பு துணியால் இறுகக்கட்டி சுற்றி விடுவர். அவர் சுற்றிலும் ஓடுபவர்களை தொட முயற்சிப்பார். தொட்ட நபர் கண்களை கட்டுவார். இவ்வாறாக விளையாட்டு தொடரும்.
கோலிகுண்டு ஆட்டம்
சித்தூரிலும் சுற்று வட்டாரங்களிலும் ஆடும் ஒரு ஆட்டமாகும் கோலி குண்டு அடித்தல்.சிறுவர்கள் விரும்பி ஆடும் ஆட்டம் இது. இதற்கென பத்து சிறிய குழிகள் உண்டாக்கப்படுகிறது. முதலில் ஆடுபவர் முதல் குழியில் கை கட்டை விரலை ஊன்றி விரலில் கோலி வைத்து அடித்து மூன்றாவது குழியில் வீழ்த்த வேண்டும். சரியாக வீழ்ந்தால் அவரே மறுபடியும் ஆடலாம். குழியில் வீழாமல் தரையில் கோலி விழுந்தால் பக்கத்தில் கிடக்கும் மற்றவர்களின் கோலிகளை அடித்து தெறிக்க வைக்கலாம். இவ்வாறாக பத்து குழிகளிலும் கோலி வீழ்த்தும் நபர் வெற்றி பெறுவர். இவ்வாறாக விளையாட்டு தொடரும். இன்றும் இப்பகுதி சிறுவர்கள் இதை விரும்பி ஆடுவர்.
கரை, குளம்
ஒரு மிகப் பெரிய வட்டம் வரைக்கப்படும். வட்டத்தின் உப்பகுதி குளமாகவும், வெளிப் பகுதி கரையாகவும் கணிக்கப்படுகிறது. வட்டத்திற்கு சுற்றிலுமாக வெளிப்புறத்தில்நிறைய சிறுவர் சிறுமியர் நிற்க வேண்டும். நடுவே உள்ள தலைவர் ஆட்டம் தொடங்கும் போது குளம் என்று சொல்லும் போது உள்ளே குதிப்பர். கரை என்று சொல்லும் போது வெளியே குதிப்பர். இவ்வாறாக மாறி மாறி கூறும் தருவாயில் தவறுதலாக குதிப்பவர் ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். கடைசி வரை தவறின்றி செய்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். இன்றும் சித்தூரின்நாட்டுப்புற விளையாட்டாக தொடர்ந்து விருப்பத்துடன் ஆடப்பட்டு வருகிறது.
குலைகுலையாய் முந்திரிங்காய்
பழங்காலத்திலிருந்தே குலைகுலையாய் முந்திரிங்காய் மிகவும் பிரபலமான நாட்டுப்புற விளையாட்டுகளில் ஒன்றாகும். இந்த விளையாட்டு சித்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள குழந்தைகளிடையே மிகவும் பிரபலமானது. ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்றாக விளையாடுகிறார்கள். எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை. விளையாட்டில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குழந்தைகள் வட்டத்தில் அமர்கிறார்கள். ஒருவருக்கொருவர் முகத்தோடு முகம் பார்த்து வட்டத்தில் உட்காருகின்றனர். ஒருநபர் கையில் ஒரு சிறிய துணியை வைத்துக் குழந்தைகளுக்குச் சுற்றிலும் நடக்க வேண்டும். விளையாட்டு தொடரும் போது, குழந்தைகள் அனைவரும், குலைகுலையாய் முந்திரிங்காய் நரியும் நரியும் சுற்றி வா என்று பாடுவார்கள். இதன்படி, கையில் துணியைப் பிடித்தபடி குழந்தைகளை சுற்றி வந்து தனக்குப் பிடித்த ஒருவரின் பிறகில் துணியைப் போடவேண்டும். துணி யாருக்குப் பின்னால் இருக்கிறதோ அவர் அதை எடுத்துக்கொண்டு அந்தநபரைத் துரத்தி அடிக்க வேண்டும். ரொம்ப தூரம் ஓடினால், காலி இடத்தில் உட்காரலாம். இவ்வாறு விளையாட்டைத் தொடரலாம்.
கல் விளையாட்டு
கல் விளையாட்டு என்பது கிராமப்புறங்களில் பிரபலமான விளையாட்டாகும். இவ்விளையாட்டைக் கொத்தங்கல் என்றும் அழைப்பர். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் விளையாடக்கூடிய விளையாட்டாகும். இந்த விளையாட்டிற்கு மூன்று, ஐந்து அல்லது ஏழு கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. விளையாட்டு ஒன்று, இரண்டு மற்றும் மூன்று நிலைகளில் விளையாடப்படுகிறது. குழந்தைகள் வட்டத்தில் அமர்ந்து விளையாடுகிறார்கள். அனைத்து நிலைகளையும் வெற்றிகரமாக முடிக்கும் குழந்தை வெற்றியாளராக அறிவிக்கப்படுகின்றனர்.