ജി.വി.എൽ.പി.എസ് ചിറ്റൂർ/தமிழ் /குழுக்கள்/ நூலகம்
நூலகம்
குழந்தைகளிலும், பெரியவர்களிலும் வாசிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்கும், அதன் மூலம் அவர்களது படைப்புத்திறனை தட்டி எழுப்புவதற்கும் பெரிதும் உதவுகிறது நூலகம். வாசிப்பின் வாயிலாக ஏராளமான அறிவுகள் நமக்குக் கிடைக்கிறது. பேரறிஞர்களின் வாழ்க்கை வரலாறு முதல் மனிதன் அன்றாட வாழ்வில் அறிந்துகொள்ளவேண்டிய அத்தனையும் வாசிப்பின் வாயிலாகக் கிடைக்கிறது. வாசிப்பின் மூலம் பெறப்படும் அறிவிற்கு நிகராக வேறொரு அறிவும் இல்லை. வேறு வழியில் கிடைக்கின்ற அறிவைவிட முன்னிலையில் இருப்பது வாசிப்பின் மூலம் கிடைக்கும் அறிவே ஆகும். உலகத்தரமான சிறந்த நூற்களைப் படிக்க வாய்ப்பு கிடைக்கின்றது. வாசிப்பின் மூலம் கிடைக்கும் அறிவுகள் விலைமதிப்புடையவையே!
நோக்கம்
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு என்னும் திருக்குறளை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். வாசிப்பு ஒரு ஆனந்தமான செயலாகும். சில புத்தகங்களை வாசிக்கும் போது அதிலுள்ள சிறந்த கதாபாத்திரங்களைப் போல நாமும் மாற முயற்சிக்கின்றோம். அதன்மூலம் வாசிப்பினால் எது கிடைக்க வேண்டுமோ அது நமக்கு கிடைக்கிறது. சிறு பருவத்திலேயே குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதற்கும், அறிவுக் கண்ணைத் திறப்பதற்கும் எங்கள் பள்ளியில் ஒரு நூலகம் அமைத்துள்ளோம்.
செயல்பாடுகள்
ஒவ்வொரு வருடமும் வாசிப்பு தினத்திலிருந்து நூலகம் செயல்படத் துவங்கும். வாசிப்பு தினம் முதல் நூலகத்திலிருந்து அனைத்து குழந்தைகளும் அவரவரது விருப்பத்திற்கேற்ப புத்தகங்களை எடுத்து வாசிப்பர். மேலும் வாசிப்புப் குறிப்பு எழுதுவர். ஒவ்வொரு நாளும் காலைக்கூட்டத்தில் குழந்தைகள் எழுதி வந்த வாசிப்புக் குறிப்பை வாசிக்கவும் செய்வர். இதனை ஆசிரியர்கள் ஊக்குவிப்பதுண்டு. இவ்வாறு ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வாசிப்பின் மீதுள்ள நாட் டத்தை அதிகரிக்க முயற்சி செய்கின்றனர். வாசிப்பின் மூலமும், தினக்கொண்டாட்டங்களின் மூலமும் பெருந்தலைவர்களைப் பற்றிக் கிடைக்கின்ற அறிவுகளை குழந்தைகள் தம் எதிர்கால வாழ்க்கையில் பயன்படுத்துவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
பலவித புத்தகங்கள்
உலகத் தரமான புத்தகங்களைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ் புத்தகங்கள் மட்டுமல்லாமல் மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலுள்ள புத்தகங்களும் எங்களது நூலகத்தில் வைத்துள்ளோம். கதைகள், சிறு கதைகள், நாட்டுப்புற பாடல்கள், பழமொழிகள், வாழ்க்கை வரலாறுகள், கட்டுரைகள், பயணக்குறிப்புகள், கவிதைகள், நாவல்கள், நாடகங்கள், பொன்மொழிகள் போன்ற அனைத்து இலக்கியத் துறைகளிலுமுள்ள புத்தகங்கள் நம் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. 1230 மலையாளபுத்தகங்களும், 406 தமிழ் புத்தகங்களும், 97 ஆங்கில புத்தகங்களும் நம் நூலகத்தில் உள்ளன.
வகுப்பு நூலகம்
பள்ளி நூலகம் மட்டுமல்ல, வகுப்பு நூலகங்களும் நாங்கள் அமைத்துள்ளோம். ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு நூலகம் குழந்தைகளின் திறனுக்கேற்ப உருவாக்கியுள்ளோம். குழந்தைகள் அவர்களது பிறந்த நாள் பரிசாக புத்தகங்களை நூலகத்திற்கு வழங்குகின்றனர். இவ்வாறு குழந்தைகள் தருகின்ற புத்தகங்கள் வகுப்பு நூலகத்தில் மிகமுக்கிய இடம்பிடிக்கின்றன. வகுப்பு நூலக பதிவேடு எழுதி பாதுகாப்பது அந்தந்த வகுப்பு குழந்தைகளே. வாசிப்பின் மூலம் அறிவியல், தொழில்நுட்பத்தின் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியாகத் திகழ்ந்து, முத்திரை பதிக்கக்கூடிய நல்ல எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்க முயற்சித்து வருகின்றோம். குழந்தைகளுடையவும், ஆசிரியர்களுடையவும், பெற்றோர்களுடையவும் இந்த ஒற்றுமையான முயற்சி வெற்றி பெறும் என நம்புகின்றோம்.